அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 2 -

கள்ளர் சரித்திரம்

இரண்டாம் அதிகாரம்

நாக பல்லவ சோழரும், கள்ளரும்


னி, கள்ளர் குலத்தவர் முற்கூறிப் போந்த மக்களுள் எவ்வினத்தைச் சேர்ந்தவர் என்றும், இன்னவர் நிலைமை எத்தன்மைய தென்றும் பார்ப்போம், சங்கநாளிலே திருவேங்கடத்தை ஆண்ட புல்லி என்னும் அரசன் கள்வர் கோமான் என்று கூறப் படுகின்றான். அவன் வீரத்தினூம், வள்ளன்மையினும் மிக மேம் பட்டவனென்று தெரிகிறது. பொய்யடிமையில்லாத புலவராகிய சங்கத்துச் சான்றேருள், கபில பரண நக்கிர ரோ ஒப்பப் பெருமை வாய்ந்த கல்லாடனாரும் , மாமூலனாரும் பல பாட்டுக்களால் அவனைப் பாடியிருப்ப தொன்றே அவனது பெருமையை நன்கு புலப்படுத்தா நிற்கும்.


அகநானூற்றில்,

கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்'

மழபுலம் வணக்கிய மாவண் புல்லி

விழவுடை வழுசசீர வேங்கடம்'

'புடையலங் கழற்காற் புல்லி குனறத்து'

'புல்லி நன்னாட் டும்பர்'

'பொய்யாநல்லிசை மாவண் புல்லி'

'நெடுமொழிப் புல்லி'


என மாமூலருமம்,


'புல்லி-வியன்றலை நன்னாட்டு வேங்கடம்'

'மாஅலயானை மறப்போர்ப் புல்லி

காம்புடை நெடுவரை வேங்கடம்'


எனக் கல்லாடனாரும் பாடியிருக்கின்றனர்


நற்றிணையில்,

'கடூமான் புல்லிய காடிறந்தோரே'


ன்றார் மாமூலனார் . அதனுரை,

'கடிய குதிரையையுடைய கள்வர் கோமான் புல்லியென்பவனுடைய வேங்கட மலையிலுள்ள காட்டின்கண்ணே சென்ற நமது காதலர்' -- என்பது.


புறநானூற்றிலே, கல்லாடனார், அம்பர்கிழான் அருவந்தையை வாழ்த்துமிடத்தும்,


'காவிரி கனையுந் தாழ்நீர்ப் படப்பை

நெல்விழளை கழனி யம்பர் கிழவோன்

நல்லருவந்தை வாழியர் புல்லிய

வேங்கட விறல்வரைப் பட்ட

ஓங்கல் வானத் துறையினும் பலவெ'


எனப் புல்லியது வேங்கடத்தைச் சிறப்பித்தலினாலே அவர் தம் உள்ளத்தை அத்தோன்றலுக்கே ஒப்பித்துவிட்டனலென விளங்குகிறது.


அகநானூற்றிலே,

'கள்வர் பெருமகன் -- தென்னன்'

என, மதுரைக் கணக்காயனார் ஒரு பாண்டியனைக குறித்துள்ளார்.


இவ்வாற்றால், சங்கநாளிலே அதாவது ஏறக்குறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின் முன்பு 'கள்வர்' என்ற பெயர் வழக்கு இருந்ததென்பதும், கள்ளவர் குலத்தவர் அரசராயிருந்தனரென்பதும் வெளியாகின்றன.


அகநானூற்றில்'

'வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்

இனமழை தவழு மேற்றரு நெரடுங்கோட்

டோங்கு வெள்ளருவி வேங்கடத் தும்பர்'

நாக பல்லவ சோழரும், கள்ளரும்

என்று வெங்கட மலையானது தொண்டையருடையதாகக் கூறப் படுதலின, தொண்டையர், கள்வர் என்ற பெயர்கள் ஒரு வகுப்பினர்க்கு உரியன என்பதும். பண்டை நாளிலே வேங்கடமும், அதைச் சார்ந்த நாடும் அன்னவரது ஆட்சியிலிருந்தன வென்பம் போதரும். இப்பொழுதும் தொண்டைமான் என்ற பெயர் கள்ளர்க்கே வழங்குவதும், தொண்டைமான் என்னும் பட்டமுடைய மாட்சிமிக்க புதுக்கோட்டை அரசர் கள்ளர் வகுப்பினராயிருப்பதும் இங்கு அறியற்பாலன. வேங்கடமலையிலிருந்து ஆதனுங்கன் என்ற வள்ளலும் இவ் வகுப்பினனேயாவன். இவனைக் கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் பாடிய பாட்டுக்கள் புறநானூற்றில் உள்ளன. அவர் பாடிய,


'எந்தை வாழி யாதனுங்க

என்னெஞ்சந் திறப்போர் நிற்காணகுவரே

நின்னியான் மறப்பின் மறக்குங் காலை

என்னுயிர் யாக்கையிற்பிரியும் பொழுதும்

எனியான் மறப்பின் மறக்கவென்'


என்னும் அருமைப்பாட்டை நோக்குங்கால் யாவர் நெஞ்சுதான் உருகாதிருக்கும்? சங்கநாளில் விளங்கிய அரசருள்ளும் வள்ளியோரு்ளும் பலர் இவ் வகுப்பினரர்கல் வேண்டும் எனினும் இவர்கட்குச் சிறப்பானுரிய பெயரானும் இடத்தானம் வெளிப்படத் தோன்றினோரையே இங்கே குறிப்பிடலாயிற்று. புல்லியைப்பற்றி எடுத்துக்காட்டிய ஒன்பது மேற்கோள்களில் ஒன்றிலெ தான் 'கள்வர் கோமான்' என்ற பெயர்வந்துளது. அஃது இல்லையேல் அவனை இவ்வகுப்பினன் என அறிநதுகொள்வது எங்ஙனம்? இவ்வாற்றால் அறிந்துகொள்ளலாகாத பலர் இருந்திழலர் என்று வங்ஙனம் கூறமுடியும்?


இனி, இவர்களில் 'முத்தரையர்' என்னும் பெயருடையராய் வள்ளன்மை மிக்க ஓர் குழுவனர் பழைய நாளில் இருந்திருக்கின்றனர். நாலடியாரில் இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அவை,

'பெருமுத்தரையர் பெரிதுவந்தீயும்

கருனைச் சோறார்வர்' (200)

'நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத்தரையரே

செரவரைச் சென்றிரவாதார்' (296)


என்பன இவற்றிலிருந்து, இவர்கள்யாவர்க்கும் நறிய உணவளித்துப் போற்றிவந்தவரென்பதும், எல்லையிகந்த செல்வமுடையா ரென்பதும் விளங்கா நிற்கும், விஜயாலயன் என்னும் சோழமன்னன் கி.பி. 849ல் தஞ்சையைப் பிடித்துச் சோழராட்சியை நிலை நிறுத்துமுன், தஞ்சையில் மன்னரா யிருந்தோர் முத்தரையரே என்பர் சரித்திரக்காரர். இப்பொழுது 'முத்திரியர்' என வழங்கும் வேறு வகுப்பினர் இருப்பினும், முன் குறிக்கப்பட்டவர் கள்ளர் வகுப்பினரே என்பதற்கு ஆதரவுகள் உள்ளன. செந்தலைக் கல்வெட்டில் இவர்களில் ஒருவனைக் குறித்து,

'வல்லக்கோன், தஞ்சைக்கோன், கள்வர் கள்வன், பெரும்பிடுகு முத்தரையன்' என்று கூறியிருக்கிறது. இக்கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட தூண்கள், முற்குறித்த பட்டங்களையுடைய இரண்டாவது பெரும்பிடுகு முத்தரையனால் திருக்காட்டுப்பள்ளியின் மேல்புறமுள்ள நியமம் என்னும் ஊரிலே கட்டப்பட்ட பிடாரி கோயிலிலிருந்து இடித்துக் கொண்டு வரப்பெற்றவை. கல்வெட்டில் குறித்திருப்பதற்கேற்ப, வல்லத்தரசர், தஞ்சைராயர், செம்பிய முத்தரையர் என்னும் பட்டமுள்ள கள்ளர் குலத்தவர் தஞ்சையிலும், தஞ்சையைச் சூழ்ந்த இடங்களிலும் இப்பொழுதும் இருக்கின்றனர். கல்வெட்டுத் தோன்றி நியமம் என்னும் ஊரிலும், அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் இருப்போரும் கள்ளர் வகுப்பினரே. அன்றியும் கல்வெட்டுல், 'கள்வர்' என்ற பெயர் வெளிபடக் கூறியிருப்பதே சான்றாகும். திருவாளர் மு. இராகவையங்கார் அவர்கள் முத்தரையரைப் பற்றிக் கூறியிருப்பதும் இங்கு அறியற் பாலது. அது,

' நாலடியாரில் முத்தரையரைப் பற்றி இரண்டிடங்களில் குறிப்பிக்கப்ட்டுள்ளது. இன்னோர், தென்னாட்டில் 7,8-ம் நூற்றாண்டுகளில் பிரபலம் பெற்ற கள்வர் மரபினராவர். இவ்வமிசத்தவர் சங்க காலத்திழலேயே சிற்றரசராக விளங்கியவரென்பது, கள்வர் கோமான் புல்லி, கள்வர் கோமான் தென்னவர் என்னும்பெயர்கள் அகநானூற்றுப் பயில்வதனால் அறியப்படும்' என்பது. (செந்தமிழ் தொகுதி 13, பக்கம் - 273)


இம் முத்தரையரைக் குறித்துப் பின்னரும் சிறிது ஆராயப்படும்.

கள்ளர் சரித்திரம் - 1 -

சென்ற நூற்றி இருபத்திரண்டாண்டுகளுக்குமுன் தஞ்சை நடுக்காவிரியில் முத்துசாமி நாட்டாருக்கும் தைலம்மாளுக்கும் நன்மகளாய் அவதரித்தார் பாவால் சுவை வளர்க்கும் பைந்தமிழைக் கற்றுயர்ந்த நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் ஐயா அவர்கள் .

12-04-1884ல் பிறந்தார்கள் அவர்கள் எழுதிய கள்ளர் சரித்திரம் என்னும் ஆய்வுக்கட்டுரையை நான் ஈங்குரைக்க விளைகிறேன்.

கள்ளர் சரித்திரம் என அய்யா அவர்கள் எழுதினாலும் மற்ற இனத்தவரை தாழ்த்தாமலும் , தான் சொல்ல வந்த இனத்தை மிகைபடுத்தாமலும் உள்ளதை உள்ளபடியே மற்றைய ஆராய்சியாளர்கள் சொல்லியதை மேற்கோள் காட்டி இக்கால மக்களுக்கு அக்காலத்து தெரியாத பல செய்திகளை விளக்கமாக அவரது இயல்பான உரையிலே கூறியவற்றை நான் சில வற்றை மட்டும் மாற்றி எழுதியுள்ளேன்.

நாட்டார் ஐயா அவர்கள் மற்ற பட்டபெயர்களை செவ்வனே செப்பினாலும் நாட்டாரைப் பற்றி அதிகம் சொல்லாதது அவரது தன்னடக்கத்தைக் காட்டுகிறது.

அவரது ஆய்வுக்கு ஆதாரமாக உறையூர் புராணம், பழைய திருவானைக்காவப் புராணம், செவ்வந்திப் பராணம், கணசபைப்பிள்ளையவர்களின் ஆய்வறிக்கை, சர் வால்டர் எலியட், வின்சன் ஏ. ஸ்மித் மற்றும் சிலவற்றைக் கைக்கொண்டார்.

எதையுமே தான் இட்டுக்கட்டி கூறாமல் ஒவ்வொரு செய்திக்கும் ஆதாரங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.

முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியவர்கள் தம்முடைய 'தென்பாண்டிச் சிங்கம் ' எனனும் வரலாற்று கதை எழுத இக்கள்ளர் சரித்திரத்தை த் துணைகொண்டார்.


கள்ளர் சரித்திரம்

முதல் அதிகாரம்

பழந் தமிழ் மக்கள்


இரண்டாம் பதிப்பின் முகவுரையாக இதன் ஆசிரியர் எழுதியது


குடி செய்வ லென்னு மொருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான் முந் துறும்

திருவள்ளுவர்


லகத்தில் எவ்வகையான நற்செயலுக்கும் ஊக்கமும், உணர்ச்சியும் இன்றியமையாதன. மக்கள் அவற்றை அடைதற்குரிய சாதனங்கள் பலவற்றிலும் அவர்களது முன்னோரைப் பற்றிய அறிவும், நினைவும் சிறந்தவை . ஆக, அந்நோக்கத்தினைஅடிப்படையாகக் கொண்டு எழுதப்பெறும் தேச சரித்திரங்கள் பெரிதும் பயன் படுவனவாம். ஒரு சாதி அல்லது வகுப்பினைக் குறித்து எழுதப்படும் சரித்திரம் அவ்வகுப்பினர்க்குள் உணர்ச்சியுண்டாக்கும் அளவாவது பயனளித்தல் கூடும். அன்றி, தேச சரித்திரத்திற்கு அஃது ஓர் உறுப்பாதலும் அமையும். இக்கருத்தால் பற்பல நாட்டிலும் பல வகுப்பினர் தங்கள் சாதி சம்பந்தமாப் புத்தகங்கள்எழுதி வைத்திருக்கின்றனர். ஆனால், தமிழ் நாட்டு மக்களில் தொகையாலும், நிலவுரிமை முதலியவற்றாலும் பெரிதும் கருதப்படவேண்டியோரான கள்ளர், மறவர், அகம்படியார் என்பவர்களைப்பற்றி யாதொரு சரித்தரமும் வெளிவந்த தில்லை. சில 'ஜில்லா மான்யுவல்' ஜில்லாக் கெசட்டியர்களிலும், வேறிடங்களிலும் இவர்களைக் குறித்துச் சிறுபான்மையாக எழுதப் பட்டிருக்கின்றன. எனினும் அவை முற்றிலும் உண்மையறிந் தவர்களால் எழுதப்பட்டவையல்ல. அது மாத்திரமன்றி, எழுதினோரிற் சிலர் குறுகிய நோக்கமும் அசூயையும் கொண்டுளோர் எனவும் கருதவேண்டியிருக்கிறது.


ள்ளர்கள் தொன்று தொட்டு ஆட்சி நடாத்தி வந்த வகுப்பினர் என்பதை எவரும் மறுத்தற்கில்லை. இற்றைக்கும் இவ்வகுப்பினரில் ஒரே தமிழ் வேந்தராகிய புதுக்கோட்டை மன்னர் அரசாண்டு வருகின்றனர். ஜமீன்தாரும், பெருநிலக்காரரும் மிகுதியாக இருக்கின்றனர். சென்னை அரசாங்கத்தினரால் ஏற்படுத்தப் பெற்றுள்ள ஓர்சட்டத்திலிருந்தே இவ்வுண்மை அறியலாகும். சென்னை இராஜதானியைச் சேர்ந்த ஜமீன் நிலங்களைக் கூடியவரையில் பாதுகாக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் சென்னை அரசாங்கத்தினரால் 1903-ஆம் வருடத்தில் ஓர் சட்டம் இயற்றப்பட்டது. இக்கொள்கையை நிலை நறுத்துதற்காகப் பின்பு சென்னபட்டினத்து 1903-ஆம் வருடத்து4-வது மசோதா சட்டமும் தோன்றிற்று. இச்சட்டத்தின் பெயர் 'பங்கிடக்கூடாத நிலச் சொத்துக்களைக் குறித்த சென்னபட்டினம் 1903-ஆம் வருடத்து மசோதா சட்டம்' (The Madras Impartible Estates Bill, 1903) என்பது. இதன் எல்லைக்குள் (ஷெடியூலுக்குள்) அகப்பட்ட ஜமீன்களில் தஞ்சையில் உள்ளவை: கண்டர்கோட்டை, கல்லாக்கோட்டை, கோனூர், சில்லத்தூர், பாலையவனம், பாப்பாநாடு, சிங்கவனம், மதுக்கூர், நெடுவாசல், சேந்தங்குடி, அத்திவெட்டி என்னும் பதினொன்றுமாம். இவற்றுள் கோனூர், அத்திவெட்டி என்னும் இரண்டு தவிர மற்றையவெல்லாம் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவை. அவ்விரண்டுங்கூட ஆதியில்கள்ளர் ஜமீன்களைச் சேர்ந்திருந்தனவே. மற்றும் பாளையக் காரர்களைப்போன்றோ சிறிது ஏற்றத் தாழ்வாகவோ செல்லமும், செல்வாக்குமுடையோர் பலர் இவ்வகுப்பில் இருந்திருக்கின்றனர். இவ்வகுப்பினைக்குறித்துஎழுதினோர் யாரும் இவைகளைச் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை. இக்காரணத்தாலேயே கள்ளர் சரித்திரம் என்னம் இவ்வுரை நூல் எழுதுமாறு நேர்ந்தது.

இதனைப் படிக்கும் அறிஞர்கள் சில கற்பனைக் கதைபோலன்றி உண்மையாராச்சியுடன் கூடிய சரித்திரமாக எழுதுதற்குப்பொரிதும் முயன்றுளேன் என்பதனையும், ஒருவகுப்பினைப் பெருமைப் படுத்துதற்காக ஏனை வகுப்புக்களை இழித்துரைக்கும் குறுகிய மனப்பான்மையடையாரக்கு இஃது அறிவு கொள்ளத்தக் உடையதாம் என்பதனயும் இதிலுள்ள செய்திகள் பெரும்பாலனவும் தமிழ் மக்கள் அனைவரும் படித்தறிய வேண்டியனவாம். தமிழ் நாட்டின் வரலாற்றில இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகளை இந்நூலின் ஐந்தாம் அதிகாரத்திற் காணலாகும்.

இந்நூல் 1923-ஆம் ஆண்டில் வெளியான பொழுது பல சிறந்த புலவர்களின் மதிபுரையையும், பல பத்திரிகைகளின் பாராட்டுரையையும் பெறுவதாயிற்று, சங்க இலக்கியங்களும், இலக்கணங்களும், புராணங்களும், பிரபந்தங்களுமாக அளவில்லாத தமிழ்நூல்களை ஆராய்ந்து வெளிப்படுத்தி வரும் சான்றோராகிய மகா மகோபாத்தியாயர் ஸ்ரீமத் உ.வே. சாமிநாதையரவர்கள் தாம் இதனை முழுதும் படித்துப் பார்த்ததாகவும், கலாசாலை மாணக்கர்கள் படித்துப் பயநெய்துமாறு இது பாடமாக வைக்கத் தகுந்தது எனத் தாம் கருதுவாதாகவும் அன்புடன் தெரிவித்தார்கள் என்பதனை இங்கே குறிப்பிடுகின்றேன்.

இப் பதிப்பிலே பல அரிய புதிய செய்திகள் சேர்க்கப் பெற்றுள்ளன; மிகையாகத்தோன்றிய சில குறைக்கப் பெற்றும், சில திருத்தப்பெற்றும் இருக்கின்றன; பாண்டி நாட்டிலுள்ள கள்ளர் நாடுகளின் வரலாறு முழுதும் செவ்வையாக ஆராய்ந்து எழுதப் பட்டிருத்தலை இப்பதிப்பிற் காணலாகும். கள்ளருடைய நாட்டின் பெயர்களிலும், பட்டப்பெயர்களிலும் பல வழக்கத்தில் உருச் சிதைந்து உண்மையறியக் கூடாதனவாகவுள்ளன. ஆராய்ச்சியில் உண்மை வெளியான பெயர்கள் மாத்திரம் செப்பஞ் செய்யப் பெற்றும், ஏனையவை வழங்குகிறபடியும் இதில் எழுதப் பெற்றுள்ளன. மற்றும் கள்ளருடைய நாட்டு விவரங்களும், பழக்க வழக்கங்களும் முதலியவற்றில் இன்னும் ஆராய்ந்து காண வேணடியவை பல இருந்தல் கூடும். என் அறிவு ஆராய்ச்சிக்குறைவால் பல பிழைகள் நேர்ந்திருத்தலும் கூடும். அவைகளைக் காண்கின்ற அறிவுடையோர்கள் அருள் கூர்ந்து அவற்றைத் தெரிவிப்பரேல் அடுத்த பதிப்பிலே இதனைப் பின்னும் செப்பஞ் செய்த வெளியிட இடனுண்டாகும்.

கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை யடைந்தவர்களாய்க் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றனர் என்பது உண்மை. அத்தகையோர் சிறிதேனும் நன்மையடைதற்குத் துணைபுரிதலே இஃது எழுதியதன் முதல் நோக்கமாகும், அந்நோக்கம் இந்நூல் வெளியான நாலைந்து ஆண்டுகளுக்குள்ளாக ஓரளவு நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது. இந்தியாவிலன்றி, இலங்கை, பர்மா, மலேயா நாடுகள், சுமத்திரா முதலிய தீவுகள் ஆகியபல இடங்களிலுள்ளோர் இதனை ஆர்வத்துடன் வரவழைத்துப் படிப்பாராயினர். இவ்வகுப்பினர்க்குள் ஒருவகையான ஊக்கமும், கல்வி விருப்பமும் இதனால் உண்டாயிருக்கின்றன வென்பது நிதரிசனமாகின்றது.

கும்பகோணம் வாணாதுறை ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப் பண்டிதராகிய திருவாளர்.T.V.சதாசிவப் பண்டாரத்தாரவர்கள் முதலிய அன்பர்கள் இந்நூல் எழுதுதற்குச் செய்த உதவிகள் முதற்பதிப்பிலே காட்டப்பெற்றன. பாண்டிநாட்டிலே உயர்குடும்ப மொன்றில் பிறந்தாரும், செந்தமிழ்ப் புலமையிற் சிறந்த சந்தநலந்திகழும் பாக்களை நினைத்தமாத்திரையில் பாடும் ஆற்றல் கைவரப்பெற்றாரும், துறவு புண்டு திருத்தொண்டியற்றி வருவாரும் என்பாற் பேரன்புடையாரும் ஆகிய திருமிகு. கல்லல் குக. மணிவாசக சரணாலய சுவாமிகள் பாண்டி நாட்டுக் கள்ளர் நாடுகளின் விவரமனைத்தையும் செவ்வனே ஆராய்ந்து தெரிவித்து இப்பதிப்பானது திருத்தமெய்தும்படி செய்தார்கள். அவர்கள் புரிந்த இவ்வுதவியும், மற்றும் பலவாற்றானுஞ் செய்து வரும் உதவிகளும் என்னால் எப்பொழுதும் பாராட்டப் பெறுவனவாகும்.

.மு. வேங்கடசாமி.


மிழகத்திலே தஞ்சை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் கள்ளர் என வழங்கப்படுகிறது. இப்பொழுது இக்குழுவினரில் நீதி மன்றங்கள் பலவும் அமைத்துத் தமது நாட்டினை ஆட்சிபுரிந்து வருகின்ற ஓர் மன்னரும், குறுநில மன்னராய் பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர். இன்னவரின் முன்னோர் பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலைமையில் இருந்தனர்; இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது?; இப் பொழுது எப்படியிருக்கின்றனர்? ;என்பன போன்றவை இந்நூலில் ஆராய்ந்து காட்டப்படும் . அதற்குமுன் இந்திய நாட்டிலும், ஈழம், கடாரம் முதலிய நாடுகளிலும் பண்டைநாளில் வந்திருந்து மக்களைக் குறித்துப் பொதுவாக ஒரு சிறிது ஆராய்வது இன்றியமையாதது.


மிகப் பழைய நாளிலே நாகர் என்ற ஓர் வகையினர் இந்திய நாடு முழுதும் பரவியிருந்தனர் என்றும், பின்பு இந்தியாவிற்குப் புறம்பே வடக்கிலுள்ள நாடுகளிலிருந்து திராவிடர் என்பார் இந்தியாவிற்குல் புகுந்து சிறிது சிறிதாக இந்நாடு முழுதும் பரவினர் என்றும், அதன்பின் ஆரியர் என்ற கூட்டத்தார் அவ்வாறே இந்நாட்டில் புகுந்து பரவலுற்றனர் என்றும் சரித்திரக்காரர் கூறுகின்றனர். இதுபற்றி எத்தனையோ வகையான கொள்கைகள் உண்டு; 'ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளில் முந்தகைய தமிழர் ' என்னும் நூலினை ஆங்கிலத்தில் எழுதிய அறிஞர் வி . கனகசகைபப் பிள்ளை அவர்கள் இந்தியாவிலிருந்து பழைய மக்களைப்பற்றிப் பெரிதும் ஆராய்ச்சி செய்திருக்கின்றனர். முன் சொன்ன முத்திறத்தாரையுங் குறித்து அவரும் அப்படியே குறிப்பிடுகின்றார். எனினும், திராவிடர்க்கும் ஆரியர்க்கும் நடுவே தமிழர் என்ற வகுப்பினை அவர் புகுத்துஉரைக்கின்றர். அவரது கொள்கைப்படி நாகர், திராவிடர் , தமிழர், ஆரியர் என்ற நான்கு பிரிவுகள் ஏற்படுகின்றன. ஆனால் அவர் எழுதியதிலிருந்தாவது, மற்றவர்கள் எழுதியிருந்ததிலாவது இப்பொழுது காணப்படும் மக்களில் இன்னவரே நாகர், இன்னவரே திராவிடர் என்று இவ்வாறு திடமாக வகுத்தரைக்கக் கூடவில்லை, உரைப்பது அத்துணையெளிதன்று. எனினும் மறைந்து கிடக்கும் உண்மைகளைக் காண அவாவுதலும், அது குறித்து ஆராய்தலும் இயல்பே யாகலின், பழைய தமிழ் இலக்கிய, இலக்கணங்களையும், புராண, இதிகாசங்களையும், கல்வெட்டு, பட்டயம், பிற்காலத்தோர் எழுதிய சரித்திரங்கள் என்பவைகளையும் பற்றாகக் கொண்டு, இக்காலத்து மக்களியல் புளில் பொருந்துவனவற்றை அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஒருவாறு உண்மையெனத் தோன்றுமவைகளை வெளிப்படுத்தலே இவ்வாரய்ச்சியின் நோக்கமாம்.

தொல்லை நாளில் நகார் என்ற வகுப்பினர் பல இடங்களில் மேன்மை யுற்றிருந்தனர் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஒரு காலத்தில் பவுநேயர் எனப்படும், ஆறுகோடி கந்தருவர் பாதாலத்திலிருந்த நாகருடைய தலைசிறந்த மணிகளையும், அன்னவராட்சியையும் வெளவிக் கொண்டனரென்றும், நாகர் திருமாலிடத்திற் சென்று முறையிட, அப்பெருமான் அவர்களை நோக்கி, 'மாந்தாதா என்னும் சக்கரவர்திதியன் மைந்தனான புருகுச்சன் என்பானிடத்தில்டயாம் ஆவேசித்து நுங்கள் பகைவரை அடக்குதும்' என அருளிச்செய்தன ரென்றும், நாகர் அது கேட்டு வணங்கி விடை பெற்றுப் பாதலம்புக்கு, தங்கள் உடன் பிறந்த நருமதையென்பாளைப் புருகுச்ச மன்னனுக்கு மனைவியாம்படி அனுப்பினரென்றும், அவளும் அவ்வேந்துடன் சேர்ந்து அவனைப் பாதலத்திற்குக் கொண்டு வந்து விட அம்மன்னவன் மாயோனின் பேரொளியால் ஆவேசிக்கப் பட்டு, அக்கந்தருவர் யாவரையும் அழித்து விட்டுத் தன் பட்டணம் அடைந்தனன் என்றும், புருகுச்சனுக்கு நருமதை வயிற்றில் திரசதஸ்யு என்பான் தோன்றினன் என்றும், அத் திரசதஸ்யுவின் வழியிலே சத்தியவிரதன், திரிசங்கு, அரிச்சந்திரன் முதலிய அரசர்கள் தோன்றினரென்றும் விட்டுணுபுரானம் (விஷ்ணுபுரானம்), நாலம் அமிசம், மூன்றாம் அத்தியாயத்திற் சொல்லியிருக்கிறது.


னி, வியாச பாரதம், சாந்திபருவத்தின் இறுதியிலுள்ள பன்னிரண்டு அத்தியாயங்களில் பதுமன் என்னும் பெயருள்ள ஓர் நாகனைப்பற்றிய செய்திகள் சொல்லப் பெற்றுள்ளன. அவற்றின் சுருக்கம்:-

"கங்காநதியின் தென் கரையிலுள்ள மகாபதுமம் என்னும் பட்டணத்திலே அத்திரி வமிசத்தவரான ஓர் பிராமணர் இருந்தார், ஐம்பொறிகளையும் வென்று தவத்தில் மேம்பட்டவரான அப்பிராமணர் எந்தக் கருமம் செய்யத்தக்கது? எல்லாவற்றினும் மேலான இடம் எது? அதனை அடையும் நெறியாது? என்பன வற்றை இடைவிடாது ஆராய்ந்து வந்து விடைகிடைக்காதவராயிருந்தார். அப்படி இருக்கும் நாளில் சமாதி நிலையடைந்த பெரியவரான ஒரு அதிதி அவரிடம் வந்தார். அவர் மகிழ்ச்சியுற்று அப்பெரியாரைப் பூசித்துத் தமது ஐயத்தைத் தீர்த்தருளும்படி வேண்டிக்கொள்ள, அதிதியானவர் 'யானும் இவற்றில் மயக்கமுடையனாகவேயிருக்கிறேன்: எனக்கும்உண்மை தெரிந்து கொள்ள வேண்டுமெனும் விருப்பமுண்டு. உலகிலே சிலர் முத்திப்பேற்றைப் புகழ்கின்றனர் ; சில வேதியர் யாகத்தின் பயனைக் கொண்டாடுகின்றனர்; சிலர் இல்லறத்தைச் சார்ந்திருக்கின்றனர்; சிலர் அரச தர்மத்தைப் பொருந்தியுள்ளார்; குருவின் பணிவிடை மேற்கொண்டவர் சிலர்; தாய் தந்தையர்களுக்கு ஊழியம் செய்வார்கள் சிலர்; சிலர் அஹிம்சையினையும், சிலர் சத்தியத்தையம் மேற்கொண்டிருக் கின்றனர்; சிலர் போர் புரிந்து மாள்கின்றனர்; சிலர் உஞ்சவிருத்தி செய்கின்றனர். இவ்வாறாக மேலுலகத்தை அடையம் விருப்பமுடையவர்கள்பல்வேறு வகைளில் நடப்பவராகின்றனர். அதனால் என் மனமும் கலக்க மடைந்திருக்கிறது எனினும் என் குருவினால் உபதேசிக்கப்பட்ட ஓர் செய்தியை உனக்குக் கூறுகிறேன். கோமதி நதி தீரத்தில் நைமிசம் என்ற வனம் உள்ளது. அது முன் படைப்பில் தரும வடிவமான சக்கரம் தங்கப்பெற்றதாகும். அங்கு நாகபுரம் ஒன்றுள்ளது. பதுமன் என்னும் பெயருள்ளவனும் புகழ்மிக்கவனுமான நாகன் ஒருவன் அங்கிருக்கிருக்கின்றனன். அவன் கர்மம் உபாசனை, ஞானம் என்னும் மூன்று நெறியிலும் நிலை பெற்றவன்; தன் மனம் மொழி மெய்களினாலே எவ்வுயிர்க்கும் இன்பம் விளைப்பவன்; வாய்மை நெறி தவறாதவன். அவன் உண்மையை அறிவுறுத்துபவன். அன்னவன் கங்கை நீரில் வசிக்கின்றனன்' என்று கூறினர். அது கேட்ட பிராமணர் மிகவும் மகிழ்ந்து, வழி வினாவிக்கொண்டு அந்நாகன் இருப்பிடம் அடைந்து. பல நாள் காத்திருந்து நோன்பியற்றி, முடிவில் அந்நாகர் பெருமானைக் கண்டு ஐயந்தெளிந்து மீண்டனர்" என்பது.

இங்கே காட்டிய இவ்விரு கதைகளிலிருந்தும் நாகர் என்பார் செல்வத்திலும் ஞானத்திலும் மேம்பட்டவராவர் எனக் கொள்ளக்கிடக்கிறது.


நாகர்களைப்பற்றிக் கனகசபைப்பிள்ளையவர்கள் கூறுமாறு:- "தொகையிற் பெருக்க மடைந்து நாகரிகம் வாய்ந்த ஒரு சாதியார் இந்தியா, கடாரம் (பர்மா) இலங்கையென்னும் தேயங்களில் பெரும் பகுதிகளை ஓரொரு காலத்தில் ஆண்டிருக்கின்றனர். இராமாயணத்து நாடவிட்ட படலம் இவர்கள் பெயரைக் குறிப்பதன்றித் தென்னாட்டின் நடுவணிருந்த இவர்களது அரச நகரைப் பின்வருமாறு விரித்துக் கூறுகின்றது. 'போகவதிக் கருகே நாகர் வாழும் பதி யொன்றுள்ளது; அது பெரிய தெருக்களையும் மதிற்காப்பினையும் உடையது; தம் நச்சுப் பற்களால் மிகவும் கொடுமை வாயந்துள்ள நாகர் மைந்தரின் சேனைக்கூடம் அதனை காவல் புறிந்திருக்கும் ; மணி மண்டபத்தில் அரியனை வீற்றிருந்து அவர்களை ஆளும் அரசன் வாசுகி என்பான். அந்நகரையும் நகர்ப்புறத்தையும் நன்கு தேடுமின்"

"கி.மு. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் கங்கை, யமுனை ஆறுகளுக்கு இடையில் நாகராண்ட நாடுகள் இருந்ததாக மகாபாரதம் விளக்குகிறது. திங்கள் மரபிற்தோன்றிய ஆரிய வரசர்கள் இப்பொழுது தில்லி(டெல்லி) இருக்கிமிடத்திற்கு அருகில் ஒரு நகரமைக்க ஆங்கிருந்த நாகரை வென்று அப்புறப் படுத்தியதாக அந்நூல் கூறுகிறது. கதாநாயகனான அருச்சுனன் தீர்த்தயாத்திரை சென்ற பொழுது உலூபி என்ற நாக கன்னியொருத்தியையும், மணிபுரத்தையாண்ட நாக வரசனாகிய சித்திர வாகனன் மகள் சித்திராங்கதையையும் மணந்து கொண்டான்.இவன் பெயரன் தட்சகன் என்ற நாகவரசனால் கொல்லப்பட்டன் , கொலையுண்ட பரீட்சித்தின் மகன் சனமேசயன் நாகருடன் பெரும்போர் விளைத்து அவர்களை ஆயிரக் கணக்காக மடிவித்தான். மற்றும் கி.மு. ஆறாவது நூற்றாண்டில் மகத நாடு நாகரது ஆட்சியிலிருந்ததாகச் சரித்திர ஆராய்ச்சியால் விளங்குகிறது. இவ் வமிசத்து ஆறாம் அரசனாகிய அசாத சத்துருவின் காலத்தில் தான் கெளதம புத்தர் தம் புதுக்கோட்பாடுகளைப் போதித்து, நாகர் பெரும்பாலும் அவற்றையே தழுவும்படி செய்தது".

"இலங்கைத் தீவின் சரித்திரமெல்லாம் தொடக்கத்தில் நாகரைப்பற்றியே கூறும். கி.மு. ஆறாவது நூற்றாண்டில் இத்தீவின் குடபாலெல்லாம் நாகர் ஆளுகையில் இருந்ததெனவும், அதுபற்றியே இதற்கு நாகத்தீவம் என ஓர் பெயர் வழங்கிற்று எனவும் முன்னூல் மேற்கோள்களால்அறியப்படுகிறது. கல்யாணி நகரந்தான் நாகரது தலைநகர். கல்யாணி யரசன் தங்கை மகள் கனவடமாறோலை யரசனாகிய ஒரு நாகனுக்கு மணஞ்செய்விக்கப்பட்டாள். இம்லை, கல்யாணிக் கெதிரில் இந்தியக்கரையில் இக்காலத்து இராமேச்சுரத்திற்கு அருகேயுள்ள கந்தமாதனக்குன்றமாக இருக்கும் ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு . இப்பொழுது அமராவதி முதலிய இடங்களில் காணப்படும் சிலைகள் பின்புறத்திற் படம் விரிந்த பாம்பின் தலையுடையனவாய் நாகரைக் குறிப்பனவாக உள்ளன. அமராவதிப் பாழ்களிலிருந்து எடுக்கப்பட்ட இச் சிலைகளன் சில பினனங்களைச் சென்னையிற் பொருட்காட்சி மன்றத்தில் காணலாம். இச்சிலைகளில் அரசர்க்கு மூன்று படமும், அவர் மகளிர்க்கு மூன்று படமும், மற்றை நாகர்க்கு ஒற்றைப்படமும் காணப்படும். தொழில் திறம் பொருந்த இச்சிலைகளையியற்றிய சிற்பிகள், இந்நாகரை அரவின் தன்மை வாய்ந்து மக்களுருவமும் பாம்புஉருவமும் கலந்த மெய்யினரென்றே நினைத்தனர் போலும். பண்டைக்காலத்துத் தமிழ்ப்புலவர்களும் இவ்வாறே எண்ணம் கொண்டிருந்தனர். தம் காலத்து நாகரை மக்கட்பிறப்பினராய்க் கூறி, தமக்கு முற்பட்ட காலத்தவரை உலகின் கீழ்ப்பாதலத்து உறைவோராய்க் கூறியிருக்கின்றனர். சோழர் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தின் தொன்மையையும், செல்வப் பெருக்கையும் குறித்தற், இளங்கோவடிகள், "நாக நீணகரொடு நாக நாடதனொடு, போகநீள் புகழ் மன்னும் புகார் நகர்" என்று கூறுவர். ஆகலின், ஆயிரத்தெண்ணூறாண்டுகளின் முன்பிருந்த தமிழரது நினைப்பில் நாகரினும் தொன்மையான நாடாண்டோர் உண்டென்ற கொள்கையிருந்ததாக் கொள்ளுதற்கில்லை" என்பன.

வையெல்லாம் சரித்திவுண்மை நிறைந்த கூற்றுக்கள் என்பதில் ஐயமில்லை, மேற்காட்டியவற்றிலிருந்து, நாகரென்பார் இந்திய நாட்டிலும், இந்தியாவின் தெற்கிலும் கிழுக்கிலும் உள்ள தீவுகளிலும் மிகப்பழைய நாளில் வாழ்ந்து வந்த மக்களென்பதும், சூரிய சந்திர குலத்துப் பேரரசராயினரும் இவ்வகுப்பினருடன் கல்யாணத்தாற் கலந்திருக்கின்றனரென்பதும் இன்னவர் நாகரிகத்தில் மிக மேன்மையுற்றிருந்தவர் என்பதும் நன்கு வெளியாதல் காண்க. இங்ஙனம் பல்வேறிடங்களில் வாழந்துவந்தவர்கள் நாகர் என்னும் ஒரே பெரால் வழங்கப்படிருப்பினும், அவரெல்லாம் நாகரிகம் மிக்குடையார் என அறியப் படினும் அவர்களுக்குள் எவ்வகைப்பிரிவும் இல்லை அவர்கள் ஒழுக்கங்களில் ஏற்றத்தாழ்வில்லை என்று கூறுதல் தலைமையானது. காவிரிப் பூம்பட்டினத்திலிழருந்த சாதுவன் என்னும் வணிகன் கப்பலேறிப் பொருள் தேடச் செல்லுங்கால் இடையே கப்பலுடைந்து நிற்க , ஒருவாறு உயிர் பிழைத்து அருகிலுள்ள நாகர் மலையை அடைந்து, அங்குள்ள நக்க சாரணர் என்னும் நாகர்களுக்கு நல்லறிவு கூறி அவர்களைத் தீ நெறியினின்றும் நீங்குவித்து மீண்டனன்; என மணிமேகலை கூறுவதாலும் இஃதறியலாகும். எனினும், புத்த மதத்தின் மேன்மையை உணர்த்து வதற்குப் பிரைச் சிறிது தாழ்த்துக் கூறியிருப்பதாக இவ்விடத்துக் கருதுதலும் இழுக்கன்று.


நாகநாடு, நாகபுரம், நாகர்மலை, என்ற இடங்கள் மணிமேகலையிற் கூறப்பட்டுள்ளன. நாகநாடானது, "கீழ் நில மருங்கின் நாகநாடு" என்றும், "நாக நன்னாட்டு நானுறி யோசனை" என்றும் கூறப்பட்டிருத்தலின் அஃது இந்தியாவின் கிழக்கேயுள்ள ஓர் பெரிய நிலப்பரப்பு என்பது பெறப்படும், ஒருகால் அது நாகப்பட்டினத்தைத் தொடர்நது கிழக்கேயிருந்து கடல் கொள்ளபட்டிருப்பினும் இருக்கலாம். சோழனொருவனை மணம் புணர்நத பீலிவளையின் தந்தையாகிய வளைவணன் என்னும் அரசனால் ஆளப்ட்டது நாக நாடு என்பது முற்கூறிய நாக நாடோ, பிறிதொன்றோ தெரியவில்லை. நாகபுரம் என்பது தெற்கிலுள்ள தீவாகிய சாவக (ஜாவா) நாட்டின் தலைநகர்; இந்திரன் குலத்தில் வந்தோரான பூமி சந்திரன், புண்ணியராசன் என்னும் வேந்தர்களுக்கு இருப்பிடமானது.


இனி, இதுகாறும் காட்டிப் போந்த வற்றுள் ஒன்றேனும் வட வேங்கடம் தென்குமரியிடைப்பட்ட தமிழகத்துள் வாழ்ந்தோரைக் குறிப்பதாகக் கொள்ளுதற்கு தவறு இல்லை. தமிழக மக்களைத் தெரிந்து கொள்வதற்குப் பழைய தமிழ் நூல்களே சிறந்த கருவியாகும். அவற்றுடன் சேர்ந்தே பிறவும் கருவியாக அமையும். ஆகவே அவற்றைத் துணையாகக்கொண்டு தமிழர் என்பவர் யார் என்று பார்ப்போம்.


திராவிடம் என்ற சொல்லானது தமிழ் எனத்திரிந்த தென்று ஒரு சாரரும், தமிழ் என்னும் சொல்லே திராவிடமாயிற்று என மற்றொரு சாரரும், திராவிடம் என்பது நாட்டின் பெயர், தமிழ் என்பது மொழியின் பெயர் எனப் பிறிதொரு சாரரும் இங்ஙனம் பலபடக் கூறுவர். கனகசபைப் பிள்ளையவர்களோ இருசொல்லையும் இயைபில்லாத வேறு வேறு எனக்கொண்டு திராவிடர் வேறு, தமிழர் வேறு என்பர். அவர், திராவிடர் முன்னும், தமிழர் பின்னுமாக இந்நாட்டிற்கு குடியேறினர் என்பதன்றி, திராவிடராவார் இவர், தமிழராவார் இவர் என விளங்க உரைத்திலர். கங்கைக் கரையிலுள்ள தமிலித்தி என்ற இடத்திலிருந்து போந்தவர் தமிழர் என்கின்றனர். தமிழர் வடக்கினின்றும் போந்தவரென்பது நிறுப்படும் பொழுது அவர் கூற்று உண்மையாகலாம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழர் உறைவிடம் தமிழகம் ஆய தென்னாடேயென்பதும், அவர்கள் ஓரொருகால் வடக்கிலும் சென்று ஆண்மை காட்டிருக்கின்றனர் என்பதும் நாம் காணும் உண்மையாகும். தமிழ் என்னுஞ்சொல் தொன்றுதொட்டு மொழியின் பெயராகவும், நாட்டின் பெயராகவும் வழங்கி வருகின்றது. திராவிடம் என்னுஞ் சொல் பழைய தமிழ் வழக்கிற் காணப்படுவதன்று. திராவிடம் என்பதன் திரிபு தமிழ் என்பது சிறிதும் பொருத்தமில்லாத கூற்றாகும். அது நிற்க:-


ப்பொழுது இந்தியாவிற்குத் தெற்கிலுள்ள இந்துமாகடலானது ஓர் காலத்து ஒரு பெரிய நாடாக விருந்த தென்றும், அந்நாட்டில் தான் முதல் முதல் மக்கள் தோன்றிப் பின் பல நாடு கட்கும் சென்ற ரென்றும் செருமானய நாட்டு ஆசிரியராகிய எக்கல் என்பவர் தமது ஆராய்ச்சியால் கண்டு கூறுகிறார். அங்ஙனம் இருந்து அழிவுற்ற நாட்டினைக் குமரிக் கண்டம் என்றும், இலமூரியா என்றும் பிற்காலத்தார் வழங்குவராயினர். குமரிக் கண்டம் என்பது வடக்கில் விந்தியமும் தெற்கில் தென் கடலும், கிழக்கில் சாவகத்தீவும், மெற்கில் மடகாசிகர் தீவும் எல்லையாகவுடையது என்பர். இஃது அழிவுற்றதை மேற்புல ஆசிரியர் பலர் வலியுறுத்துரைக்கின்றனர், கலித்தொகை, சிலப்பதிகாரம், இறையனார் அகப்பொருளுரை முதலிய பழைய தமிழ் நூல், உரைகளாலும் இவ்வுண்மை புலனாகின்றது. தென்புவியில் முதன் முதற் தோன்றியவர்களே தமிழரென்பதும், அதன் பின்னர் பல நாடு கட்கும் முறையே குடியேறினரென்பதும் கருதக் கிடக்கின்ற உண்மைகளாகும். முதன் மக்களின் தோற்றத்திற்கு நெடுங்காலம் பின்ரே தமிழகம் அல்லது தமிழ்நாடு என்ற வரையறை ஏற்பட்டிருத்தல் வேண்டும்.

'சதுமறையாரியம் வருமுன் சகமுழுதும்நினதாயின்

முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பமே'

என்று அறிஞர் சுந்தரம் பிள்ளை யவர்கள் கூறியிருப்பதிலிருந்து தமிழ் இந்தியா முழுவதும் வழங்கியதென்பது அவர்கள் ஆராய்ந்து கண்ட முடிபு என அறியலாகும். பின் ஒரு காலத்தில் தமிழகமென்பது தென்னிந்தியா முழுதுமாயிருத்தல் வேண்டும் . எனினும்இவையெல்லாம் காலங்கடந்த செய்திகளாதலின் இவற்றை விடுத்து. வடவேங்கடம் தென்குமரியிடைப்பட்ட தமிழகத்து மக்களைக் குறித்து ஈண்டு ஆராய்வோம்.

புவியானது மலையும், காடும், பள்ளத்தாக்கும, கடற்கரையுமாகப் பகுக்கப்படுதலின் நானிலம என்று வழங்கப்படுவதாயிற்று. மலையும் காடும் சாந்த விடம் கால வேற்றுமையால் திரிந்து சுரமாதலும் உண்டு. ஆகையால் நிலம் ஐந்துஎனவும் படும், இவற்றை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை எனத் தமிழ் நூல்கள் கூறும். இவற்றிலுள்ள மக்கள் அங்கங்கே பிரிந்து வாழ்ந்து வந்த காலத்தில் அந்த நிலங்களின் இயற்கைப் பண்புகளுக் கேற்ப அவர்களுடைய குணம், தொழில், பெயர் முதலியனவும் வேறுபடுமாகலின் மக்கள் ஐந்துவகுப்பினராயினர். இவையே இயற்கையின் உளவாய வேற்றுமையாகலின் தமிழ் நூல்கள் இப்பாகு பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நிகழா நிற்கும். தமிழின் தென்மைக்கு இஃதோர் சான்றாதல் அறிக.


வர்களுள், குறிஞ்சி நிலமக்கள் குன்றவர், வேட்டுவர் முதலிய பெயர் பெறுவர். முல்லை நிலமக்கட்கு ஆயர், இடையர் முதலிய பெயர்கள் வழங்கும். பாலை நிலத்தார் எயினர், மறவர் முதலிய பெர்களால் வழங்கப் பெறுவர். மருத நிலத்தினர்க்குக் களமர், உழவர் முதலியன பெயர்களாம். நெய்தனில மக்கட்கு நுளையர், பரதவர் முதலிய பெயர்கள் உள்ளன. மிகப்பழைய நாளில் தமிழகத்தில் இருந்த மக்கள் இவர்களே. இவர்களுள் குறிஞ்சி நிலமக்கள் வலியும், வீரமும் இயல்பிலே மிக்குடையராகலின் ஏனையரை அடக்கியாளும் பெற்றியும் உடையராயினர். இன்னவரே " கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு - முன்தோன்றி மூத்தகுடி" என்று கூறப்படுதலும் காண்க. எனினும் நாகரிகமானது மருத நிலத்தே தான் முற்பட வளர்சியடைந்திருத்தல் வேண்டும். ஐந்திணை மக்கள் அறிவும், நாகரிகமும் உடையரான காலத்தே அறிவரும், அரசரும், வணிகரும், பாணர், துடியர் முதலிய ஏனைக்குடி மக்களும் அவர்களுள்ளே தோன்றுவராயினர். தமிழருள்ளே பதிணென்குடி உண்டேன்பது உலக வழக்கால் அறியலாவது. இவ்வற்றால் தமிழகத்தேயிருந்த இவரெல்லம் தமிழ ரெனப்பட, தமிழகத்தைச் சூழவிருந்த பல திறத்தாரும் நாகரென வழங்கப்படுவராயினர் என்க. தமிழரும், நரகரென்பாரும் இடத்தால் வேறுபட்ட வரேயன்றி, பிறவற்றில் எல்லாம் முற்றிலும் வேறுபட்டவரல்லர். தமிழரது மொழியும், நாகரது மொழியும் இடம்பற்றிச்சிறிது வேற்றுமையடைந்திருந்த தமிழே யன்றிப்பிறிதன்று. காவிரிப்பூம் பட்டினத்தலிருந்து நாகர்மலையை அடைந்த சாதுவன் என்னும்வாணிகன்அங்கிருந்த நாகர்களோடு அவரது மொழியிற்பேசினான் என மணிமேகலை கூறுவதும் இக்கருத்திற்கு சார்பாதல் காண்க. தெலுங்கு, கன்னடம் என்னும் மொழிகள் தமிழினின்று உண்டானவை என்னுங்கொள்கை அங்கெல்லாம் முதலில் வழங்கிய மொழி தமிழ் என்பதனைப் புலப்படுத்தும். தமிழானது இங்ஙனம் வெவ்வேறு மொழியைப் பிறப்பித்துவிட்டுத் தான் ஓர் எல்லையுட் பொருந்தி நிற்க, பின்பு அதன் கண்ணும் வேற்றுமை உண்டாகிச் செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகுபாடுகளாயிற்று. நெடுங்காலஞ் சென்றபின் ஒரு புறத்திருந்துகொடுந்தமிழ் வேறு மொழிகளாக மாறி மலையாளம் எனப்பட்டது.

ந்திணை மக்களுள்ளே சிலரைத் திராவிடரென்றும், சிலரை நாகரென்றும் ஒரு சாரார் கூறுவது எத்துணையும் பொருந்துவதன்று. "நாகரில் மறவர், எயினர்,ஒளியர்,ஓவியர்,அருவாளர், பரதவர் என்ற பல கிளைகளுண்டு; இக்கிளைகளுள் மிக்க வன்மையும், போர்த்திறனுமுடையராய்த் தமிழர்களிடத்திற் தீராப்பகை கொண்டிருந்தவர் மறவரே" என இவ்வாறு கனகசபைப் பிள்ளையவர்கள் கூறுவதன் காரணம் நமக்குப் புலப்படவில்லை. ஒளியர், அருவாளர், ஓவியர் என்போர் சில குறுநில மன்னரெனப் பட்டினப்பாலை முதலிய வற்றால் அறியலாவது. அவர்களை நாகரென்று கூறிற் கூறுக. ஒருவாற்றால் அவரும் தமழழரே, மறவர், எயினர், பரதவர், என் போரை நாகரென்று கூறுவதும், மறவர் தமிழருடன் பகைமை கொண்டிருந்தன ரென்பதும் எங்ஙனம் பொருந்தும்? இவ்வாறாறால் தமிழர், நாகர் என்ற இருபாலோரும் தமிழகத்திலும், அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பழங்காலந் தொட்டிருந்து வந்த தொன்முது மக்கள் என்பது கடைப் பிடிக்க. எனவே, இடைக்காலத்தே இந்நாட்டில் குடியேறியவர் ஆரியரென்பதும் ஈண்டே அறியற்பாலது. ஆரியரின் வருகையைப் பற்றியும் சிறிது கூறுதும்.

ரியர்கள் ஆதிகாலத்தில் நடு ஆசியாவில் வசித்தவரென்பதும், அவர்கள் அங்கிருந்து இந்தியா, பெருசியா ஐரோப்பா முதலிய இடங்கட்குப் பிரிந்து போயினரென்பதும் சரித்திரக்கார் கொள்கை. ஆரியர் முதலில் வடபெருங்கடற்கரையில் அதாவது வடதுருவப்பககத்தில் வசித்தவரென உலகமானிய பாலகங்காதரதிலகரால் முடிவு செய்யப்பெற்றுள்ளது. இவ்விருகொள்கையும் ஒன்றாக அடக்கிக் கொள்ளினும், ஆரியரது தோற்றம் பற்றி முற்றிலும் வேறுபட்ட இருகொள்கைள் முன்னிற்கின்றன. இந்தியாவிற்குத் தெற்கிழக்கிலிருந்து ஒரு காலத்தில் அழிவெய்திய குமரிகண்டத்தில் மக்கள் முதற்கன்தோன்றின ரென்பது ஒன்று. இக்கொள்கையின்படி தெற்கெ தோன்றி முதன் முதலில் வடக்கே சென்றுவிட்டவர் ஆரியர் என என்னல் வேண்டும். மத்திய ஆசியாவிலோ வடதுருவப்பக்கத்திலோ முதலில் தோன்றினர் என்பது மற்றொன்று. இவற்றுள் யாதேனும் ஒன்று உண்மையொ? அன்றி இரண்டும் உண்மையோ? எவ்வாறாயினும் ஆரியர் வடக்கிலிருந்து இந்தியாவில் குடியேறியவரல்லர் என வாதிப்பாரும் உண்டு. எனினும் அவர் தென்னிந்தியாவில் இடைக்காலத்தில் குடியேறியவர் இல்லை என மறுப்பார் யாரும் இலர். முதலில் அவர்களிடத்தும் சாதிப் பாகுபாடு இருந்ததில்லை யெனவும், பின்னரே பிரம, சத்திரிய, வைசிய, சூத்திரர் என்ற வருணப்பாகுபாடுகளை ஏற்படுபடுத்திக் கொண்டனர் எனவும் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். வருணம் என்பது நிறத்தைப்பற்றி உண்டாய பிரிவு என ஒரு சாரார் கூறுகின்றனர். மக்களின் குண கர்மங்களுக்கு ஏற்றபடி நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டன வென்று கண்ணபிரான் கூறியதாகப் பகவத்கீதை உரைக்கின்றது. இக்காலத்துப் பெரியோர்களாகிய காந்தியடிகளும், இரவீந்திரநாததாகூரும் முறையே வருணப் பாகுபாடு அறிவு நூற் கொள்கையோடு பொருந்தியது எனவும், பொருந்தாது எனவும் வேறுபடக் கருதுகின்றனரெனத் தெரிகிறது. எங்ஙனமாயினும் ஆதியில் இந்தகைய பாகுபாடுகளை ஏற்படுத்தி நெடுங்காலம் நிலவச் செய்தவர்கள் பேரறிவுடையவர்களாய் இருந்திருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. உலகியல் முட்டின்றி நன்கு நடைபெறுதற்கு இம்முறை இன்றியமையாததென அன்னார் கருதினர் போலும்? மிக ஏற்றத் தாழ்வான சட்டதிட்டங்கள் நீண்ட காலஞ்சென்ற பின்பே கற்பிக்கப் பட்டிருத்தல் வேண்டும். இப்பிரிவு ஏற்பட்ட பின்னும் ஒரு வருணத் தான் மற்றோரு வருணத்தில் கல்யாணஞ் செய்து கொள்ளுதலும் இயல்பாகவே இருந்தது. சூத்திரன் ஒழுக்கத்திற் சிறந்த பிராமணன் ஆவதும், ஒழுக்கத்தின் வழுவிய பிராமணன் சூத்திரனாலவதும் அப்பொழுது இயற்கையே. ஆரியர் இங்ஙனம் வடக்கிலிருக்கும் பொழுது தமிழகமானது நாகரிகத்தில் ஆரியநாட்டினும் விஞ்சியேயிருந்தது, ஆரியர் தமிழருடன் மாறுபாட்டுணர்ச்சி கொண்டு எழுதிய நூல்களிலும் தமிழர் நாகரிகம் மிகுத்துக் கூறப் பட்டிருக்கிறது. " ஆரியர் வருவதற்கு முன்னரே தமிழர் மிக்க நாகரிக மடைந்து விட்டன ரென்பதை, ஆரியத்தினுதவியின்றியே பெருக்கமாய்க் கிடக்கும் தமிழ்ச் சொற்களாலே நினைத்தவற்றைத் தெளியக் கூறும்படி யிருப்பதே விளக்கும். உணமையில் நிலைபெற்ற பழைய தமிழ் நூல்களில் இசை, இலக்கணம், சோதிடம், தத்துவம் முதலிய பயிற்சிகளுக்கு வேண்டிய சொற்கள் தமிழ்ச் சொற்களாகவே காணப்படுகின்றன. ஆகையால் பிரமணரோ அல்லது மற்றை ஆரியர்களோ வருதற்கு முன்னரே இக்கல்விகள் போற்றி வளர்க்கப்பட்டன என்பது திண்ணம்" என்று கனகசபைதப்பிள்ளயைவரக்ள கூறுவது முற்றிலும் உண்மையாகும். தமிழகத்தின் நாகரிகமும், செல்வப் பெருக்கும் அன்றோ ஆரியமக்கள் அதன் கட் குடிப்புகும்படியான பேரவாவை யெழுப்பிவிட்டன. ஆரியர் எப்பொழுது தமிழகத்தில் குடிப் புகுந்தனரென இப்பொழுது அறுதியிட்டுரைக்கக் கூடவில்லை எனினும் நெடுங்காலத்தின் முன்பே புகுந்துவிட்டனரென்பதற்குத் தமிழ் நூல்களே சான்று பகரும். முதலில் பிராமணர் அல்லது நோன்பிகளே வந்து கொண்டிருந்தனர். தமிழ் நாட்டிலுள்ள தெய்வத் தலங்களையும், தீர்த்தங்களையும் நோக்கி அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பதே அன்னாரது தொழில். இப்பொழுதும் தண்டு, கமண்டலம் முதலியன கைக்கொண்டு இராமேச்சுரம் முதலிய வற்றிற்குச் சென்று வருகிற வடநாட்டுப் பிராமணரை நாம் பார்க்கின்றோம். பண்டும் இப்படித்தான் சென்று கொண்டிருந்தாராவர். பின்பு அவர்கள் தமிழ்வேந்தரையடுத்துப் பல வழியாலும் அவர்களைத் தம்வயமாக்கி, தம் இனத்தவரை ஒவ்வொரு கூட்டமாகக் குடியேறும்படி செய்துகொண்டனர். தமிழரோ பிரதேசத்தினரை விருந்தேற்றுபசரிக்கும் பெருமாண்பு இயற்கையில் வாய்ந்தவர். அதனோடு, சிறிது அறிவு முதலியன வாய்ந்தாரைக் கண்டால் அவர் எப்படி யொழுகுவரென்பது கூறவேண்டுவதில்லை.

வ்வாறு ஆரிய மக்கள் தமிழ் வேந்தருடன் கலந்து நட்புச் செய்து கொண்டு, அவருதவியால் தமிழ் நாட்டிலும் நால்வருணப் பாகுபாட்டினை யேற்படுத்தினர். ஒரு நாட்டினர் வேறு நாட்டிற் சென்று செல்வாக்குப் பெற்ற பொழுதில் தமது கொள்கையை அங்கும் நிலை நாட்ட முயல்வது இயற்கைதானே. தமிழகத்தில் அறிவரும், அரசரும், வணிகரும், உழவரும், முன்பே இயல்பாக இருந்தனரெனினும், அன்னார் வேறு வேறு வகுப்பினரென்றாவது. அவர்க்கு இன்னின்ன தொழில்களே உரிய வென்றாவது வரையறை இருக்கவில்லை. ஆரியமக்களே வரையறை ஏற்படுத்தினர். எனினும் ஆரிய நால்வருணத்திற்கும், தமிழ் நாற்குலத்திற்கும் வேற்றுமை பெரிதாகும. ஆரியரில் நாலாம் வருணத்தவர் சூத்திரர் ஆவர்; மேல் மூன்று வரணத்தாரும் ஏவிய செய்தலே அவரவது தொழில், தமிழரில் நாலாம் குலத்தவர் வேளாளர் ஆவர்; அவரது தொழில் உழவு அல்லது வேளாண்மை ஆகும்.

'வேளாண் மாந்தரக் குழுதூணல்ல

தில்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி'


என்று தொல்காப்பியம் கூறுகின்றது. தமிழரில் உழவராயுள்ளோர் பெரிதும் மதிப்பிற் குரியரென்பது துணிபு. ஆரியப் பிராமணரும் தமிழரசரும் சேர்ந்து இங்ஙனம் வரையறை ஏற்படுத்தினராயினும் தமிழரில் பெரும் பகுதியினர் இதற்குக் கட்டுப் படவில்லை; இன்றைக்கும் கட்டுப்படாமலிருக்கின்றனர். தமிழர் யாவரும் அவ்வரையறையை ஏற்றுக்கொண்டிருப்பின், தொல்காப்பியர் 'ஆயர் வேட்டுவர்' என்று சூத்திரம் செய்திருத்தல் அமையாது; பழந்தமிழ் நூல்களிலெல்லாம் ஐந்திணை மக்களைத் திணைப் பெயரால் கூறுதல் பொருந்தாது; தொன்றுதொட்டு இன்றைய நாள்வரை நான்கி லடங்காத வேறு வேறு பெயர்களால் அவர்கள் கூறப்பட்டு வருதலே நாற்குல வரையறைக்கு அன்னவர் கட்டுப் படவில்லை யென்பதை நன்கு விளக்கும். இது குறித்துக் கனகசபைப்பிள்ளையவரக்ள கூறுவதும் அறிந்து கொள்ளத்தக்கது. அவர் சொல்வது:-


"கிறித்துவுக்கு முந்திய நூற்றாண்டுகளில் தொல்காப்பியர் எனபவர் தமிழில் இலக்கணம் செய்து, தம் பெயரை அந்நூலுக்கு வைத்து தொல்காப்பியம் என வழங்கினார். அவர், அறிவர் அல்லது தமிழ் முனிவரைப்பற்றிப் பல இடங்களில் குறித்திருக்கின்றனர். ஆனால், மரபியலில், அவரைப்பற்றி ஒன்றுஞ் சொல்லாது விடுத்து, பூணூல் தரித்த பார்ப்பனரை முதல் வகுப்பினராகக் குறிக்கின்றார். அரசரை இரண்டாவது வகுப்பினராகவும், வணிகரை மூன்றாவது வகுப்பினராகவும் கூறுகின்றார். பின்பு, வேளாளரை நான்கவது வகுப்பினராகக் கொண்டு அவர்க்கு உழுதலைத்தவிர வேறு தொழிலில்லை என்று சொல்லுகிறார் . தமிழரை வருணபேதத்தில் தமக்குக் கீழாக்கப் பிராமணர் செய்த முதல் முயற்சி இதுதான். தமிழகத்தில் சத்திரிய, வைசிய, சூத்திரப் பாகுபாடு இல்லாத பொழுது தமிழரின் மேம்பட அன்னார்க்குக் கூடவில்லை. தொல்காப்பியர் ஆயரையும், வேட்டு வரையும் பற்றிக் கூறுகின்றார். ஆனால் வருணப் பாகுபாட்டிற்கு ஒத்து வராமையால் அவர்களையம், மறவர், வளையர், என்போரையும் அவர் மரபியலில் குறிக்கக் கூடவில்லை" என்பது.


பின்பு தமிழ் வேந்தர்கள் வேள்வியியற்று மாறு கற்பிக்கப்பட்டு, எண்ணிறந்த வேள்விகளை யியற்றினர். அவ்வேள்விகளில் எல்லாம் பிராமணர் ஆசிரியராயிருந்து வந்தமையின் அவரது பெருமை பெரிதும் மிகுவதாயிற்று. ஆரியரும் தமிழரும் மதக்கோட்பாட்டில் ஒருவாற்றால் ஒன்றுபட்டனர். இந்தியநாடு முழுதுமுள்ள ஆரியரும் தமிழருமாகிய அனைவர்க்கும் ஒரே வேதம் மத நூலாயிற்று. தமிழ் நாட்டிலுள்ளாரில் பிராமணரை ஆரியரென்றும், ஏனையரைத் திராவிட ரென்றும் பிரித்தலும் பொருந்தாது. ஆரிய நாட்டிலிருந்து பிராமணர் மட்டும் தமிழகத்தில் குடியேறினர் என்பது பொருந்தாமையின் தமிழருள்ளும் ஆரியர் கலந்திருக்கின்றனர் என்பது உண்மை. பிராமணரும் வதுவையால் (திருமணத்தால்) கலந்து விட்டனர். ஆகலின் அவரை வேறு பிரிப்ப தென்பது எங்ஙனம் பொருந்தும்.


திருவாளர் பி.டி.சீனிவாசையங்கார் ( எம்.. , எல்.டி..) அவர்கள் பின் வருமாறு கூறுவர்: "இப்போழ்து இந்தியாவில் இருக்கும் 'ஆரியர்' 'தமிழர்' என்பாரைப்பற்றிப் பார்க்குங்கால் அவர்கள் 'ஆரியத் தமிழர்' 'தமிழ் ஆரியர்' என்னும்படி ஒன்று பட்டுக் கலந்து கொண்டமையால் தனி ஆரியராயினும் காண்பதரிது. வடபாலிருந்து முன்வந்த ஆரியர் என்னும் ஆற்று வெள்ளம் இந்தியாவென்னும் தனித்தமிழ் நாட்டிலுள்ள தமிழரென்னும் பெருங்கடலுட்புக்க பின்னர் ஆரியர் தமிழரேயாயினர் என்று கூறுதலே சால்புடைத்து" பல்லாயிரம் ஆண்டுகளாக ஓரிடத்திலிருந்து, பழக்க வழக்கங்களில் ஒன்று தலுற்று ஒரு கடவுளை வழிபட்டு நண்பராய் வாழ்ந்து வவோரக்குள் காலதே இயல்புக்கேற்பச் சில காரணங்களால் பிரிவு உண்டயினும், அதனை நீடிக்க விடாது பிரிவின் காரணங்களை யறிந்து விலக்கி, ஒற்றுமையாய் வாழ்தலே கடனாம். பழைய தமிழ்ச்சங்க நாளிலே பிராமணருள்ளிட்ட அனைவரும் தமிழைத் தங்கள் தாய் மொழியாக் கொண்டு மதித்துப் போற்றி வந்திருக்கின்றனர் என்பதும், மற்றும் சிறிது பிற்காலத்திருந்த திருஞான சம்பந்தர் முதலிய பெரியாரெலல்லாம் தம்மைத் தமிழரென்றே பெருமையுடன் பாராட்டி வந்திருக்கின்றனர் என்பதும் அறியற் பாலவாம். சமய குரவர் முதலாயினார் பெருமையினையும், அவர்கள் செய்து வைத்துள்ள உதவிகளையும் தமிழ் மக்கள் சிறிதும் மறப்பாரல்லர். அங்கெல்லாம் வகுப்பு வேற்றுமையினை யேற்றுவோர் அறிவிலிகளேயாவர். உண்மைத் தமிழராயினாரும், உண்மை அறிவுடையாரும் அவர்களை என்றென்றும் தெய்வமாகக் கொண்டு போற்றுவர் என்க.


இனி, இப்பொழுது வழங்குவது போல ஐயர், ஐயங்கார், நாயுடு, செட்டி, பிள்ளை, முதலியார் என்னும் பட்டப் பெயர்களாவது, கள்ளர் வகுப்பினர் முதலானோர் பால் காணப்படும் அளவற்ற பட்டப் பெயர்களாவது சங்க நாளில் வழங்கவில்லை. அவையெல்லாம் இடைக் காலத்துத் தோன்றியவையே. ஐயர் என்பது முமனிவர் அல்லது பெரியாருக்கே சிறப்பாய் வழங்கியது. கண்ணப்பர், நந்தனார் முதலிய வேறு குலத்துப் பெரியார்களையும் சிறப்புப்பற்றி ஐயர் என ஆன்றோர்வழங்கியிருக்கின்றனர். சிறப்புப் பெயர் வருங்காலும்,

'சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவீக்கும்

இயற்பெயர்க் கிளவி முற்படக்ட கிளவார்'


என்ற விதிப்படி, அமர முனிவன் அகத்தியன், தெயவப்புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன் என்றாற் போல இயற் பெயர்க்கு முன் வருதலே மரபு. பிற்காலத்தில் தான் பெயர்கள் இம்முறை மாறி வரலாயின. சிறப்புப் பெயரும் முன்பு யாவர்க்கும்வழங்குவனவல்ல. எனவே பண்டை மக்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டப் பெரிதும் விரும்பவில்லையென்பது போதரும்.


வளரும்.....