அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

43 வது ஆண்டு நினைவு அஞ்சலி


புயலால் அழிந்த தனுஷ்கோடியில் 43 வது ஆண்டு நினைவு அஞ்சலி


1964_
ம் ஆண்டு டிசம்பர் 23_ந்தேதி, தென் தமிழ்நாட்டை பயங்கர புயல் தாக்கியது. அப்போது தனுஷ்கோடி கடலில் மூழ்கிவிட்டது. 1,500 பேர் பலியானார்கள்.


தமிழ்நாட்டில் பல்வேறு சமயங்களில் பெரும் புயல் வீசியிருக்கிறது. எனினும், 1964 டிசம்பரில் வீசிய புயல், வரலாறு கண்டறியாத அளவுக்கு பயங்கரமாக இருந்தது.


கடல் புகுந்தது


மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில், பேய் மழையுடன் புயல் வீசியது. ராமேசுவரத்தில், புயலின் வேகம் கடுமையாக இருந்தது.


புயல் காரணமாக, கடலில் அலை பயங்கரமாக இருந்தது. தென்னை மர உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்து கரையில் மோதின. திடீர் என்று கடல் பொங்கி, ராமேசுவரம் தீவில் உள்ள, தனுஷ்கோடிக்குள் புகுந்தது.


1,000 பேர் சாவு


அந்த சமயத்தில், தனுஷ்கோடி ரெயில் நிலையத்திலும், சுங்க இலாகா பரிசோதனை நடைபெறும் இடத்திலும் சுமார் ஆயிரம் பேர்கள் இருந்தனர்.


அவர்களில் 500 பேர் செத்திருக்கவேண்டும் என்று முதலில் வந்த தகவல்கள் கூறின. ஆனால், தனுஷ்கோடி அடியோடு அழிந்து, கடலில் மூழ்கி விட்டதால், சாவு எண்ணிக்கை 1,000_க்கு மேல் இருக்கும் என்று பின்னர் மதிப்பிடப்பட்டது.


பாம்பன் பாலம் நாசம்


தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் என்ற இடத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைப்பது "பாம்பன் பாலம்." இது கடலில் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது, இந்தப்பாலம் இரண்டாகப் பிரிந்து, கப்பலுக்கு வழிவிடும்.


இந்த அதிசயப் பாலம், பலத்த சேதம் அடைந்தது.


ரெயில் மூழ்கியது


புயல் வீசுவதற்கு முன், ராமேசுவரத்தில் இருந்து, தனுஷ்கோடிக்கு ஒரு ரெயில் புறப்பட்டுச் சென்றது.


தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்தபோது, பலத்த மழையுடன் சூறாவளி வீசியது. உடனே ரெயில் நிறுத்தப்பட்டது.


எனினும் சற்று நேரத்தில் கடல் பொங்கி, தனுஷ்கோடியை விழுங்கியபோது, ரெயிலும் கடலில் மூழ்கியது.


ரெயிலில் 115 பேர் பயணம் செய்தனர். அவர்கள் அவ்வளவு பேரும் கடலில் மூழ்கி பலியாகி விட்டார்கள் என்று, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


40 மாணவர்கள் பலி


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 40 கல்லூரி மாணவர்கள், ராமேசுவரத்துக்கு உல்லாசப் பயணம் வந்திருந்தனர்.


கடலில் மூழ்கிய ரெயிலில் அவர்கள் பயணம் செய்தனர் என்ற தகவல் பின்னர் தெரியவந்தது. அந்த 40 பேரும் கடலில் மூழ்கி இறந்து விட்டார்கள்.


கட்டிடங்கள் இடிந்தன


தனுஷ்கோடியில் இருந்த பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பெரும்பாலான வீடுகளும், கட்டிடங்களும் கடலுக்குள் மூழ்கிவிட்டன.


தந்தி, டெலிபோன் கம்பங்கள் சாய்ந்து விழுந்து விட்டதால், ராமேசுவரம் தீவுக்கும், வெளி உலகத்துக்கும் இடையே தகவல் தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் சேதத்தின் முழு விவரங்களும் உடனடியாக சென்னைக்குத் தெரியவில்லை.


மக்கள் தவிப்பு


கடலுக்குள் மூழ்கி பலியாகாமல் உயிர் தப்பியவர்கள், மணல் திட்டுகளில் தவித்தனர்.


அவர்களைக் காப்பாற்ற கப்பல்கள், மோட்டார் படகுகள், "ஹெலிகாப்டர்" விமானங்கள் அனுப்பப்பட்டன.


விமானத்தில் குடிதண்ணீர்


ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதிக்கு முன்பு ரெயில் மூலம்தான் குடிநீர் அனுப்பப்பட்டு வந்தது. புயல்_மழை வீசியதைத் தொடர்ந்து அங்கு குடிநீரே இல்லாமல் போய்விட்டது.


உயிர் தப்பியவர்கள், குடிக்கத் தண்ணீர் இன்றி தவித்தனர். அவர்களுக்காக ஹெலிகாப்டர் விமானத்தில் தண்ணீர் அனுப்பப்பட்டது. விமானத்தில் இருந்து சாப்பாடு பொட்டலங்களும் போடப்பட்டன.


உயிர் பிழைத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மதுரையில் இருந்தும், மற்ற இடங்களில் இருந்தும் ராமேசுவரத்துக்கும் டாக்டர்கள் அனுப்பப்பட்டனர்.


"சாரதா" என்ற கப்பல், தனுஷ்கோடிக்குச் சென்று 135 பேர்களை காப்பாற்றியது. அவர்கள், மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு, கரையில் இறக்கி விடப்பட்டனர்.


தனுஷ்கோடி பகுதியில் வெள்ளம் வடிவதற்கு 4 நாட்கள் ஆயின. கடற்கரையில் எங்கு பார்த்தாலும், பிணங்கள் குவியல் குவியலாகக் கிடந்தன.


அதிசய பாலம்


புயல்_கடல் கொந்தளிப்பால் சேதம் அடைந்த பாம்பன் பாலம், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. இதை, 1914_ம் ஆண்டில், தென் இந்திய ரெயில்வே தலைமை என்ஜினீயராக இருந்த ஒசன்சே என்ற வெள்ளைக்காரர் அமைத்தார்.


இந்தப்பாலம் கட்டப்படுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் இருந்து படகு மூலம்தான் ராமேசுவரத்துக்கு போகவேண்டி இருந்தது.


6 ஆயிரம் அடி


இந்தப்பாலம் 6,700 அடி நீளம் கொண்டது.


இதை அமைக்க 2,600 டன் இரும்பு செலவாயிற்று. கட்டி முடிக்க 1 ஆண்டு பிடித்தது.


முன் காலத்தில், ராமேசுவரம் தனித்தீவாக இருக்கவில்லை. தமிழ்நாட்டுடன் சேர்ந்தே இருந்தது.


1573_ம் ஆண்டில் பெரும் புயல் அடித்து, கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது ராமேசுவரம் பகுதி துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறிவிட்டது. அதன்பின், பாம்பன் பாலம் கட்டப்படுகிறவரை, படகு மூலமாகவே மக்கள் ராமேசுவரம் போய் வந்தார்கள்.


பிணங்களை கழுகுகள் தின்றன


தனுஷ்கோடிக்கு நேரில் சென்ற "தினத்தந்தி" நிருபர் தெரிவித்த தகவல் வருமாறு:-


"நானும், என் நண்பர்களும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தனுஷ்கோடிக்கு சென்றோம். பல இடங்களில் நீந்திச் சென்றோம்.


கடலில் மூழ்கிய ரெயிலில் 300 பேர் இருந்ததாக தெரியவருகிறது. அவ்வளவு பேரும் பலியாகிவிட்டார்கள். என்ஜினுக்கு கீழே டிரைவரின் பிணம் கிடந்தது.


கடலில் பிணங்கள் மிதக்கின்றன. நாங்கள் 50 பிணங்கள் வரை எண்ணினோம். பிணங்களை கழுகுகள் கொத்தித்தின்ற கோரக்காட்சியைக் கண்டு மனம் பதறியது. எங்கு போனாலும் பிண நாற்றம் தாங்க முடியவில்லை.


1,000 பேருக்கு மேல்


தனுஷ்கோடியில் வசித்த சுமார் 2 ஆயிரம் பேரில், பாதிக்கு மேற்பட்டவர்கள் பலியாகிவிட்டார்கள். உயிர் தப்பியவர்கள் கதறி அழுவதைப் பார்க்கும்போது, நெஞ்சம் உருகுகிறது.


சோறு, தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். பலர் குடும்பத்தோடு ராமேசுவரத்தை நோக்கி நடந்து செல்கிறார்கள்.


ராமேசுவரம் தெருக்களில் உடைந்த படகுகள் கிடக்கின்றன. மழையில் உடைமைகள் அனைத்தையும் இழந்த ஒருவர், கட்டிக்கொள்ள வேட்டி இல்லாமல், இறந்து போன தன் மனைவியின் சேலையால் உடம்பை மூடி மறைத்துக்கொண்டு அழுத காட்சி கல் மனதையும் கரையச் செய்வதாய் இருந்தது."


இவ்வாறு நிருபரின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.


குழிகளில் பிணங்களை புதைத்தனர்


இறந்தவர்களில் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 100 பெயர்கள் அடங்கியிருந்தன.


அடையாளம் தெரியாத, அழுகிப்போன பிணங்களை பெரிய குழிகளைத் தோண்டி புதைத்தார்கள். 28_ந்தேதி வரை 150 பிணங்கள் புதைக்கப்பட்டன.


இலங்கையிலும் சேதம்


தனுஷ்கோடியை புயல் தாக்கிய அதே நேரத்தில், இலங்கையின் வடக்கே, தலைமன்னார், யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் பயங்கரப்புயல் வீசியது. (இந்தப் பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள்.)


தலைமன்னார் பகுதியில் 1,500 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர்களில் பலருடைய பிணங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு, தமிழ்நாட்டின் கரை ஓரப்பகுதிகளில் ஒதுங்கிக் கிடப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.


ராணி துயரம்


தனுஷ்கோடியில் கடும் புயல் வீசி, கடல் கொந்தளிப்பில் நூற்றுக்கணக்கான பேர் பலியான செய்தி அறிந்து, இங்கிலாந்து ராணி எலிசபெத் துயரம் அடைந்தார். ஜனாதிபதி ராதாகிருஷ்ணனுக்கு அனுதாப செய்தி அனுப்பினார்.


ஜெமினி - சாவித்திரி தப்பினார்கள்


புயல் வீசிய நேரத்தில் நடிகர் ஜெமினிகணேசனும், சாவித்திரியும் ராமேசுவரத்துக்கு சென்றிருந்தார்கள்.


அவர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் பெரிதும் பதற்றமும், பரபரப்பும் அடைந்தனர்.


சாவித்திரியும், ஜெமினிகணேசனும் அதிசயமாக உயிர் தப்பிய தகவல், மறுநாள்தான் தெரிய வந்தது.

6மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Anonymous Anonymous

என்னார் அண்ணா!
இந்தச் சம்பவம் நடந்தபோது நான் சிறுவன் ,பல பதிவர்கள் பிறந்தே இருக்க மாட்டார்கள்.இதன் பாதிப்பு இலங்கையில் யாழ் குடா நாட்டிலும் இருந்தது. பனைகள் தென்னைகள் சரிந்தது. ஞாபகத்தில் உள்ளது. உயிர்ச் சேதம் பற்றிய ஞாபகம் இல்லை.இந்தியச் செய்திகள் வானொலியில் செவிமடுத்த ஞாபகம் வருகிறது.கிட்டத்தட்ட சுனாமிக் காலத்தில் தான் நடந்துள்ளது.
யோகன் பாரிஸ்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி
இந்த மாதங்களில் தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுகின்றன. சுனாமி போன்றவை

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஓகை

நெஞ்சை உருக்கும் வகையில் எழுதியிருக்கிறீர்கள். அப்போது எனக்கு 7 வயது. அவ்வளவாக விவரம் தெரியாது.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அந்த காலங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் மக்கள் ஒருமாதங்தத்திற்கு மேலாக பேசுவார்கள் பெரும்பாலும் ஈரை போனாக்கி பேனை பெருமாளாக்குவது தான் கிராம மக்களின் வேலை சிலர் இதை வண்ணான் நீலக்கட்டு என்றும் சொல்வார்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Hariharan # 26491540

என்னார் ஐயா,

நான் பிறக்க ஐந்தாண்டுகள் முன் நடந்த துயரம்.

தனுஷ்கோடி என்கிற ஊரே அழிந்தது என்பதைப் பல நேரங்களில் கேள்விப்பட்டிருந்தாலும் உங்களின் இந்தப்பதிவு சுனாமிக்கும் தமிழகத்துக்கும் ஏற்கனவே இருக்கின்ற தொடர்பை உணர்த்துகிறது!

தற்போது கடலில் மூழ்கிய தனுஷ்கோடி
மீண்டு தரைஎழும்பி விட்டதாக எப்போதோ படித்தேன்!

தனுஷ்கோடி பற்றி அறிந்திராத பல தகவல்கள் இளைய தலைமுறையினர்க்கு
இப்பதிவு தருகிறது!

நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நன்றி ஹரிகரன்
உலகமே இப்படித்தான்

 

Post a Comment

<< முகப்பு