அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கர்ணன்

ரு மனிதனுக்கு நான்கு வகைதுணை வேண்டும் மாதா, பிதா, குரு, தெய்வம் ஆனால் அந்த குந்தியின் மூத்த புதல்வனுக்கோ அந்த துணைகளில் ஒன்றுகூட கிட்ட வில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை, அவன் வந்த வழி அப்படி காரணம் என்ன?, அவன் என்ன பாவம் செய்தான் முற்பிறப்பில் (நம்பிகையில்லாதவருக்கிச்சொல்லிலை) பாவம் செய்ததால்தானோ இப்பிறப்பில் வந்தவர்களுக்கெல்லாம் இல்லையென்னாது வாழங்கினான்?

தாய் குந்தி பெற்றாள் போட்டாள் ஆற்றில், தந்தை சூரியன் உதவமுடியவில்லை, குரு சொல்லாவே வேண்டாம் அவருக்கு சத்ரியர்கள் மீதிருந்த மாற்சர்யம், தெய்வம் அவனே வந்த இவன் செய்த புண்ணியமனைத்தையும் பெற்றுக்கொண்டான்.

சரி ஏன் அவன் பெற்றுக்கொண்டான் கர்ணன் புலவர், ஏழை, என மனிதர்கள் அத்துனை பேருக்கும் கொடுத்துச் சிறந்தான்; இந்திரனுக்கும் கொடுத்து தேவர்களுக்கும் கொடுத்ததாக பேர் பெற்றுவிட்டான்.பெற்றெடுத்த தாய்க்கும் கொடுத்துவிட்டான் வரம் என்ற பெயரில் இனி கொடுக்க வேண்டியது தெய்வத்திற்கு தான் அதான் அந்த கண்ணன் வந்து பெற்றுக் கொண்டானோ?.

வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்

மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்

தேன்பெற்ற துழாயலங்கல் களப மார்பும்

திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்

ஊன் பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்

உணர்வுடன் நின்திருநாமம் உரைக்கப் பெற்றேன்

யான் பெற்ற பெருந்தவப்பேறு என்னையன்றி

இருநிலத்தில் பிறந்தோரில் யார் பெற்றாரே!

கண்ணன் அந்தணர் வேடம் பூண்டு தேர்தட்டில் விழுந்து கிடக்கும் வள்ளலிடம் கேட்கிறான்.”மேரு மலையிடத்தே தவம் செய்து கொண்டிருந்தேன். உன்னிடம் யாசகம் பெற்று போக வந்தேன் , நீ இல்லை என்று வந்தவர்களுக்கெல்லாம் இல்லையென்னாது வழங்குவாயமே?

தாண்டிய தரங்கக் கருங்கடல் உடுத்த

தரணியில் தளர்ந்தவர் தமக்கு

வேண்டிய தருதி நீ எனக் கேட்டேன்

மேருவினிடைத் தவம் பூண்டேன்

ஈண்டிய வறுமைப் பெருந்துயர் உழந்தேன்

இயைந்தது ஒன்று இக்கணத்து அளிப்பாய்

தூண்டிய கவனத் துரகத் தடந்தேர்

சுடர்தரத் தோன்றிய தோன்றால்"



சித்தர்களும், யோகியரும் இவனை நோக்கித்தான் தவம் செய்கிறார்கள். ஆனால் இவனே தான் தவம் செய்வதாகப் பொய்சொல்கிறான்.

செல்வத்திற்கெல்லாம் அதிபதி இந்தக் கண்ணபரமாத்மாவாயகிய திருமால்தான்! திருமகளையே நெஞ்சில் தாங்கியவன் இவன்தான! ஆனால் இவன் கூறுகின்றான், வறுமையால் துன்பமடைந்தேன் என்று!

இல்லத்திலும் கொலு மண்டபத்திலும் வரையாமல் கொடுத்த வள்ளலுக்கு போர்க்களத்திலும் வந்த வாய்ப்பை எண்ணி மகிழ்கின்றான். அவ்வந்தணன் சொல்லிய சொல் அவனை மயங்கச் செய்கிறது. தான் அடிபட்டுக்கிடப்பதை மறந்து சொல்கிறான்.

"அந்தணரே! அம்புகளால் அடிபட்டுத் தேர்த்தட்டில் விழுந்துகிடக்கின்றேன். உடல் ஓய்ந்து போயிற்று! இந்தக் கர்ணனுடைய கரங்கள் இதுவரை கொடுக்கத்தான் நீண்டிருக்கின்றன. ஒரு போதும் வாங்கு வதற்கு நீண்டதில்லை! இன்று வாங்குவதற்கு நீள்கின்றன! உம்மிடம் ஒன்றை யாசிக்கிறேன். என்னிடம் இருக்கின்ற ஒன்றைக் கேளுங்கள்.

இல்லாததை கேட்டு விடாதிர்கள். வாழ்ந்தநாள் வரையிலும் வரையாது வழங்கிய வள்ளல் கர்ணன் போர்க்களத்தில் இல்லையென்று கைவிரித்தான் என்று இந்த வையகம் வசைபாடுமாறு செய்துவிடாதீர்கள். என்னால் இப்போது தரத்தகுந்த பெருளாகக் கேளுங்கள், என்று கூறுகின்றான் அந்தக் கொடை வள்ளல்.

கேட்கிறான் மாயோன்,” கர்ணா! நீ இதுவரை செய்த புண்ணயம் அனைத்தையும் எனக்கு வழங்குவாயா()1.

கர்ணன்: “அந்தணரே! என் உயிரோ நிலை கலங்கியுள்ளது. அது உடலுக்கு உள்ளே இருக்கிறதா? வெளியே இருக்கிறதா என்பதை யான் அறியேன்". இந்தப் பாவி நீ கேட்கம் பொருளையெல்லாம் தருகின்ற காலத்தில் நீர் வரவில்லை. இந்த உடலைத் தரலாம் என்றால் இது அம்பகளால் துளைக்கப்பட்டு சிதைந்து கிடக்கிறது.

உயிரைத் தரலாம் என்றால் அது உள்ளே இருக்கிறதா உடலின் வெளியே இருக்கிறதா என்று தெரியவில்லை. வில்லும், அம்பும், அச்சு முறிந்த இந்தத் தேரும் அந்தணராகிய உமக்குப் பயன்படா! நல்ல வேளையாக என்னிடம் உள்ள புண்ணியத்தைக் கேட்கின்றீர்கள். செய்த புண்ணியத்தைத் தானே கேட்டீர்கள்?

அந்தனரோ! யான் செய்த புண்ணியத்தையெல்லாம் உங்களுக்குத் தருகின்றேன். அப்படித் தருவதால் ஒரு புண்ணியம் வருமல்லவா! அதனையும் சேர்த்துத் தருகின்றேன்.

தெய்வத்திற்கு ஆச்சரியம் தான் கேட்கவந்தது செய்த புண்ணியத்தைமட்டும் ஆனால் அந்த வள்ளலோ வரப்போகும் புண்ணியத்தையுமல்லவா தறுவதாக சொல்கிறான்,”கர்ணா! நீ கூறிய வண்ணம் புண்ணியத்தை எனக்கு தாரை வார்த்துக் கொடு,” என்கிறான்.அந்த வள்ளல் தண்ணீருக்கு எங்கோ போவான் தன் இதயத்தில் பாய்ந்திருந்த ஓர் அம்பினை எடுக்கிறான் அதிலிருந்து வந்த உதிரத்தை உத்தமன் உலகலந்தவனுக்கு தாரை வார்க்கிறான். கையேந்தா கடவுளும் கையேந்தி பெற்றுக்கொள்கிறது. வஞ்சகனின் கையில் வள்ளலின் குருதிபடவும் அவனும் வள்ளலாகிறான்,” உனக்கு என்ன வேண்டும் என்கிறான் கொஞ்ச நேரத்திற்கு முன் கையேந்திய கடவுள் இப்பொழுது உனக்கு என்ன வேண்டும் கேள் என்கிறது.

"ஆவியோ நிலையிற் கலங்கியது யாக்கை

அகத்தோ புறத்ததோ அறியேன்

பாவியேன் வேண்டும் பொருளெலாம் நயக்கும்

பக்குவத்தில் வந்திலையால்

ஓவிலாது யான் செய் புண்ணியம் அனைத்தும்

உதவினேன் கொள்க நீ உனக்குப்

பூவில் வாழ் அயனும் நிகரிலன் என்றால்

புண்ணியம் இதனினும் பெரிதோ?



ஒன்று மட்டும் நிச்சயம் வையத்தில் வால்வாங்கு வாழ்பவர்கள் வசதியுடனும் செல்வத்துடனும் வாழ்வதில்லை நடுநிலைமையில் உள்ளவர்கள் நடு நிலைமையாகவே இறப்பர். உயர்ந்து இருந்தவர்கள் கொஞ்சநாள் தாழ்ந்து வாழ்ந்து தான் ஆகவேண்டும் என்பது தான் உலக நியதி.

1இந்த இடத்தில் என்கொரு அய்யம் வழங்குவாயா? என்கிறானா? அல்லது வழங்குவாயாக என்கிறானா கண்ணன் என்பது தான்.

26மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger SP.VR. SUBBIAH

மாதா, பிதா, குரு, தெய்வம் - இந்த நான்கில் முதல் மூன்று கிடைத்தவர்கள் அவற்றைப் போற்றி வணங்கினால் நான்காவதாக உள்ள தெய்வம் தானாகத் தேடி வரும் என்று சொல்வார்கள் - அதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர்கள் உள்ளார்கள் சொல்லுங்கள்?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

சுப்பையா சார்
எதுவுமே சரியாக இருப்பதில்லையே
தாய் தாயாகவும் தந்தை தந்தையாகவும் குரு குருவாகவும் இந்த காலங்களில் இருப்பதில்லையே சார். இது கலிகாலம் அப்படித்தான் இருக்கும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger நாமக்கல் சிபி

என்னார் ஐயா,
இதை ஏன் இப்படி பார்க்க கூடாது?

கர்ணனுக்கு மோட்சத்தை அளிப்பதற்காகவே கண்ணன் பொய் சொன்னானென்று.

கண்ணன் நினைத்திருந்தால் இந்த யாசகத்தை வேறு ஒருவர் மூலம் பெற்றிருக்க முடியும். ஆனால் அதை செய்யாமல் தானே வந்து யாசகம் பெற்று கர்ணனுக்கு நீங்காத புகழை ஏற்படுத்தி, பழியை சுமக்கின்றான் கண்ணன்.

தீயவருடன் இணைந்து தீய காரியத்திற்கு துணை புரிந்ததால் கர்ணன் எப்படியும் துர்மரணம் எய்த வேண்டியவனே! ஆனால் அவன் செய்த தர்ம காரியங்களால் நாராயணனே அவன் முன் கையேந்துகிறான். இதைவிட பேறு இவ்வுலகில் ஏதேனும் உண்டா?

பெயர், புகழ், வெற்றி இதை அனைத்தையும் விட ஆன்மாவின் லட்சியம் இறைவனை அடைதலே!!!

அந்த இறைவனே கண் முன் தோன்றி அந்த மோட்சத்தை அளிப்பதைவிட பேறு ஏதேனும் உண்டா?

அர்ச்சுணனுக்கு கூட அந்த பேறு கிடைக்கவில்லை.

நான் என் அறிவிற்கு எட்டியதை கூறியுள்ளேன். செல்வன் இதைவிட சிறப்பாக கூறுவார்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வெட்டிப்பயல் அவர்களுக்கு,
//இனி கொடுக்க வேண்டியது தெய்வத்திற்கு தான் அதான் அந்த கண்ணன் வந்து பெற்றுக் கொண்டானோ?.//
கொடையில் சிறந்தவன் என்பதைக் காட்டிவிட்டான். கண்ணனுக்குகொடுத்து
//தீயவருடன் இணைந்து தீய காரியத்திற்கு துணை புரிந்ததால் கர்ணன் எப்படியும் துர்மரணம் எய்த வேண்டியவனே!//
அந்த தீயவனிடம் உள்ள நல்லகுணம் பார்த்தீர்களா? "நீ எந்த ஊர் உன் அப்பன் யார்?" கேட்டார்களே தேரோட்டி மகன் என தாழ்வாக பேசினார்களே அந்த சுத்தவீரனுக்கு எப்படி இருக்கும் அந்த வேலையில் கை கொடுத்து காத்தவனுக்கு உயிர் கொடுத்தால் தப்பில்லை என தனது வாழ்வையே துரியோதனனுக்கு வழங்கிய வள்ளலாயிற்றே.
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger நாமக்கல் சிபி

எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும் அபிமன்யூவின் பின்னாலிருந்து அவன் தனுசை உடைத்தது கர்ணனே!!!

எனக்கு தெரிந்த வகையில் துரியோதனன் மேல் கர்ணனுக்கு இருந்தது நட்பு அல்ல. அது பக்தி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

என்னை பொருத்தவரை நான் தவறு செய்யும் பொழுது அதை தடுக்காதவன் நண்பன் அல்ல.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மா.கலை அரசன்

நல்ல பதிவு. கொடை வள்ளல் கர்ணனை வலைப்பூவில் உலவவிட்டு நீங்களும் புண்ணியத்தைச் சேர்த்துக்கொண்டீர்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger CAPitalZ

கர்ணன் படம் பார்த்து தான் ஐயா மகாபாரதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு படிக்க ஆசைப்பட்டேன். உங்கள் வரிகள் என்னை கலங்கவைத்து விட்டது.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

என்னதான் தான தருமம் செய்தாலும்,புண்ணியம் சேர்த்தாலும்,கடவுளே வந்து நேரில் நின்றாலும் பெண்பாவம் சும்மா விடாது என்பது தான் கர்ணன் கதை.

திரவுபதிக்கு அவன் செய்த கொடுமைக்கு மரணத்தை பரிசாக பெற்றான்.அவன் தான தருமம் அவனை காப்பாற்றியதா?இல்லை.அவன் அப்பன் சூரியபகவானால் அவனை காப்பாற்ற முடிந்ததா?முடியவில்லை.

எப்படியோ செத்தபின் வீரசுவர்க்கம் புகுந்தான்.அந்த விதத்தில் தப்பினான் என்று வைத்துக்கொள்ள வேண்டியதுதான்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Machi

/1இந்த இடத்தில் என்கொரு அய்யம் வழங்குவாயா? என்கிறானா? அல்லது வழங்குவாயாக என்கிறானா கண்ணன் என்பது தான்./

வழங்குவாயா? (இரத்தல்)என்று தான் கேட்டிருப்பான்.

காரணம் கண்ணனின் கொடை தன்மையை உலகம் அறிய செய்ய இச்சொல்லே உதவும்.

"வழங்குவாயாக" ( உத்தரவு/கட்டளை ) என்று சொன்னால் கர்ணனின் கொடை தன்மையை குறைத்து மதிப்பிட்டதாக ஆகாதா?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஜெயஸ்ரீ

அய்யா,
நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்.
கண்ணன் என் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நீ உனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தைச் செய் என்று அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தவன் அல்லவா? அர்ஜுனன் மேல் நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் செலுத்தக்கூடாது என்று குந்தியை கர்ணனிடம் வாக்குறுதி பெறச் செய்தும், செய்த தர்மங்கள் கர்ணனை இறக்க விடாமல் காக்கும்போது அவனது புண்ணியமனைத்தையும் தானம் வாங்கியும் எல்லாப் பழியையும் தானே ஏற்கிறான். அவனை பரிபூரணமாக சரணடைந்த அர்ஜுனனை எல்லாப் பழியிலிருந்தும் காக்கிறான்.

இங்கு வில்லிப்புத்தூரார் ஒரு அற்புதம் செய்திருக்கிறார். கர்ணன் தானமளிக்கும் போது "செய் புண்ணியமனைத்தும்" உதவினேன் என்கிறான். "செய் புண்ணியம்" என்பது வினைத்தொகை மூன்று காலங்களையும் குறிக்கும் சொல் (செய்த புண்ணியம், செய்கின்ற புண்ணியம், செய்யப்போகும் புண்ணியம்) . நான் இதுவரை அள்ளி அள்ளி தானமளித்து சேர்த்த புண்ணியங்கள், இப்போது பாற்கடல் மேல் பள்ளிகொண்ட பரமனான உனக்கே தானமளித்து செய்கின்ற புண்ணியம், அது மட்டுமல்ல, நான் இனி உயிர் தரித்திருக்கப் போகும் ஒரு சில கணங்களில் இன்னும் ஏதேனும் புண்ணியம் செய்ய நேர்ந்தால் அதுவும் உனக்களித்தேன். என்ன உயர்ந்த சிந்தனை !!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஜயராமன்

கர்ணன் ஒரு அற்புதமாக வீரன். பல நல்ல குணங்களின் இருப்பிடம். கொடையில் அவன் கடவுளையும் மிஞ்சினான்.

ஆனால் அகங்காரி. பொய் உரைப்பவன். பொய் பேசி அவன் வித்தைகளை பரசுராமரிடம் கற்கிறான். சபையில் தன் சகோதரன் மனைவி திரௌபதியை ஆபாசமாக பேசுகிறான். பீஷ்மர் முதலான பெரியோர்கள் கேட்டுக்கொண்டும் அவன் அவர்களை தரக்குறைவாக நடத்துகிறான். துரியோதனை தெரிந்தே அவன் தப்புவழியில் உற்சாகப்படுத்துகிறான். பொய் யுத்தம் அர்ஜூனனுடன் (விராட நகரில்) ஆடி தோற்கிறான். பீஷ்மர் முதலானவர் கேட்டுக்கொண்டும் அவன் துரியோதனிடம் நல்லது சொல்ல மறுக்கிறான். அரக்கு மாளிகையில் தன் சகோதரர்களை வஞ்சமாக எரிக்க உடந்தையாகிறான்.

அவனை ஏற்றமாக பேசுபவர்கள் தர்மத்தின் சூட்சுமத்தை அறியாதவர்கள்.

எத்தனை நல்ல குணங்கள் இருந்தாலும், சில முக்கிய தீய குணங்கள் இருந்தால் அவன் கெடுவான், அழிவான், சரித்திரத்தில் ஏசப்படுவான் என்பதற்கு ராமாயணத்தில் ராவணனும், பாரதத்தில் கர்ணனும் உதாரணங்கள்.

தங்கள் பதிவுக்கு நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்)

எனக்கு மகாபாரதக் கதைகளில் பிடித்த கதாபாத்திர கர்ணனுடையது.
///
தீயவருடன் இணைந்து தீய காரியத்திற்கு துணை புரிந்ததால் கர்ணன் எப்படியும் துர்மரணம் எய்த வேண்டியவனே!
///
இதனை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. தீயவனிடத்திலும் அன்பு செய்பவனே இறைவன்.

அது மட்டும் இல்லாமல் கர்ணனை அவமதித்து அவனை துரியோதனன் பக்கம் தள்ளியதே இவர்கள்தான் ஆகவே இது கர்ணன் குற்றம் இல்லை.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வெட்டிப்பயல்
//அபிமன்யூவின் பின்னாலிருந்து அவன் தனுசை உடைத்தது கர்ணனே!!//
போர் களத்தில் ஒப்பாரி ஏது?
கர்ணனின் மகனை இவர்கள் கொன்றதும் தவறுதான் இருவருமே குற்றவாளிகள் தான் தர்மத்தின் முன்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

CAPitalZ
தங்களுக்கு நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

செல்வன்,
கர்ணன் என்ன தவறு செய்தான் என்கிறீர்கள் அவன் ஒன்றும் தவறு செய்யவில்லையே பாஞ்சாலிக்கு. சொன்னான் என்ன சொன்னான், "மார்பிலே துணியைத் தாங்கும்
வழக்கம் கீழடியாக் கில்லை
சீரிய மகளும் அல்லள்
ஐவரைக் கலந்த தேவி
யாராடா பணியாள் வாராய்
பாண்டவர் மார்பில்ஏந்தும்
சீரையும் களைவாய் தையல்
சேரையும் களைவாய் என்றான்
இவ்வுரைக் கேட்ட ஐவர்
பணிமக்கள் ஏவா முன்னம்
தெவ்வர் கண்டஞ்சு மார்பைத்
திறந்தனர் துணியைப் போட்டார்.
நவ்வியைப் போன்ற கண்ணாள்
ஞான சுந்தரி பாஞ்சாலி
எவ்வகை உய்வமென்றே தியங்கினாள்
இணைக்கை கோத்தாள்.
உண்மைதானே இவள் அரன்மனையில் இருக்கும் அடிமைகளுக்கு தர்மம் நீதி இவளுக்கு ஒரு நீதியா புருஷன்கள் தனது ஆடை ஆபரணங்களை களைந்தனரே இவள் ஏன் செய்யவில்லை. அந்த கால வழக்கம் அது தானே ஒரு முறை மாலன் எழுதியிருந்தார் நாகர் கோயில் பக்கம் பெண்கள் மேலாடையில்லாமல் இருந்ததாக ஒரு வரலாறு எழுதியிருந்தார் படித்த ஞாபகம்
அதாவது அடிமை ஆண்கள் ஆபரணங்கள் அணியக்கூடாது துண்டுகளை தோள் மீடு போட்டுக்கொள்ளக்கூடாது. அது போல பெண்கள் கேள பெண்கள் போல் இருக்க வேண்டும்.
சரி பின்னூட்டத்திற்க நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris)

ஐயா இப்பாடல்கள் பாரதியாரின் பாஞ்சாலி சபதப் பாடல்களா???
யோகன் பாரிஸ்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஜான்
ஆமாம்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger G.Ragavan

மாபாரதத்தை எடுத்துக் கொண்டால் எந்தப் பாத்திரமும் முழுமையான உத்தமப் பாத்திரம் அல்ல. கர்ணனிடம் தவறு கண்டவர்கள் சொல்வது...பாஞ்சாலியை அவமானப்படுத்தியது...இன்னொன்று அபிமன்யு மீது அம்பிட்டது. இரண்டாவதை முதலில் கொள்வோம். போர்க்களத்தில் இருதரப்பிலும் ஒழுங்கீனங்களும் போரற மீறல்களும் மலிந்திருந்தன. பெயரில் தருமத்தை வைத்திருந்தவன் கூட "ஹஸ்வத்தாமா ஹதகா குஞ்சரஹா"தான். ஆகையால் போர்க்களத்தில் கூட்டதோடு கும்மியடித்த கர்ணனை மட்டும் குற்றவாளியாக்குவது தகாது. போர்க்களத்தில் கர்ணன் செய்தது குற்றமென்றால் பாரதத்தில் எந்தப் பாத்திரமும் குற்றமற்றதல்ல. கண்ணன் உள்பட.

பாஞ்சாலியை அவமானப் படுத்தியது.....ஊரில் ஒரு பெண்ணை நான்கு பேர் பேசுவார்கள். அது தவறுதான். ஐயமில்லை. ஆனால் அவர்களை எல்லாம் விட கட்டிய கணவனே பணயம் வைத்து ஆடினானே...பாதகன்....அவன் தின்பதற்கும் சோறு போட்டாளே இந்த பாஞ்சாலி...இவர்கள் எல்லாரும் நல்லவர்கள்...கர்ணன் மட்டும் கெட்டவன். கர்ணன் செய்தது தவறுதான். ஆனால் எல்லாரும் -4 வாங்கியிருக்கையில் கர்ணன் -2 வாங்கியிருக்கிறான். அதான் உண்மை.

துரியோதனனுக்கு கர்ணன் அறிவுரைகள் சொல்லாமல் இல்லை. துரியன் விருப்பம் அறிந்தவன். ஆயினும் போர் வழி அதைப் பெற வைக்க எவ்வளவோ முயல்கிறான். ஆனால் முடியவில்லை. முயற்சி தோல்வியில் முடிந்தால்...முயற்சியே எடுக்கவில்லை என்பதா!

ஆனாலும் ஏன் துரியனுடன் இருந்து மாண்டான்? இந்தப் பக்கம் வந்திருந்தால் அத்தனை செல்வமும் பதவியும் இவன் காலடியில்தானே....ஏன் செய்யவில்லை. அதுதான் செய்நன்றியறிதல். தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் வரட்டும் என்று அவன் செய்த தருமம். குருவிடத்திலேயே நன்றி மறந்த உத்தமராம் பாண்டவர்க்கு முன் இவன் இந்தக் காரணதுக்காக கெட்டவன் என்றால்...அப்படியே இருக்கட்டும்.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது பாண்டவரில் எவரைக் காட்டிலும் உயர்ந்தவன் கர்ணனே...கர்ணனே...கர்ணனே...

 
மணிக்கு, எழுதியவர்: Blogger மெளலி (மதுரையம்பதி)

கர்ணனுக்கு இருந்தது நட்பு அல்ல...அது செஞ்சொற்று கடன்....அதனை கழிக்கத்தான் அவன் போரில் இரங்குகிறான்....அழகாய் சொன்னார் கர்ணன் படத்தில் 'செஜ்சொற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா! கர்ணா வருவதை எதிர்கொள்ளடா என்று.

//தீயவருடன் இணைந்து தீய காரியத்திற்கு துணை புரிந்ததால் கர்ணன் எப்படியும் துர்மரணம் எய்த வேண்டியவனே!
///
இதனை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. தீயவனிடத்திலும் அன்பு செய்பவனே இறைவன்//

மற்றபடி தீயவை அழிய வேண்டுமென்றால் அதுவும் உற்ற நண்பர் தீயவை செய்யும் போது தட்டிக்கேட்காதது தவறு...அதற்கான பலன் தான் அவனது மரணம்....

ஆனால் அவன் செய்த தர்மம் அவனுக்கு மரணத்தை இறைவன் முலமாகவே தந்தது.....இறைவனுக்கு இட்ட பெருமையையும் தந்தது.

எந்த ஒருவன் இறக்கும் தருவாயில் இறைவனை நினைக்கிறானோ அவனுக்கு முக்தி என்கிறது...அதனால் தான் காதில் கர்ண மந்திரம் என்று ஒன்று சொல்கிறார்கள் இன்றும். அது வேறு ஒன்றும் அல்ல...இறைவனின் நாமம் கேட்டுக்கொண்டே அந்த ஜீவன் இறைக்க வேண்டும் என்பதற்க்குத்தான்..

இங்கே கர்ணனுக்கு கடைசியாக அவனுக்கு பிடித்தபடி தானம் செய்ய வாய்ப்பும் தந்து, அதன் முடிவில் தனது விஸ்வருபத்தினை காண்பிக்கிறான் கண்ணன்.....

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஜடாயு

என்னார் ஐயா,

அதி அற்புதமான கருத்தாழம் கொண்ட வில்லிபாரதப் பாடல்களை மேற்கோள் காட்டி கர்ணனைப் பற்றி நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி.

தன் மனதிற்குப் பட்டதைத் தர்மம் என்று கொண்டு அதன்படி அதர்மம் செய்த நண்பனுக்கும் துணை நின்றவன் கர்ணன்.

// இந்த இடத்தில் என்கொரு அய்யம் வழங்குவாயா? என்கிறானா? அல்லது வழங்குவாயாக என்கிறானா கண்ணன் என்பது தான் //

பாடலில் "இயைந்தது ஒன்று இக்கணத்து அளிப்பாய்" என்று வருகிறது. இது தானம் கேட்கும் வேண்டுதல் தொனியில் இல்லை. "தானம் தருவதைத் தன் இயற்கையாகவே கொண்ட நீ அந்த இயற்கைப் படியே தருவாய்!" என்ற நம்பிக்கை வெளிப்பாட்டுக் கூற்றாகவே உள்ளது - "குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்பதில் உள்ளது போல.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ராகவன்
மகாபாரதத்தில் எல்லோரும் நல்லவர்கள்தான்; இருவரைத்தவிர அண்ணன் தம்பியை கெடுப்பவர்கள்யார் மாமன் மைத்துனன்தான். அதான் சகுணி மாமா, மைத்துனன் கண்ணன். என்னைப் பொருத்தவரை கண்ணன் தான் இந்த கதைதயாரிப்பு டேரைக்ஷன் எல்லாம். சகுணி சாகும் போது துரியோதனன் செத்தானா? என்று கேட்டுதான் உயிர் விடுவான்.
போர் வேண்டாம் என்று சொன்ன விஜயனை போர்செய்ய தூண்டியவனும் பொய்சொல்லாத தர்மபுத்திரனை பொய் பொய்சொல்ல வைத்தவனம் கண்ணனே.
துரியோதனன் கண்ணன் மேல் கேட்ட கேள்விகளை(கற்பணையாக)நான் எழுதிவைத்தேன் முத்தமிழ் மன்றத்திலும் இட்டு வைத்தேன் காணவில்லை எனது கோப்பில்.
முடிந்தால் ஞாபக படுத்தி எழுதுகிறேன்
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

என்னார் ஐயா

பாண்டவர்கள் நல்லவர்கள் இல்லை.அடிமைபெண்களை மோசமாக அவர்கள் நடத்தியிருந்தால் அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவித்து விட்டனர்.14 வருஷம் ஜெயிலில் இருந்தது,அனைத்து புதல்வர்களையும் இழந்தது என அவர்கள் செய்த தவறுகள் அனைத்திற்கும் தண்டனை பெற்றனர்.

கர்ணனுக்கும் அதே போல் அவன் செய்த தப்புக்கு ஆண்டவன் தண்டனை கொடுத்தான்.அவன் செய்த நல்லதிற்கு வீரசுவர்க்கம் கொடுத்தான்.

//ஆனாலும் ஏன் துரியனுடன் இருந்து மாண்டான்? இந்தப் பக்கம் வந்திருந்தால் அத்தனை செல்வமும் பதவியும் இவன் காலடியில்தானே....ஏன் செய்யவில்லை. அதுதான் செய்நன்றியறிதல். தனக்குக் கெட்ட பெயர் வந்தாலும் வரட்டும் என்று அவன் செய்த தருமம். குருவிடத்திலேயே நன்றி மறந்த உத்தமராம் பாண்டவர்க்கு முன் இவன் இந்தக் காரணதுக்காக கெட்டவன் என்றால்...அப்படியே இருக்கட்டும்.//

ராகவன்,
தப்பு செய்தவன் அப்பாவாகவோ,அண்ணனாகவோ,தம்பியாகவோ இருந்தாலும் அவனை எதிர்த்து போர் புரி,நீதியை நிலைநாட்டு என்பது தான் கீதையும்,நமது வேதஙக்ளும் சொல்லும் நியதி.கர்ணன் துரியோதனன் பக்கம் நின்றது அவனது நட்பின் உயர்வை காட்டியபோதும் அது அவன் தவறுகளை நியாயப்படுத்தாது.

எந்த காரணத்தை சொல்லிக்கொண்டும் அதர்மத்துக்கு யாரும் துணை போகக்கூடாது.தாய்ப்பாசம் காரணமாக பரதன் அனியாயமாக வந்த சாம்ராஜ்ஜியத்தை ஏற்றிருந்தால் 'மாத்ருதேவோ பவ' எனும் கோட்பாட்டை காட்டி அதை நியாயப்படுத்த முடியுமா?

நீதி,நேர்மை என்று வரும்போது உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து தவறிழைக்கக்கூடாது.அப்படி செய்தால் அதற்கான தண்டனையை அனுபவிக்க தயாராகவே இருக்க வேண்டும்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

//ஆனால் அவர்களை எல்லாம் விட கட்டிய கணவனே பணயம் வைத்து ஆடினானே...பாதகன்....அவன் தின்பதற்கும் சோறு போட்டாளே இந்த பாஞ்சாலி...இவர்கள் எல்லாரும் நல்லவர்கள்...கர்ணன் மட்டும் கெட்டவன். //

தருமபுத்திரனும் அவன் சகோதரர்களும் மனிதர்கள்,கடவுளல்ல.கர்ணனையும் துரியோதனர் கும்பலையும் விட அவர்கள் உயர்ந்து நிற்பது கண்ணன் மேல் அவர்கள் கொண்ட பக்தியால் தான்.

"என்னை சரணடை.உன்னை நான் கைவிடமாட்டேன்" என்பது கீதை வாக்கு.அதை செய்ய அவர்கள் தவறவே இல்லை.

தன்பக்தர்கள் என்பதால் அவர்களுக்கு எந்த சலுகையும் அவன் தரவில்லை.செய்த தப்புகளுக்கு தண்டனை தந்தான்.அதே சமயம் அவர்கள் பக்திக்கு நற்கூலியையும் கொடுத்தான்.

துரியோதனனை பொறுத்தவரை கண்ணன் அரசவையில் விஸ்வரூபம் எடுத்து "நான் கடவுள்.என் பேச்சை கேள்" என சொன்னான்.கர்ணன்,துரியோதனன் உட்பட அனைவருக்கும் விஸ்வரூப தரிசனம் கிடைத்தது.அவர்கள் கேட்டார்களா?"கடவுளே வந்து சொன்னாலும் தப்பு செய்வேன்" என ஒருத்தன் முடிவெடுத்தால் அவனுக்கு அழிவு நிச்சயம்.அவனுக்கு துணை போனவர்களுக்கும் அழிவு நிச்சயம்.நடந்தது அதுதான்.

சாகப்போகிறோம் என்பது தெரிந்தே சாவை வலிந்து தேடிக்கொண்டவர்கள் அவர்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger கால்கரி சிவா

என்னார் சார், கர்ணன் இயற்கையில் கொடையாளி அல்ல என்றும் பாண்டவர்களுக்கான சண்டையில் வெற்றி பெறும் தான தர்மம் என்ற வேள்வியை செய்வதாக சபதம் செய்வதாவதாகவும் எங்கோ படித்த ஞாபகம்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

செல்வன்
தப்பு செய்தவன் தண்டணை பெற வேண்டும் அது நீதி தான் நல்ல பதில் கொடுத்துள்ளீர்கள் நன்றி

கால்கரி சிவா
தாங்கள் சொல்வது தெரியவில்லையே ஞாபகமும் இல்லை இருந்தாலும் படித்துப் பார்க்கிறேன

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

புலிக்குட்டி
அதைத்தான் நானும் சொல்கிறேன் சோம பானம் சுரபானமெல்லாம் ராமயானத்துக்கு முந்தின காலம் தானே தெரியவில்லையே

 

Post a Comment

<< முகப்பு