அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

ஜல்லிக்கட்டுக்கு யாருமே கேட்காமலேயே



ஜல்லிக் கட்டுக்கு யாருமே கேட்காமலேயே நீதி மன்றம் தடை விதித்த உண்மை தற்பொழுதுதான் பரவலாக வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. எல்லோரும் இது ஏதோ பீட்டா மற்றும் விலங்குகள் நல வாரியம் போன்ற அமைப்புகள் போட்ட மனுக்களால் வந்த வினை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால் யாருமே, எந்த தனி மனிதரோ அல்லது அமைப்புகளோ கேட்காமலேயே நீதிமன்றம் ஜல்லிக் கட்டுக்குத் தடை விதித்திருக்கிறது. இந்த தடையை விதித்தது சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை. தடை விதித்தவர் நீதிபதி ஆர்.பானுமதி. இவர் தற்போது உச்ச நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுகிறார்!
நடந்தது இதுதான். மார்ச் 29, 2006 ல் உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் கரிசல்குளம் பஞ்சாயத்து துணைத் தலைவர் கே.முனுசாமி தேவர் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்கிறார். இவரது கோரிக்கை என்னவென்றால் ராமநாதபுரம் தனியன்கூட்டம் என்ற இடத்தில் ரேக்ளா ரேஸ் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்பதுதான். இந்த ரிட் மனு நீதிபதி பானுமதி முன்பு விசாரணைக்கு வருகிறது. அன்று முனுசாமி தேவருக்காக ஆஜரான வழக்கறிஞர் எல்.ஷாஜி செலான் இவ்வாறு கூறுகிறார்:
"நான் மிகவும் சாதாரணமாக, பதற்றமின்றித்தான் வாதாட ஆரம்பித்தேன். ஏனெனில் இதற்கு முன்பு பல மாவட்டங்களிலும் ரேக்ளா ரேஸ் பந்தயத்தை நடத்துவதற்கு பல நீதிபதிகள் வெவ்வேறு வழக்குகளில் அனுமதி கொடுத்திருந்தார்கள். ஆனால் திடீரென்று நீதிபதி இவ்வாறு பேச ஆரம்பித்தார்: ரேக்ளா ரேஸ் பந்தயங்களை நாம் எப்படி அனுமதிக்கலாம்? இதில் விலங்குகள் கொடுமைப்படுத்தப் படுகின்றன. விலங்குகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டத்திற்கு எதிரானது இந்தப் போட்டிகள்,'' என்று தெரிவித்ததாகக் கூறும் ஷாஜி அடுத்து நடந்ததை சொல்லுகிறார்;
"உணவு இடைவேளை வந்தது. பின்னர் நீதிமன்றம் கூடியது. யாருமே கேட்காமலேயே, ஜல்லிக்கட்டு பற்றி எந்த பிரஸ்தாபமும் இல்லாமலேயே ரேக்ளா ரேஸ், எருது ஓட்டப் பந்தயம் மற்றும் ஜல்லிக் கட்டு ஆகியவற்றை தடை செய்வதாக நீதிபதி திடீரென்று அறிவித்தார். என்னுடைய மனுவில் நான் குறிப்பிட்டிருந்த எதிர் மனு தாரர்கள் அதாவது அரசு தரப்பு உள்ளிட்டவற்றின் கருத்தை நீதிபதி கேட்காமலேயே திடீரென்று இந்த தீர்ப்பை அளித்தார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்,'' என்று கூறும் ஷாஜி அன்றைய தினம் எதையும் கேட்கும் மன நிலையில் நீதிபதி பானுமதி இல்லையென்றும் கூறுகிறார்.
"நான் எனக்கு ஆதரவாக நீதிபதி எஃப். எம். இப்ராஹீம் கலிஃபுல்லா வழங்கிய ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டினேன். பிள்ளையார்நத்தம் தூத்துக்குடியில் ஆகஸ்ட் 13, 2004ல் ரேக்ளா ரேஸ் நடத்த நீதிபதி கலிஃபுல்லா அனுமதி வழங்கியிருந்தார். இவரும் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தற்போது ஓய்வு பெற்று விட்டார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள நீதிபதி பானுமதி மறுத்து விட்டார். சட்டங்கள் என்பவை காலத்துக்கு ஏற்ப மாற வேண்டும். கடந்த கால சட்டங்கள் தற்போதய நிலவரத்துக்கு பொருந்தாது. மேலும் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவது குறித்த விழிப்புணர்ச்சி மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படுவதும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது,'' என்று கூறி விட்டார் நீதிபதி பானுமதி என்கிறார் ஷாஜி.
இந்தத் தீர்ப்பை எதிர்த்துத்தான் தமிழக அரசு டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீட்டுக்கு 2006 பிற்பகுதியில் போனது. அப்போதுதான் இந்த மேல் முறையீட்டில் விலங்குகள் நல வாரியம், பீட்டா போன்ற அமைப்புகள் வந்து சேர்ந்து கொள்ளுகின்றன. சில பாதுகாப்பு அம்சங்களுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உயர்நீதி மன்றம் அனுமதி வழங்குகிறது. பின்னர் 2009 ல் அன்றைய திமுக அரசு இதற்கான சட்டம் ஒன்றினைக் கொண்டு வருகிறது. 2011 ல் காட்சிப்படுத்தப்படுத்தப்படக் கூடாத விலங்குகள் பட்டியிலில் காளையை அன்றைய காங்கிரஸ் அரசு சேர்த்துவிடுகிறது. ஆனால் 2014 மே மாதம் 7 ம் தேதி நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பினாகி சந்திர கோஸ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் திமுக அரசு கொண்டு வந்த ஜல்லிக்கட்டு முறைபடுத்தும் சட்டத்தை ரத்து செய்து விடுகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தடையும் விதித்து தீர்ப்பு வழங்கி விடுகிறது.
அந்தாண்டு இறுதியில் நீதிபதி ராதாகிருஷ்ணனுக்கு பீட்டா அமைப்பு ஒரு விருது வழங்குகிறது. "ஆம். 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ராதாகிருஷ்ணனுக்கு பீட்டா அமைப்பு ஆண்டின் சிறந்த மனிதர் அதாவது Man of the year 2014 என்ற விருதினை வழங்குகிறது. விலங்குகள் நலனில் அதிக அக்கறை காட்டியதற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது'' என்கிறார் வழக்கறிஞர் ஷாஜி.
ஜல்லிக்கட்டுக்கு எதிராக விலங்குகள் நல வாரியம், பீட்டா மற்றும் சில விலங்குகள் நல ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் போட்டிருந்தனர். இதில் சிலரது சார்பாக அன்றைய காலகட்டத்தில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர்தான் தற்போதய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி. அதாவது தற்போதய மோடி அரசின் தலைமை வழக்கறிஞர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு கூடாது, அதற்கு தடை வேண்டும் என்று கேட்டு வாதாடினார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஆகவே அந்த முகுல் ரோத்தகி எப்படி தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அரசின் சார்பாக ஆஜராகி வாதாடப் போகிறார்?
"ஆம். இதுவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்த ஒரு வழக்கறிஞர், பின்னர் அதற்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்து வாதாட முடியாதுதான். அப்படியென்றால் வேறு மூத்த வழக்கறிஞர்களை வைத்து மத்திய அரசு, விரைவில் கொண்டு வரப்படவிருக்கும் அவசர சட்டத்தைக் காப்பாற்ற வாதாட வேண்டியிருக்கும். மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தாலும் அதனை எதிர்த்து நிச்சயம் பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்துக்குப் போகும். அப்போது மத்திய அரசும் நீதிமன்றத்தில் வந்து நிற்கும். அந்த கட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை ஆதரித்துத் தான் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாட வேண்டியிருக்கும்'' என்கிறார் சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஒருவர்.
"கடந்த இரண்டு நாட்களாக ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசுக்கே அவசர சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது என்று திரும்ப திரும்ப முகுல் ரோத்தகி கூறுவதற்கும் காரணம் இல்லாமல் இல்லை,'' என்று நமட்டுச் சிரிப்புடன் மேலும் கூறுகிறார் அந்த வழக்கறிஞர்


இது தெரியாமல் பல லட்சமக்கள் போராட்டம் தேவையா?
எப்படியோ ஒரு ஒற்றுமையை ஏற்படுத்திவிடடார்கள்


ஏறு தலுவதல் தொடறும்

Labels:

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு