அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சுவர் இடிப்பு

ஈழத் தாயா? அலறும் உணர்வாளர்கள்!
[ சனிக்கிழமை, 16 நவம்பர் 2013, 06:21.43 AM GMT ] [ நக்கீரன் ]
தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலை நினைவாகவும் போரில் கொல்லப்பட்ட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாகவும் தஞ்சை விளாரில் உருவாக்கப்பட்டிருக்கிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம். அதன் சுற்றுச்சுவரையும் பூங்காவையும் அரக்கத்தனமாக இடித்துத் தள்ளியிருக்கிறது ஜெயலலிதா அரசு.
ஈழத்தமிழர்களுக்காக 12-ந்தேதி மாலை அவசர சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி பரபரப்புக் காட்டினார்கள். அந்த பரபரப்பு அடங்குவதற்குள், முற்றத்தின் சுவரை இடித்து, "இதுதான் நான்' என்று நிரூபித்திருக்கிறார்கள்.
முற்றம் விவகாரத்தில் என்ன நடக்கிறது? ஆட்சி அதிகாரிகள் மற்றும் உணர்வாளர்களிடம் விசாரித்தபோது,
நடராஜனை மையப்படுத்தியே இந்த முற்றத்தை உருவாக்கும் முயற்சியை எடுத்தார் நெடுமாறன். முற்றம் முடியும் தறுவாயில் யாரை வைத்து இதை திறக்கலாம்'' என இருவரும் ஆலோசித்தனர். அப்போது, "ஜெயலலிதாவை திறக்கச் சொல்லி கேட்கலாம். அவர் திறந்தால், முற்றத்துக்கு ஒரு இமேஜும் அரசியல் ரீதியாக சில நன்மைகளும் கிடைக்கும்' என்று முடிவு செய்தார்கள். ஆனால், அவர் வருவாரா என்கிற சந்தேகம் நடராஜனுக்கு இருந்தது. காரணம், தன் மீது ஜெயலலிதாவுக்கு இருக்கும் கோபம் குறையவில்லைங்கிறதுதான். "நான் தேதி கேட்டால் அவர் ஒப்புக்கொள்வார்' என்கிற நம்பிக்கையைத் தந்தார் நெடுமாறன். அதன்படி, தேதி கேட்டு ஜெயலலிதாவுக்கு கடிதம் தந்தார் நெடுமாறன். ஜெயலலிதாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. நான்கு மாதம் காத்திருந்தார். பலனில்லை. அடுத்து நினைவூட்டல் கடிதம் கொடுத்தார். எந்த சமிக்ஞையும் கிடைக்கவில்லை. இதில் மேலும் ஒரு மாதம் கடந்து போனது. கடைசியாக, தா.பாண்டியன் மூலம் முயற்சித்தனர். இதனை ஜெயலலிதாவின் கவனத்துக்கு தா.பா.கொண்டு சென்ற போது, "எனக்கு எதிராக செயல்பட்டவர்களை வைத்துக்கொண்டு முற்றம் உருவாக்குவார்கள். அதை நான் திறக்க வேண்டுமா? இதற்கு ஏன் நீங்கள் வந்தீர்கள்?' என்று கடுமையாக கடிந்துகொண்டார். தா.பா.வுக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. ஜெயலலிதாவின் மனநிலையை நெடுமாறனிடம் தெரிவித்தார்.
அதன் பிறகே, நடராஜன் மீதான கோபம் ஜெ.வுக்கு குறையவே இல்லை என்பதை அழுத்தமாகப் புரிந்துகொண்டும், "இனி அவருக்காக காத்திருப்பதில் பலனில்லை. ரொம்பவும் அவமானப்படுத்தப் படுகிறோம்' என்பதை உணர்ந்தும் முற்றத்தை நாமே திறந்துவிடலாம் என முடிவெடுத்து... அதற்கான தேதியை (நவம்பர் 8, 9, 10) குறித்தனர்'' என்று சுட்டிக்காட்டியவர்கள், முற்றம் திறப்பது தொடர்பாக ஆளுந்தரப்பு என்னென்ன மாதிரியான இடையூறுகளையும் அவமானங்களையும் செய்தது என்பதை விரிவாக விவரித்தார்கள்.முற்றத்தின் 3 நாள் விழா நிகழ்ச்சி யும் நடந்து முடிந்தது. இதனையடுத்து சில பல ஆலோசனைகளை நடத்தி சில உத்தரவுகளைப் பிறப்பித்தார் ஜெ.
13-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்துத் தள்ள இராட்சத பொக்லைனோடு குவிந்துவிட்டனர் நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள். மாவட்ட எஸ்.பி. தர்மராஜன் தலைமையில் போலீஸும் அங்கு குவிக்கப்பட்டது. அந்தச் செய்தி அறிந்து 5.30-க்கெல்லாம் ஸ்பாட்டில் நாம் ஆஜராகி விட்டோம்.
முற்றத்தை முற்றுகையிட்டிருந்த 200 போலீஸாரும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் முற்றத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி விரிந்திருந்த பூங்காவில் நுழைந்து, செடிகளையெல்லாம் தூக்கி வீசி துவம்சம் செய்தனர். 5 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்டிருந்த கற்களாலான நீர்வீழ்ச்சியை உடைத்து எறிந்தது பொக்லைன். இதைக்கண்டு பதறிய நாம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரி மாரிமுத்துவிடம் கேள்வி எழுப்பிய போது, இந்த சாலையோர பூங்காவை ஓராண்டு பராமரிக்க அனுமதி கொடுத்தோம். ஓராண்டு எப்பவோ முடிந்துவிட்டது. அதனை புதுப்பிக்க அனுமதி கேட்டார்கள். நாங்கள் கொடுக்கவில்லை. அதனால்தான் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்றார் ரொம்பவும் கூலாக.
நம்மிடம் பேசிக்கொண்டே, அந்த சுவரை இடிங்க. ஏன் ஸ்லோவா இருக்கீங்க?'' என ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார் மாரிமுத்து. பொக்லைன் இடிப்பினால் டமால், டுமால் என சத்தம் அப்பகுதியையே கலக்கி எடுத்தது. முற்றத்தின் வளாகத்திலே தங்கியிருந்த நெடுமாறன், அந்த சத்தத்தைக் கேட்டு லுங்கி- பனியனுடனேயே ஓட்டமும் நடையுமாக பதட்டத்துடன் ஓடி வந்தார். "என்ன பண்றீங்க என்ன பண்றீங்க'ன்னு பதறித் துடித்தார். யாரும் அவரது குரலுக்கு மரியாதை தரவில்லை. உடனே நடராஜன், வைகோ, பெ.மணியரசன் அயனாவரம் முருகேசன் ஆகியோருக்கு தகவல் தந்து விட்டு, நிர்மூலமாக்கப்பட்டுக் கிடந்த பூங்காவை ஏக்கத்துடன் பார்த்தார். அவரது கண்களிலிருந்து அவரையும் அறியாமலே நீர் வடிந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மணியரசன், குடந்தை அரசன், முருகேசன் வந்து சேர்ந்தனர்.
இடிப்பு வேலையை பார்த்த மணியரசன், எந்த அடிப்படையில் இடிக்கிறீங்க? இடிக்கிறதுக்கான உத்தரவைக் காட்டுங்க'' என்று அதிகாரிகளிடம் கேட்க, ""ஆர்டரெல்லாம் ஒண்ணும் கிடையாது.. இடிக்கிறோம். அவ்வளவுதான்'' என்று சொல்லிவிட்டு, ஏதோ பேப்பரில் கிறுக்கிய ஒரு தாளை மட்டும் காட்டினார்கள். ஒரு மணி நேரத்தில் வந்த வேலையை திருப்திகரமாக முடித்து விட்ட செய்தியை மேலிடத்துக்கு தந்தனர். பிறகு சுத்தமாக நிர்மூலமாக்கிவிட்டு அப்பகுதியை முள்கம்பி போட்டு வேலி அமைத்து "இது நெடுஞ்சாலைக்கு சொந்தமானது' என்ற பெயர் பலகையை வைத்தனர்.
இந்த தகவலை அறிந்த உணர்வாளர்கள் அப்பகுதியில் குவிந்து, திடீரென சாலை மறியலில் இறங்க ஏரியா பதட்டமானது. இளைஞர்கள், நெடுஞ்சாலைத் துறை போட்டிருந்த முள் வேலி கம்பிகளை பிய்த்து எறிந்தார்கள். பெயர் பலகையைத் தூக்கி வீசினார்கள். அருகிலேயே, ஊராட்சி சார்பில் அம்மா திட்டத்திற்காக ஜெ. படம் போட்ட பலகை வைக்கப்பட்டிருந்தது. அந்த போர்டை உடைத்து அதை காலில் போட்டு மிதித்துக்கொண்டே.. "ஜெயலலிதா ஒழிக, ரெட்டை வேடம் போடும் ஜெயலலிதா ஒழிக' என்றெல்லாம் ஆவேசமாக கோஷம் எழுப்பினர். அப்படியெல்லாம் கத்தக்கூடாது... கத்தக் கூடாது' என நெடுமாறன் பதறியது அங்கு எடுபடவில்லை. "இனியும் பொறுக்க முடியாது' என நினைத்த போலீஸ், உணர்வாளர்கள் மீது காட்டுத்தனமாக தடியடி நடத்தியது. சிதறி ஓடியது கூட்டம். ஓடி... ஓடி பலரையும் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இந்த சம்பவத்தின் போது, தஞ்சையில் நடராஜன் இருந்தும் சம்பவ இடத்துக்கு போகவில்லை. மேலிடத்திலிருந்து வந்த உத்தரவை அடுத்து, நெடுமாறனை கைது செய்ய அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றார் போலீஸ் எஸ்.பி.! ""கைது செய்கிறேன். ஏதேனும் புத்தகம் வேணும்னா எடுத்துக்குங்க'' என்றார். சில பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பிய நெடுமாறனை வேனில் ஏற்றினர். அப்போது, ""அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்துவேன்'' என்றார். அவரது குரலில் கம்பீரம் குறைந்திருந்தது.
மதியம் 12 மணிக்கு முற்றம் வந்த வைகோவை உள்ளே போகவிடாமல் போலீஸ் தடுக்க, ""இது எங்கள் முற்றம். என்னை தடுக்க நீங்கள் யார்?'' என்றவர், பத்திரிகையாளர் களிடம், ""இது தமிழர்களின் சொத்து. இதை உன்னால் (ஜெ.) தடுக்க முடியாது. தடுக்க நினைத்தால் மண்டை உடை யும். கேள்வி கேட்க ஆள் இல் லையென்று நினைக்கிறாய். இந்த பாவத்துக்கு ஜெய லலிதாவுக்கு மன்னிப்பே கிடையாது. இது போயஸ் தோட்டத்து சொத்தல்ல. தமிழன் சொத்து. இந்த செய லுக்காக உலகத் தமி ழர்கள் ஜெயலலி தாவை பார்த்து காறித் துப்புவார்கள். நாங்கள் யார் சொத்தையும் ஆக்கிரமிக்கவில் லை. டான்சி நிலத் தையே ஆக்கிரமித்தவர் ஜெய லலிதா. ராஜபக்சே பூமியில் கொடுமைகள் நடந்தன. இங்கேயுமா?''’’என்று ஆவேசமாக குரல் கொடுத்து விட்டு, திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நெடுமாறனை சந்தித்துவிட்டு கிளம்பினார்.
நள்ளிரவில் நெடுமாறன் உட்பட 86 பேர் மீது 5 செக்ஷன்களில் வழக்குப் பதிவு செய்தனர். திருமண மண்டபத்துக்கே வந்த நீதிபதி, அவர்களை 15 நாள் ரிமாண்ட் செய்ய இரவு 3.15 மணிக்கு திருச்சி சிறையில் அனைவரையும் அடைத்தது போலீஸ். இதற்கிடையே, தன்னையும் கைது செய்ய தேடுகிறார்கள் என அறிந்த நடராஜன், போலீஸ் கண்ணில் சிக்காமல் முன் ஜாமீன் அப்ளை செய்துவிட்டு தப்பி ஓடிக் கொண்டேயிருக்கிறார்.
முற்றத்தின் பணிகளில் பங்களிப்பு செய்த உணர்வாளர்கள் சிலரிடம் பேசிய போது,
முற்றத்திற்கெதிராக நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா முடிவு செய்தபோது, இதனால் உங்களுக்கு நெகடிவ் இமேஜ் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அத னால் அதை சரிசெய்வது எப்படி? என யோ சித்தபோது கிடைத்த ஐடியாதான் சட்ட மன்றத்தின் அவசர கூட்டம். ஆக, இடிப்பி னால் வரும் நெகடிவ் இமேஜை சரிகட்டவே, சட்டமன்றத் தீர்மானம் என்கிறார்கள்.
எல்லா வகையிலும் ஜெயலலிதா ஆட்சியும் அதிகாரமும் சிறப்பாக இருக்கிறதுஎன்றவர்கள் இன்று, ஈழத்தாயா? என்று அலறுவதை கேட்க முடிகிறது.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு