அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

இலக்கியத்தில் கடவுள்

தெய்வம் உண்டு என்று வாதிப்பாரும், இல்லை என்று சாதிப்பாரும் இவ்வுலகில் எந்த நாளும் உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தெய்வத்தை தெய்வத்தை முன்னிட்டே எந்த வேலையையும் தமிழ் நாட்டார் தொடங்குவார்கள். வேலை இல்லாமல் வெறுமையாய் இருக்கும் பொழுதும் சிவனே என்றிருப்பார்கள்; அல்லது தெய்வமே என்றிருப்பார்கள்; தெய்வத்திற்குரிய கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க விரும்ப மாட்டார்கள். கடவுளை நம்பினோர் கைவிடப்படார். என்பது இந்நாட்டுப்பழமொழி.

கடவுள் என்ற சொல்லாலேயே கற்றோரும் மற்றொரும் தமிழ் நாட்டில் தெய்வத்தைக் குறிக்கின்றார்கள். தெய்வத்தின் தன்மையை அச்சொல் தெளிவாகக் காட்டுகின்றது. கடந்து உள்ள பொருள் எதுவோ அது கடவளாகும் . எதைக் கடந்து உள்ள பொருள் என்று ஆராய்வோமானால் கடவுள் என்ற சொல்லின் தன்மை சிறந்து தோன்றும். பிறப்பு, இறப்பு, என்னும் இரண்டையும் கடந்த பொருள்; இவ்வாறெல்லாம் கடவுள் என்ற சொல்லின் பொருளை விரித்துரைப்பார் கற்றறிந்தோர்.


எல்லாவற்றையும் கடவுள் கடந்தவரே யாயினும் அவர் இல்லாத இடம் இல்லை. அவரன்றி ஓர் அணுவம் அசையாது என்பது இந்நாட்டார் கொள்கை. இவ்வுண்மையை அறியாது செருக்குற்றுச் சீரழிந்தவர் பலர் ஆவர். அவர்களில் ஒருவன் இரணியன். அவன் மகனாகிய பிரகலாதன் கடவுளே கதியென்று நம்பியிருந்தான். ஒருநாள் இரணியன் தன் மகனைப் பார்த்து, 'உன் கடவுள் எங்கிருக்கிறான்? இந்த தூணில் இருக்கின்றானா? என்று எதிரே நின்ற தூணைக்கட்டிக் கடுகடுத்து வினாவினான்; அற்கு மறுமொழி கூறலுற்றான் பிரகலாதன்:

சாணினும் உளன், ஓர் தன்மை அணுவினைச் சதகூ றிட்ட

காணினும் உளம்மா மேருக் கன்றினும்உளன், இந் நின்ற

தூணினும் உளன், முன் சொன்ன சொல்லினம் உளன்"


என்று கூறினான். அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நிறைந்த கடவுள், நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணத்தினும் உள்ளான், சொல்லும் ஒவ்வொரு சொல்லினும் உள்ளான், செய்யும் ஒவ்வொரு செயலினும் உள்ளான் என்று அறிந்து நடப்வரே சிறந்தோராவர். பஞ்ச பூதங்களாகிய மண்ணிலும், விண்ணிலும், நீரிலும் , நெருப்பிலும், காற்றிலும் கலந்து நிற்பவர் கடவுள். இத் தகைய கடவுளை,

பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி

வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி"


என்று திருவாசகம் போற்றுகின்றது.


இங்ஙனம் காணுமிடமெல்லாம், கருதுமிட மெல்லாம் நீக்கமற நிறைந்தருக்கின்ற கடவுளுக்கு ஒரு நாமம் இல்லை; ஓர் உருவம் இல்லை, எல்லாம் அவர் திருநாமமே; எல்லாம் அவர் திரு உருவமே.


" ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றுமில் லார்க்கு ஆயிரம்

திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ"


என்றார் மாணிக்க வாசகர், ஆகையால், நாமபேதங்களையும் உருவ பேதங்களையும் பெரிதாகக் கொண்டு ஒரு மத்தார் மற்றொரு மதத்தாரைப் பகைக்க வேண்டுவதில்லை; பழிக்க வேண்டுவனதில்லை என்பது மெய்யறிவுடையோர் கருத்து. கவிஞராகிய பாரதியார், இக் கருத்தைத் தெளிவாகப் பாடிப்போந்தார்:


“தெய்வம் பலபலச் சொல்லிப்-பகைத்

தீயை வளர்ப்பவர் மூடர்

உய்வ னைத்திலும் ஒன்றாய்--ஓங்கும்

ஓர்பொருளானது தெய்வம்


தீயினைக் கும்பிடும் பார்ப்பார்-நித்தம்

திக்கை வணங்கும் துருக்கர்

கேயிற் சிலுவையின் முன்னே--நின்ற

கும்பிடும் ஏசு மதத்தார்

யாரும் பணிந்திடும் தெய்வம்--பொருள்

யாவினும் நின்றிடும் தெய்வம்

பாருக்குள் ளேதெய்வம் ஒன்று -- இதில்

பற்பல சண்டைகள் வேண்டாம்


என்பது பாரதியாரின் அறிவுரை


அன்பே கடவுளின் வடிவம் என்று எல்லாச் சமயங்களும் இசைந்து கூறுகின்றன. எனவே, அன்பு வடிவாகிய கடவுளை அறிவதறக்கும், அவர் அருளைப் பெருவதற்கும் அன்பையே சாதனமாகக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே அமையும். 'எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு' என்று இவ்வுண்மையைச் சுருங்கச் செல்லி விளங்கவைத்தார் ஒரு பெரியார். அன்பு, தெய்வத்தன்மையுடையதாதலால் அதற்கு எல்லையில்லை; சாதி குலம் முதலிய பேதங்கள் இல்லை. எல்லாரும் ஓர் குலம்; எல்லோரும் ஓரினம் என்பதே அன்புடையார் கொள்கை. கடவுளிடத்து நாம் செலுத்தும் அன்பு, பக்தி முதிர்ந்த நிலையில் தெய்வப் பித்து வந்து எய்தும். இவ் வுலகில் எல்லாரும் பித்தரே என்றார் ஒரு பெரியார். சிலர் பெண்ணாசை பிடித்த பெரும் பித்தர் , பொருளாசை பிடித்த பணப்பித்தர். சிலர் புகழாசை பிடித்த புகழ்ப் பித்தர். ஒரு சிலர் கடவுள் வெறி பிடித்த தெய்வப் பித்தர். தெய்வப் பித்தராகவே வாழ விரும்புவர் பக்தர். கடவுளைப் பெரும் பித்தன் என்று பாடினார்


“தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்

பெண்பால் உகந்தான் பெரும் பித்தன் காணேடி”

என்பது திருவாசம். சிவனடியார்களுள் ஒரு வராகிய சுந்தரமூர்த்தி தம்மை ஆட்கொண்டருளிய பெருமானே,


“பித்தா பிறைசூடி, பெருமானே அருளாளா”


என்றெடுத்து

“அத்தா உனக்காளாய் இனியல்லேன்'

என்று திருப்பாசுரம்பாடினார்


கடவுளை வணங்குவதற்கு ஏற்ற இடங்கள் கோவில் என்று பெயரால் குறிக்கப்படும். தமிழ் நாட்டில் அழகிய சோலைகளே ஆதியில் கோவில் களாக அமைந்தன. கண்ணுக்கினிய பசுமைநிறமும், செவிக்கினிய இயற்கையொலியும், நாச்கினிய நறுமணமும், நாவிற்கினிய நற்கனியும், உடம்பிற்கினிய குளிர் நிழலும் பொருந்திய சோலைகளில் நம் முன்னோர் கடவுளை வணங்கினார்கள்; பூஞ் சோலையிலுள்ள அழகிய மலர்களைக் கடவுளுக்கு அணிந்தார்கள்; கொம்பிலே பழுத்த பழங்களைக்கையுறையாக அளித்தார்கள்; இளந்தளிழர்களையும் தழைகளையும் கொண்டு அருச்சனை செய்தார்கள். இத் தகைய சோலைகள் பிறகாலத்தழில் கற்கோயில்கள் ஆயின. ஆயினும், பழைய சோலையின் அடைளாம் பலவிடங்களில் உண்டு. திருச்சிராப்பள்ளியில் திருவானைக்காவில் ஜம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. அங்கு ஆதியில் ஒரு செலுமையான நாவல் மரத்தில் மக்கள் கடவுளை வணங்கினார்கள். அதனால் ஐம்புகேஸ்வரம் என்னும் பெயர் அதற்கு அமைந்தது. ஐம்பு என்பது வடமொழியில் நாவல் மரத்தின் பெயர், (அப்படித்தான் நினைக்கிறேன்) தென்னாட்டிலுள்ள திருக்குற்றாலத்தில் ஒரு குறும்பலா மரத்தில் ஈசன் கோவில் கொண்டார். அப்பலா மரத்தைத் திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிப் போற்றினார். மதுரைக்கு அருகேயுள்ள அழகர் மலையின் பழம் பெயர் திருமால் இருஞ்சோலை என்பது. இப்போது கற்கோவில்களாக விளங்கும் ஆலயங்களிற் காணப்படுகின்ற ஸ்தல விருக்ஷமே முற்காலத்திலிருந்த சோலையைக் காட்டும் அடையாளம் என்பர்.

இது மட்டுமில்லாது கீழ் கண்ட படியும் கிராமத்தில் இறைவனை அழைப்பர்

மரம் பெயர்

பனை பனையடியன்

வேம்பு வேம்படியான்

ஆலமரம் ஆலடியான்

வன்னிமரம் வன்னியடியான்

மலை மலையடியான் (கருப்பு)

இவ்வாறும் அழைப்பதுண்டு

குருந்த மரம்

கொன்றைமரம் (மழபாடியில்)

இப்படி எத்தனையோ

ஆண்டவன் என்பது கடவுளைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. தமிழ் நாட்டு மகமதியரும் ஆண்டவன் என்ற பெயரைப் பெரிதும் வாழங்குகின்றார்கள். நாகூர் ஆண்டவர். பழனியிலுள்ள முருகனைச் சைவர்கள் பழனி யாண்டவன் என்பர். ஆண்டவன் என்னும் சொல் தலைவன் என்ற பொருளைத் தரும். ஆண்டவன் கடமை அடியார்களைத் தாங்குதல். அடியவர் கடமை ஆண்டவனுக்குத் தொண்டு செய்தல். ஒளயார் கூடச் சொல்லூவார்,' பெரியது கேட்கின்.....தொண்டரின் தொண்டும் பெரிதே ' என்பார். இக் கருத்து தேவாரம் திருவாய்மொழி முதலிய தெய்வப் பாடல்களில் தெளிவாக விளங்குகின்றது. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்.

"நம்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்

தன்கடன் அடியேனையும் தாங்குதல்

என்கடன் பணிசெய்து கிடப்பதே"


என்று அருளிப் போந்தார். ஆண்டவன் திருவடியே கதியென்று அடைக்கலம் புகுந்தோரை அவர்அருள் கைக்கொண்டு காக்கும். சரணாகதி என்பது இதுவே; மனக்கவலையை மாற்றுவதற்கு இதுவே சிறந்த வழியெனக் காட்டினார் திருவள்ளுவர்.


"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்ற லரிது"

என்பது அவர் அருளிய திருக்குறள். தனக்குவமை இல்லாத தலைவனே ஆண்டவன். அவன் திருவடியைச் சரணடைந்தாலன்றிப் பிறப்பால் வரும் துன்பத்தைப் போக்க இயலாது என்பது திருவள்ளுவர் கருத்து. சரணாகதியின் பெருமையைத் தமிழ் இலக்கியங்களிற் பரக்கக் காணலாம்.


குலசேகர ஆழ்வார் என்னும் பெரியார் திருமால் திருவடியே சரணம் என்று திருத்தமாகப் படியுள்ளார்.


"தருதுயரம் தடடியேல்உன் சரணல்லால் சரண்இல்லை

விரைகுழுவும் மலர்பொழில்சூழ் வித்துவக்கோட் டம்மானே

அரிசினத்தால் ஈன்றதாய் அகறடறிடினும் மற்றவள்தன்

அருள்நினைந்தே அழுங்குழவி அதுவேபோன் றிருந்தேனே"


என்பது அவர் திருப்பாசுரம். உடல் பொருள் ஆவியேன்னும் மூன்றையும் கடவுளிடம் ஒப்புவித்த பொரியாருள் ஒருவர் மாணிக்கவாசகர். அவர் சரணாகதியின் தன்மையைத் திருவாசகத்தில் உணர்த்துகின்றார்.


"அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்

குன்றே யனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ

இன்னோர் இடையூற என்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே

நன்றே செவ்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயமே"

என்று பாடினார்.

கடவுளிடம் அடைக்கலம் புகும் சரணாகதி முறை கிறஸ்தவ சமயத்திலும் உண்டு. இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னே ஏசுநாதர் சேவையில் ஈடுபட்ட பெஸ்கி என்னும் வீரமா முனிவர் கொள்ளிட நதியின் வட கரையில் ஒரு கோயில் கட்டினார். தேவமாதாவாகிய மேரியம்மையின் திருவுருவத்தை அங்கு நிறுவினார்; அம் மாதாவை அடைக்கல மாதா என்று அழைத்தார்; அவர் காவலில் அமைந்த ஊருக்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; திருக்காவலூரில் வாழ்ந்த கிறிஸ்தவருக்கு அடைக்கலம் அளித்த மாதாவின் மீதுஒரு கலம்பகம் பாடினார். அப் பாமாலை 'திருக்காவலூர்க் கலம்பகம்' என்று வழங்கப்படுகிறது.


இன்னும் தமிழ்க் காவியங்களில் சிறப்புற்று விளங்கம் கம்பராமாயணம் சரணாகதியின் செம்மையை விரித்துரைப்பாதாகும். இராமன் கானகம் புகுந்த பொழுது அரக்கரது கொடுமையால் வருந்திய முனிவர்கள் வந்து சரணம் அடைந்தார்கள். அப்பால் தமது தமையனாகிய வாலியின் கொடுமையால் வாடி வருந்திய சுக்ரீவன் என்ற வானரத் தலைவன் வந்து சரணம் புகுந்தான். பின்னர் .இராவணன் தம்பியாகிய விவீஷணன் வந்து சரணாகதியடைந்தான். இங்ஙனம் அடைக்கலமாக வந்தடைந்தோரையெல்லாம் இராமன் ஆதரித்து ஏற்றுக்கொண்டான்; அவர் மனக்கவலையை மாற்றியருளினான். ஆகவே, அடைக்கலத்தின் பெருமையை விளக்கும் காவியம் இராமாயணம் என்பது மிகையாகாது. அக் காவியததின் உட்கருத்தைக் கம்பர் முதற் கவியிலேயே குறிப்பாகக் கூறியுள்ளார்.


'உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்

தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே"


என்பது கம்பர்அருளிய கடவுள் வாழ்த்து. 'உலகங்களை யெல்லாம் படைத்தும், காத்தும், துடைத்தும் விளையாடும் பெருமானே ஆண்டவன். அவனே எல்லார்க்கும் அடைக்கலம் அளிப்பவன்' என்று இராமாவதாரத்தின் உட்பொருளை உணர்த்தினார் கம்பர்.

ஆண்டவனாகிய கடவுளின் திருவருளைப் பெறுவதற்குப் பல வழகளைப் பெரியோர் வகுத்துள்ளார்கள். அவ்வழிகளை மார்க்கம் என்றும் சொல்வதுண்டு. இம் மார்ககங்களே மதங்கள் என்றும், சமயங்கள் என்றும் போற்றப்படுகின்றன. தமிழ் நாட்டில் ஆறு வகைப்ட்ட சமயங்கள் உண்டு என்று அறிந்தோர் கூறுவர். அவற்றுள் சைவமும் வைணவமும் சாலப் பழமை வாங்ந்த சமயங்கள், சமணமும் சாக்கியமும் சில காலம் சிறந்திருந்து நிலை குலைந்தன. தற்காலத்தில் இஸ்லமும் கிறிஸ்தவமும் வளர்ந்தோங்கி வருகின்றன. இங்ஙனம் சமயங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஆண்டவன் காரணமாகச் சமயவாதிகள் சண்டையிட்டுக் கொள்ளலாகாது என்பதே சான்றோர்கள் கொள்கை.


பண்டைத் தமிழ் நாட்டில் சமயப் பொறுமை தலை சிறந்து விளங்கிற்று. ஒரு குடும்பத்தில் தமையன் சைவனாகவும், தம்பிசமணனாகவும் இசைந்து வாழக் கண்ட நாடு தமிழ் நாடு. சேர நாட்டையாண்ட செங்குட்டுவன் என்பவன் சிறந்த சைவன். அவன் தம்பியாகிய இளங்கோவடிகள் சிறந்த சமண முனிவர். அம் முனிவரே சிலப்பதிகார ஆசிரியர். அவர்கள் இருவரும் ஒற்றுமையுன் வாழந்து வந்தார்கள். இத் தகைய நல்லோர் வாழ்ந்த காலம் சங்க காலம் என்று சொல்லப் படுகின்றது. சமயச் சண்டையும் சச்சரவும் இல்லாயினும் ஏற்றமுற்றிருந்த காலம். இக்காலத்திற்குப் பின் சமயச் சண்டைகள் மூண்டன. ஆண்டவன் பெயரால் சண்டையிட்டு மாண்டார் பலர். சமயச் சண்டை இக் காலத்தில் அவ்வளவாக இல்லை. சமரச சன்மார்க்கமே இந்நாளில் அறிவுடையோர் போற்றும் சமயம். தர்க்கமும் சூதர்க்கமும் ஒழிந்து சமரசம் பரவும் காலத்தை ஆர்வத்தோடு எதிர் நோக்கினார் தாயுமானார்.

"தர்க்கமிட்டு பாழாம் சமயக் குதர்க்கம்விட்டு

நிற்கும்அவர்க கண்டவழி நேர்பெறுவ தெந்நாளோ?


என்று பாடினார் அப் பெரியார். அந் நாளே தமிழ் நாட்டுக்கு நன்னாள் ஆகும்

ஏதோ எனக்குத் தெரிந்த கேட்ட படித்த செவியுற்ற செய்தியைச் சொன்னேன் அவ்வளவே.

12மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger வெற்றி

என்னார் ஐயா,
மிகவும் அருமையான பதிவு மட்டுமல்ல, மிகவும் தேவையான பதிவும் கூட. காலமறிந்து எழுதியுள்ளீர்கள்.

//பனை பனையடியன்
வேம்பு வேம்படியான்
ஆலமரம் ஆலடியான்
வன்னிமரம் வன்னியடியான்
மலை மலையடியான் (கருப்பு) இவ்வாறும் அழைப்பதுண்டு குருந்த மரம் கொன்றைமரம் //

ஈழத்தில் எனது ஊரிலும், காஞ்சி வைரவர்[காஞ்சியில் இருந்து வந்தவர்களே எமது ஊரில் குடியேறியதாக வாய்மொழி வரலாறு], மாவடி வைரவர் என்றும் அரசடி சித்திவிநாயகர் எனவும் ஆலயங்கள் உள்ளன. அத்துடன் யாழ்ப்பாணத்தில்[மானிப்பாய்] மருதடிப் பிள்ளையார் எனவும் ஒரு ஆலயம் உண்டு.

ஈழத்திலேயே கடம்பமரம் எனும் மரத்தோடு அமைந்துள்ள முருகன் ஆலயம் என் ஊரில் தான் உண்டு. இந்த கடம்ப மரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. திருமுருக கிருபானந்த வாரியார் ஈழத்திற்கு வரும் போது இவ் ஆலயத்தைத் தரிசிக்காமல் செல்லமாட்டாராம்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வெற்றி
நன்றி மாமரத்தின் கீழ் இருக்கும் கருப்புக்கு மாவடியான், ஒவ்வொரு கடவுளும் ஒரு மரத்தடியில் தான் இருந்திருக்கிறது அது தான தலவிருஷம் என்கின்றனர்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger SP.VR. SUBBIAH

"வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தர்க்கு
யாண்டும் இடும்பை இல"
என்றார் வள்ளூவப் பெருந்தகையார்
Likes & Dislikes இல்லாதவன் அடி சேர்ந்தவ்ர்க்கு என்றும் MIseries இல்லை என்றார்

ஆகவே நம் துன்பங்கள் நீங்க வேண்டுமென்றால் இறைவனை வணங்கவேண்டும்
அதில் மாற்றுக் கருத்திற்கு - என்னைப் போன்றவர்களுக்கு - இடமில்லை!
மிகப் பிரபலமான விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீனே ஒரு சக்தி உலகை ஆட்கொண்டு ஆள்கிறது என்று ஒப்புக்கொண்டுள்ளார்
ஆகவே கடவுள் உன்டு ஆய்யா உண்டு!
அதை உரக்கச் சொல்லுங்கள் - ஏன் தயக்கம்?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஆசிரியர் சொன்னதை சரிசெய்துவிட்டேன் நன்றி அறிவுரைக்கும் பின்னூட்டத்திற்கும்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஞானவெட்டியான்

அன்பு என்னார்,
"உண்டில்லை யென்னும் உலகத் தியல்வது
பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல்
கண்டில்லை மானிடர் கண்ட கருத்துறில்
விண்டில்லை யுள்ளே விளக்கொளி யாகுமே."

உண்டில்லை = உலகம் உண்டு, இல்லை என வாதாடும் உலகில்.
பண்டு = கேவல நிலை. பரங்கதி = முத்திநிலை.
கண்டில்லை மானிடர் = இதுவரை காணாத மானிடர்.
கண்ட கருத்து = அறிந்த அறிவு. விண்டு = உரைக்க.

சுட்டியுணரப்படும் உலகம் உண்டு எனவும், இல்லை; இது கானல் நீர் எனவும் வாதாடிக் கொண்டிருக்கும் இவ்வுலகில், இருள் மலத்துடன் கூடிய புலம்பு நிலையில் உயிர்கள் உள்ளன. புலம்பு நிலையும், புணர்வு நிலையுங் கடந்த புரிவு நிலையாம் திருவடி பேறு இல்லையோவென ஐயுற்று நின்றன. ஏனைப் பொருள்களைப்போல் சுட்டுணர்வு சிற்றுயிர்களுக்கு எட்டாது. அத்திருவடிப் பேறு மானிடர்களுக்கும் மற்ற ஒரு சில உயிர்கட்கு மட்டுமே கிட்டும். சிவத்தைக் கண்டேன் என்றால் அது உண்மையாக இருக்க ஒண்ணாது. அத் திருவடிப் பேறு சொல்லவியலா அறிவுப் பேரொளியாம்; அது உயிர்களின் அகத்தே அமர்ந்துள்ளது. (திருமந்திரம் புகல்வது)

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஞானம் சார்
நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger குமரன் (Kumaran)

மிக நீண்ட பதிவு ஐயா. ஆனால் எல்லாவற்றையும் தொட்டுச் சென்று ஒரு முழுமையான பதிவாக எழுதியிருக்கிறீர்கள். நீண்ட பதிவாக இருந்தாலும் படிக்கத் தொடங்கிய வேகத்தில் தொடர்ந்து படிக்கத் தூண்டுகிறது. மிக்க நன்றி.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger dondu(#11168674346665545885)

"ஐம்பு என்பது வடமொழியில் நாவல் மரத்தின் பெயர், (அப்படித்தான் நினைக்கிறேன்)"
சரியாகவே ஊகித்துள்ளீர்கள் என்னார் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger G.Ragavan

மிகவும் அருமையான கருத்துகள். இதைப் புரிந்து கொண்டாலே உலகில் அமைதி விளையும். ஆனால் புரியத்தான் மாட்டேன் என்கிறது. இறைவா இவர்களைக் காப்பாற்று. உங்கள் கட்டுரைக்குத் தக்க ஆங்காங்கு இலக்கிய விதை விதைத்திருப்பதும் மிக அருமை. முழுக்க முழுக்க தமிழின் அடிப்படை இதுதான். இதைப் புரிந்து கொண்டால் நன்று. இல்லையேல்........நடப்பது நடந்தே தீரும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

குமரன், டோண்டுசார்
தங்களது பின்னூட்டங்களுக்கு நன்றி

GR
நன்றி
//ஆனால் புரியத்தான் மாட்டேன் என்கிறது.//
இளமையின் வேகத்தில் யாருக்கும் புரியாது பட்டபிறகுதான் தெரியும் கண்போனபின் கண்ஒளித்திட்டம் பதவிக்கு வந்தபின் கோவில் கொடை கும்பாபிஷேகம் எல்லாம் செய்வார்கள்.
நடப்பதெல்லாம் நண்மைக்கே நடப்பதை யாராலும் தடுக்க முடியாத. எல்லாம் அவன் செயல்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

நீஈஈஈண்டப் பதிவினைத் தந்து இன்றைய ஞாயிற்றுக் கிழமையை உருப்படியாகச் செலவிட வைத்துவிட்டீர்கள்!!நன்றீ!!
ஆனால் எப்படி உங்களுக்கு நேரம் கிடைக்கிறது என்றுத் தெரியவில்லை!!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நடேஷ்
நன்றி நீ...ண்..ட நாட்களாக தங்களைக் காணவில்லை

 

Post a Comment

<< முகப்பு