அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வரலாற்றின் துண்ப நிகழ்வுகள் -2 -

முசோலினியின் கோர முடிவு


முசோலினி சிறை வைக்கப்பட்ட சம்பவம் ஹிட்லருக்கு அதிர்ச்சி அளித்தது. தன் ஆத்ம நண்பரை விடுவிக்க முடிவு செய்தார். பகிரங்கமாக படையெடுத்துச் சென்று முசோலினியை விடுவிப்பது முடியாத காரியம் என்பதை போர்க்கலையில் வல்லவரான ஹிட்லர் அறிந்திருந்தார். முசோலினியை மீட்க தனது ரகசியப்படையை அனுப்பினார். ரகசிய படையினர் முசோலினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து முசோலினியையும் அவர் குடும்பத்தையும் மீட்டனர். வடக்கு இத்தாலியில் முசோலினிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.


மனைவியுடனும் காதலி கிளாராவுடனும் அங்கு தப்பிச் சென்றார். அங்கு ஒரு பொம்மை அரசாங்கத்தை அமைத்துக் கொண்டார். இத்தாலியின் உண்மையான அதிபர் நானே என்று பிரகடனம் செய்தார். அப்போது இத்தாலி விடுதலை இயக்கம் என்ற புரட்சிக்கர இயக்கமே தோன்றியது. இத்தாலி முழுவதும் புரட்சிக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். முசோலினியை பிடித்து கொலை செய்வது என்று புரட்சிக்காரர்கள் சபதம் எடுத்துக் கொண்டனர். புரட்சிக்காரர்களால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்நது கொண்ட முசோலினி அண்டை நாடான சுவிட்சர்லாந்திற்கு தப்பி ஓட முடிவு செய்தார்.


2 ரானுவ லாரிகளில் தனது இரண்டு குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். ஆனால் வழியிலே அந்த லாரிகளை புரட்சிக்காரர்கள் மடக்கினார்கள். முசோலினியை கைது செய்தார்கள். இதைக்கண்ட முசோலினியின் காதலி கிளாரா அலறிக் கொண்டு லாரியிலிருந்து குதித்தாள். அவளையும் புரட்சிக்காரர்கள் பிடித்துக் கொண்டனர். முசோலினியின் மனைவி லாரிக்குள் பதுங்கிக் கொண்டதால் அவள் புரட்சிக்காரர்கள் கண்ணில்படவில்லை.


இது நடந்தது 1945 -ம் ஆண்டு ஏப்ரல் 27-ந்தேதி. அன்று டோங்கா நகரில் ஒரு அறையில் முசோலினியும், கிளாராவும் அடைத்து வைக்கப்பட்டனர். மறுநாள் அவர்களை புரட்சிக்காரர்கள் ஒரு காரில் அழைத்துச் சென்றனர். மலைப்பகுதியிலிருந்து கார் கீழே இறங்கியதும் முசோலினியையும் காதலி கிளாராவையும் கீழே இறங்கச் சொன்னார்கள்.


கீழே இறங்கியதும் அவர்களை நடுரோட்டில் நிற்க வைத்தார்கள். தங்களை சுடப்போகிறார்கள் என்பதை உணர்நது கொண்ட கிளாரா முசோலினியின் முன்னால் வந்து நின்று முதலில் என்னைச்சுடுங்கள் என்றாள். இயந்திர துப்பாக்கிகளால் புரட்சிக்காரர்கள் சரமாரியாகச் சுட்டார்கள். இருவர் உடல்களும் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தன. முசோலினிக்கு உதவியாக இருந்த வேறு சிலரையும் சுட்டுக் கொன்றார்கள். முசோலினியின் உடலையும், மற்றவர்களின் உடல்களையும் புரட்சிக்காரர்கள் மிலான் நகருக்கு கொண்டு சென்றார்கள். அங்கு விளக்கு கம்பத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டார்கள். அன்று மாலை உடல்கள் இறக்கப்பட்டு அடையாளம் தெரியாத இடத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு புதைக்கப்பட்டன.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு