அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சிவாஜி கணேசன் பகுதி 2

மீண்டும் நாடகம்
என்.எஸ்.கிருஷ்ணன்
நாடகக் கம்பெனியில் பிளவு
அண்ணாவின் நாடகம்
வாழ்க்கையில் திருப்புமுனை
பெரியார் பாராட்டு
சக்தி நாடகசபா
வேலூர் முகாம்
திருமணம்
.
மீண்டும் நாடகம்

அப்போது யதார்த்தம் பொன்னுசாமிபிள்ளையின் ``பாலகான சபா", ``மங்கள கான சபா" என்ற புதிய பெயரில் நாடகங்கள் நடத்தி வந்தது. அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய டி.கே.சம்பங்கி, எம்.இ.மாதவன் ஆகிய நடிகர்கள் இந்த நாடகக் கம்பெனியை வாங்கி, கும்பகோணத்தில் முகாமிட்டு நாடகம் நடத்திக்கொண்டு இருந்தனர்.சிவாஜியின் பழைய நண்பர் ஒருவர், அந்த நாடகக் குழுவில் இருந்தார். திருச்சிக்கு வந்த அவர் சிவாஜியை சந்தித்தார். ``நீ மெக்கானிக் வேலையா பார்க்கிறாய்? நாடக நடிகனான நீ, இப்படி இரும்பைத் தூக்கிக்கொண்டு அலைகிறாயே. என்னுடன் வந்து விடு. மீண்டும் நாடகத்தில் நடிக்கலாம். நல்ல நடிகர்கள் இருந்தால் அழைத்து வருமாறு, கம்பெனி முதலாளி என்னிடம் சொன்னார்" என்றார். இதுபற்றி தாயாரிடம் சிவாஜி ஆலோசித்தார். மகனை மீண்டும் நாடகத்துக்கு அனுப்ப ராஜாமணி அம்மாளுக்கு விருப்பம் இல்லை. ``இப்போது பார்க்கும் மெக்கானிக் வேலையிலேயே தொடர்ந்து இரு. எதிர்காலத்தில் பெரிய மெக்கானிக் ஆகலாம்.
நாடகக் கம்பெனி வேண்டாம்" என்று கூறினார்.சிவாஜி யோசித்தார். நடிப்பு என்பது அவருடைய ரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று. மீண்டும் நாடகக் கம்பெனிக்கு போகக் தீர்மானித்தார். ``அம்மா! நாடகத்தில் தொடர்ந்து நடித்தால், எதிர் காலத்தில் நல்ல பெயர் கிடைக்கும். கொஞ்சகாலம் பொறுத்துக்கொள்" என்று ஆறுதல் கூறிவிட்டு, நண்பனுடன் கும்பகோணம் புறப்பட்டார்.அங்கு, சிவாஜியின் பழைய நண்பர்கள்தான் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் சிவாஜியை வரவேற்றார்கள்.

என்.எஸ்.கிருஷ்ணன்

மங்கள கான சபா, சென்னைக்கு சென்று நாடகங்கள் நடத்தி வந்தது. அப்போது, அந்த கம்பெனியை கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் வாங்கி, ``என்.எஸ்.கே.நாடக சபா" என்ற புதிய பெயரில் நாடகங்களை நடத்தலானார்.அப்போது அந்த கம்பெனியில் கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி ஆகியோர் சேர்ந்தார்கள். கே.ஆர்.ராமசாமி நன்றாக பாடக்கூடியவர். எனவே, ``மனோகரா", ``ரத்னாவளி" போன்ற நாடகங்களில் அவர் கதாநாயகனாக நடித்தார். சிவாஜி மீண்டும் பெண் வேடம் போட்டார்!

இந்த சமயத்தில் (1944-ம் ஆண்டு நவம்பரில்) ``இந்துநேசன்" என்ற மஞ்சள் பத்திரிகையின்
ஆசிரியரான லட்சுமிகாந்தன் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு சதி செய்தாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், எம்.கே.தியாகராஜ பாகவதரும் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இருவரும் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலில் அப்பீல் செய்து, விடுதலை பெறுவதற்காக சட்டத்தின் துணையுடன் போராடிக் கொண்டிருந்தார்கள். என்.எஸ்.கிருஷ்ணன் சிறையில் இருந்தாலும், தன்னுடைய நாடகக் குழுவினர் வேலை இல்லாமல் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணினார். எனவே, நாடகக் கம்பெனியைத் தொடர்ந்து நடத்தும்படி, தன்
மனைவி டி.ஏ.மதுரத்திடம் கூறினார்.

நாடகக் கம்பெனியில் பிளவு

எஸ்.கே.நாடகக் குழுவில், அப்போது எஸ்.வி.சகஸ்ரநாமமும், கே.ஆர்.ராமசாமியும் முக்கிய
நடிகர்கள். இவர்களில் யாரிடம் நிர்வாகப் பொறுப்பை ஒப்படைப்பது என்று மதுரம் யோசித்தார். முடிவில் சகஸ்ரநாமத்திடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார். இதனால், கே.ஆர்.ராமசாமி வருத்தம் அடைந்தார். என்.எஸ்.கே.நாடக சபாவில் இருந்து விலகி, புது
நாடகக் கம்பெனி தொடங்க தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து, நாடகக் குழு இரண்டாக
பிளவுபட்டது. சிலர் சகஸ்ர நாமம் அணியிலும், சிலர் கே.ஆர்.ராமசாமி அணியிலும் சேர்ந்தனர். கே.ஆர்.ராமசாமியுடன் சேர்ந்தவர்களில் சிவாஜிகணேசனும் ஒருவர். பேரறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய தொடர்பு உடையவர் கே.ஆர்.ராமசாமி. அவர் அண்ணாவை
சந்திப்பதற்காக காஞ்சீபுரம் சென்றார். போகும்போது, சிவாஜிகணேசனையும், தன் ஆதரவாளர்களையும் அழைத்துச்சென்றார். அண்ணா அப்போது ``திராவிட நாடு" என்ற
பத்திரிகையை நடத்தி வந்தார். அந்த பத்திரிகை அலுவலகத்தில், சிவாஜியும், மற்றவர்களும்
தங்கினார்கள். சிவாஜிகணேசன் வாழ்க்கையில் திருப்புமுனை திராவிட கழகத்தில் இருந்து தி.மு.கழகம் பிரியாத காலக்கட்டம் அது (1946). சென்னையில் ஏழாவது சுய மரியாதை மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளில், பெரியாரும், அண்ணாவும் தீவிரமாக ஈடுபட்டு
இருந்தனர்.

அண்ணாவின் நாடகம்

மாநாட்டில் நடிப்பதற்காக ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற பெயரில் ஒரு நாடகத்தை அண்ணா எழுதியிருந்தார்.இந்த நாடகத்தின் கதைச்சுருக்கம் வருமாறு:
சிவாஜி பெரிய மாவீரன். சாதாரணக் குடிமகனாக இருந்து பெரிய மன்னனானவன். அந்நியர் ஆட்சியை எதிர்த்தவன்.மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியபோதிலும், அவன் மன்னனாக முடி சூட்டிக் கொள்ள பெரிய எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், அவன் கீழ் சாதி!
இதனால், காசியில் இருந்து காகப்பட்டர் என்ற பெரிய மதத் தலைவரை அழைத்து வந்து, சிவாஜியை சத்திரியனாக மாற்றுகிறார்கள். அதன்பிறகு தான் அவர் சிம்மாசனம் ஏற, இந்துக்கள் சம்மதிக்கிறார்கள். இப்படி செல்லும் இந்த நாடகத்தில், சிவாஜியாக
எம்.ஜி.ஆரும், காகப்பட்டர் வேடத்தில் அண்ணாவும், மற்றொரு முக்கிய வேடத்தில் டி.வி.நாராயணசாமியும் நடிப்பது என்று முடிவாகியது. இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். காங்கிரஸ் அனுதாபியாகவும், பக்தராகவும் இருந்தார்.என்ன காரணத்தினாலோ, எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தில்
நடிக்கவில்லை. நாடகத்துக்குப் பொறுப்பாளராக இருந்த நடிகர் டி.வி.நாராயணசாமி அண்ணாவை சந்தித்து, எம்.ஜி.ஆர். தன்னால் நடிக்க இயலாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.

வாழ்க்கையில் திருப்புமுனை

``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கியிருந்த சிவாஜி கணேசன், இதற்குள் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியிருந்தார். சிவாஜியின் நடிப்பாற்றல் பற்றி அண்ணாவும் நன்கு அறிந்திருந்தார்.எனவே, சிவாஜியை அழைத்து, ``கணேசா! என் நாடகத்தில் நீ சிவாஜி வேடத்தில் நடிக்கிறாயா?" என்று கேட்டார். இதைக்கேட்டு சிவாஜிக்கு இன்ப அதிர்ச்சி! தன்
காதுகளையே நம்பமுடியவில்லை. ``என்ன அண்ணா சொல்கிறீர்கள்? உங்கள் நாடகத்தில் நான் நடிப்பதா? அதுவும் சிவாஜி வேடத்தில்! என்னால் முடியுமா?" என்றார். ``நீ முயற்சி செய்து பார், கணேசா! உன்னால் முடியும்" என்றார், அண்ணா.மேலும் அவர் எழுதிய 90 பக்க நாடக வசனங்களை சிவாஜியிடம் கொடுத்து, ``நான் வீட்டிற்குச் சென்று வருகிறேன். அதற்குள் இதை நீ படித்து வைத்திரு. எப்படிப் பேசுகிறாய் என்று பார்ப்போம்" என்று
கூறிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

அவர் சிவாஜியிடம் வசனத்தை கொடுத்தபோது பகல் பதினோரு மணி இருக்கும். அண்ணா வீட்டிற்கு சென்று, மாலை ஆறு மணியளவில் திரும்பி, அலுவலகத்திற்கு வந்தார். ``கணேசா! வசனத்தைப் படித்தாயா?" என்று கேட்டார்.சிவாஜி அவரிடம், ``அண்ணா! நீங்கள் இப்படி
உட்காருங்கள்!" என்று கூறி, அவர் எழுதிக்கொடுத்த வசனங்களைப் பேசி, அதற்குத் தகுந்தாற்போல் நடித்துக் காண்பித்தார். அண்ணா சிவாஜியை கட்டித்தழுவி ``கணேசா! நீ
இதை ஏழே மணி நேரத்தில் மனப்பாடம் செய்து விட்டாயே! அரிய சாதனை" என்றார்.
அண்ணா எழுதிய 90 பக்க வசனத்தை குறுகிய காலத்தில் படித்து, நடித்துக் காட்டினார் என்றால் அதற்கு சிவாஜியிடம் இருந்த கலை ஆர்வமும், மனப்பாடம் செய்வதில் அவருக்கு இருந்த ஆற்றலும்தான் காரணம்.

திராவிட கழக மாநாட்டில், ``சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" நாடகம் நடந்தது. இந்த நாடகத்தில் சிவாஜியாக சிவாஜி கணேசனும், காகபட்டர் வேடத்தில் அண்ணாவும் நடித்தனர்.

பெரியார் பாராட்டு

3 மணி நேரம் நடந்த நாடகத்தை, கடைசி வரை இருந்து பார்த்தார், பெரியார். ``நான் 10 மாநாடுகளில் சொல்லக்கூடிய கருத்துக்களை இந்த ஒரே நாடகத்தில் சொல்லிவிட்டார், அண்ணா" என்று பாராட்டினார்.அத்துடன், ``யாரோ ஒரு சின்னப்பையன் சிவாஜியாக
நடித்தானே, அவன் யார்?" என்று கேட்டார். சிவாஜிகணேசனை பெரியார் முன் கொண்டுபோய் நிறுத்தி, ``இந்தப் பையன்தான். பெயர் கணேசன்" என்று அறிமுகம் செய்து வைத்தனர். ``சிவாஜியாக ரொம்ப நன்றாக நடித்தாய்! இன்று முதல் நீ கணேசன் அல்ல; சிவாஜி!" என்று பெரியார் வாழ்த்தினார். பெரியாரின் இந்த வாழ்த்து பெரிய பட்டமாக அமைந்து விட்டது. அதுவரை ``வி.சி.கணேசன்" என்று அழைக்கப்பட்டவர், அன்று முதல் ``சிவாஜி கணேசன்" ஆனார்.

``என்னுடைய வாழ்க்கையின் உயர்வுக்கு உறுதுணையாக இருந்தது சிவாஜி என்ற பெயர்!
ஐயாவையும், அண்ணாவையும், அந்த மாநாட்டையும் நான் என்றுமே மறப்பதில்லை. அதற்குப்பிறகுதான் சாதாரண கணேசன், சிவாஜிகணேசன் ஆனேன். `சிவாஜி' என்ற பெயர், தந்தை பெரியார் அவர்கள் எனக்குப் போட்டபிச்சை" என்று சிவாஜிகணேசன் தன்
வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

``பராசக்தி" வருவதற்கு முன்பே சிவாஜி கணேசன்
திருமணம் சீர்திருத்த முறையில் நடந்தது
(1-5-1952)

நடிகர் சிவாஜி கணேசன் திருமணம், ``பராசக்தி" படம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக சுவாமி மலையில் நடந்தது. கே.ஆர்.ராமசாமி குழுவில் சிவாஜி நடிகர் கே.ஆர்.ராமசாமி தன் நாடகக் குழுவை தஞ்சாவூரில் தொடங்கினார். இந்த நாடக்குழுவில்,
சிவாஜி கணேசனும் இடம் பெற்றார். ``மனோகரா" நாடகத்தில் கே.ஆர்.ராமசாமி மனோகரனாக நடித்தார். சிவாஜிகணேசன், மனோகரனின் தாயார் பத்மாவதியாக
நடித்தார். இந்த சமயத்தில்தான் கே.ஆர்.ராமசாமிக்காக ``ஓர் இரவு" என்ற நாடகத்தை அண்ணா எழுதினார். ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களைக் கொண்டு,
கதையை புதுமையாக எழுதியிருந்தார். இந்த நாடகத்தில் சிவாஜி கணேசனும் நடிப்பதாக
இருந்தது. ஆனால், நாடகக் குழுவைச் சேர்ந்த ஒருவருடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், அவர் நாடகத்தில் நடிக்கவில்லை காஞ்சீபுரத்துக்கு சென்று, ``திராவிட நாடு" அலுவலகத்தில் தங்கிக் கொண்டு, அண்ணாவுக்கு உதவியாக இருந்தார். அண்ணா பொதுக்கூட்டங்களுக்குச் செல்லும்போது, சிவாஜியையும் தன்னுடன் அழைத்துச் செல்வார். மேடையில் பேசுவதற்கு பயிற்சி அளிப்பார்.

சக்தி நாடகசபா

இந்தக்காலக் கட்டத்தில், ``சக்தி நாடக சபா" என்ற நாடகக் குழுவினர் நாடகங்களை நடத்தி வந்தனர். தங்கவேலுபிள்ளை என்பவர் இந்த நாடகக் கம்பெனியின் உரிமையாளர். எனினும், ``சக்தி" கிருஷ்ணசாமியின் முழுப்பொறுப்பில் நாடக கம்பெனி நடந்து வந்தது.
இந்த கம்பெனியில் முக்கிய நடிகர்களாக இருந்த எம்.என். நம்பியார், எஸ்.வி.சுப்பையா ஆகியோர் ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த சினிமா படங்களில் நடிப்பதற்காக கோவை சென்று விட்டனர். எனவே, சக்தி நாடக சபைக்கு அனுபவம் மிக்க நடிகர்கள் தேவைப்பட்டனர்.
சிவாஜியின் பால்ய நண்பரான கரந்தை சண்முக வடிவேலு சக்தி நாடகசபை சார்பில் காஞ்சீபுரம் வந்து, அண்ணாவை சந்தித்தார். ``சக்தி நாடக சபாவுக்கு நல்ல நடிகர்கள் தேவைப் படுகிறார்கள். நீங்கள் சிவாஜிகணேசனை அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும்" என்று கூறினார்.

அண்ணா சிறிது யோசித்தார். பிறகு சிவாஜி கணேசனை அழைத்து, ``கணேசா!நீ சக்தி நாடக சபாவுக்குப் போ. உன்னை எப்போது திரும்பக் கூப்பிட வேண்டுமோ அப்போது அழைத்துக் கொள்கிறேன்" என்றார். இதனால், அண்ணாவிடம் பிரியா விடை பெற்று சக்தி நாடக சபாவுக்கு சிவாஜி சென்றார். சக்தி நாடக சபை அப்போது திண்டுக்கல்லில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தது. அந்தக் குழுவினர் சிவாஜிக்கு நல்ல மரியாதை கொடுத்தனர். முக்கிய வேடங்கள் அவருக்குக் கிடைத்தன.

வேலூர் முகாம்

திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் சென்றுவிட்டு, வேலூர் சக்தி நாடகசபா முகாமிட்டது.
அப்போது ``நூர்ஜஹான்" என்ற நாடகத்தில், நூர்ஜஹானாக சிவாஜி நடித்தார். அந்த நாடகத்தில் சிவாஜிக்கு வேஷப்பொருத்தம் பிரமாதமாக இருக்கும். அசல் நூர்ஜஹான் போலவே இருப்பார்; அழகாக நடனம் ஆடுவார்.

``நேஷனல் பிக்சர்ஸ்" பி.ஏ.பெருமாள், இந்த நாடகத்தைப் பார்த்தார். சிவாஜியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்தது. ``எதிர்காலத்தில் மிகப்பெரிய நடிகராக சிவாஜி வருவார்" என்று நினைத்தார்.

பராசக்தி

இந்த சமயத்தில், தேவி நாடக சபையினர் ``பராசக்தி" என்ற நாடகத்தை நடத்தி வந்தனர். அந்த நாடகத்தை பெருமாள் முதலியார் பார்த்தார். அந்த நாடகத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது.``பராசக்தி கதையை படமாகத் தயாரிக்க வேண்டும். அதில் சிவாஜி கணேசனை கதாநாயகனாக நடிக்க வைக்க வேண்டும்" என்று தீர்மானித்தார்.நினைத்ததை செயலில் காட்டினார். ``ஏவி.எம்." கூட்டுறவுடன் ``பராசக்தி"யை எடுத்து, தமிழ்ப்பட உலகுக்கு நடிப்பின் இமயத்தை அறிமுகம் செய்து வைத்தார். தனக்கு வாழ்வளித்த பெருமாள் முதலியாரை, கடைசி மூச்சு உள்ள வரை தெய்வமாகவே கருதினார், சிவாஜிகணேசன்.

திருமணம்

``பராசக்தி"யில் நடித்துக் கொண்டிருந்தபோதே, சிவாஜி கணேசனுக்குத் திருமணம்நடந்து விட்டது. சொந்த அக்காள் மகள் கமலாவை அவர் மணந்தார்.பெரியவர்களால் முடிவு செய்யப்பட்ட இத்திருமணம், சுவாமிமலையில் 1952 மே 1-ந் தேதி நடைபெற்றது.
சீர்திருத்த முறைப்படி எளிமையாக இத்திருமணம் நடந்தது. திருமணத்துக்கு மு.கருணாநிதி, எம்.ஜி. ஆர்., நேஷனல் பிக்சர்ஸ் அதிபர் பெருமாள் முதலியார், கவிஞர் கண்ணதாசன், அரங்கண்ணல், டி.ஏ. மதுரம், எஸ்.வி. சகஸ்ரநாமம், டைரக்டர்கள் கிருஷ்ணன்-
பஞ்சு ஆகியோர் வந்திருந்தனர்.

திருச்சியில் தமிழாசிரியராக இருந்த ரத்தினம் பிள்ளை, திருக்குறளைப்படித்து திருமணத்தை நடத்தி வைத்தார். கண்ணதாசன் மாலையை எடுத்துக் கொடுக்க அதை மணமகளுக்கு அணிவித்தார், சிவாஜி. பின்னர் தாலி கட்டினார். மணமக்களை கண்ணதாசன் வாழ்த்தி
பேசினார். ஓட்டலில் இருந்து எடுத்து வந்த சாப்பாடு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
``என்னுடைய கல்யாணச் செலவு 500 ரூபாய்தான்" என்று சிவாஜி கூறியுள்ளார்.
(இப்படி தான் திருமணம் செய்து கொண்டதால் வருத்தப்பட்ட சிவாஜி தனது தம்பி சண்முகத்தின் திருமணத்திற்கு 100 புரோகிதர்களை வைத்து ஆச்சாரப்படி நடத்தினார்)
கோடம்பாக்கத்தில்

திருமணத்துக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கத்தில் வீடு பார்த்து, மனைவியுடன் குடியேறினார், சிவாஜிகணேசன். சில நாட்கள் கழித்து ராயப்பேட்டை பெசன்ட்
ரோட்டுக்கு குடிபோனார். அங்குதான் இப்போது சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் இருக்கிறது.
சிவாஜி- பத்மினி ஜோடியாக நடித்த முதல் படம் ``பணம்" ``பராசக்தி"யை அடுத்து சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த படம் ``பணம்". இதில் சிவாஜி கணேசனும், பத்மினியும் முதன் முதலாக ஜோடி சேர்ந்தனர். ``பராசக்தி"யில் சிவாஜிகணேசன் நடித்துக் கொண்டிருந்த போதே வேறு சில படவாய்ப்புகள் வந்தன.
நனறி மாலை மலர்

8மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger வெற்றி

என்னார் ஐயா,
நடிகர் திலகம் பற்றிய இரண்டாவது பதிவுக்கு மிக்க நன்றி. மிகவும் ஆவலாகக் காத்திருந்தேன் இப் பதிவுக்காக. பல அரிய தகவல்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Kannabiran, Ravi Shankar (KRS)

நல்ல விரிவான தொகுப்பு ENNAR அவர்களே!

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நல்ல கதைக் களன் உள்ள நாடகம். புத்தகம் தேடி மீண்டும் படிக்க வேண்டும் போல் உள்ளது. கீழ்சாதி என்று சொல்லப்படுகின்ற சாதியில் பிறந்து, பின்னர் சிவாஜியின் ஆசானாக விளங்கிய குரு ராமதாஸ் பற்றியும் நாடகத்தில் குறிப்பு வரும் என நினைக்கிறேன். esp காக பட்டருக்கும் ராமதாசருக்கும் ஏற்படும் வாக்குவாதம்.

சிவாஜி கணேசனின் மற்ற புகழ் பெற்ற நாடகங்கள் என்ன என்று தெரியவில்லை. சிவாஜியும் கலைஞரும் கூட சேர்ந்து நடித்துள்ளதாக எங்கோ படித்த ஞாபகம்!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger G.Ragavan

தாழ்ந்த நிலையில் இருந்து ஒருவன் உயர்ந்து சாதனையாளனாக நிற்கும் பொழுது அவனது வரலாற்றைப் பார்த்தால் அதில் பட்ட துன்பங்களும் இன்னல்களும் தியாகங்களும் நிறைந்து தழும்பும். தனக்குகில்லாதது தம்பிக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய பாசத்தையும் என்ன சொல்வது!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

வெற்றி
நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

கண்ணபிரான்
சிவாஜி நாடகத்தில்
மந்திரி என நினைக்கிறேன் சொல்வார்,'மன்னா தாங்கள் முடிசூட ஒரு சிறு தடங்கள் வந்துள்ளது' என்பார்
'என்ன மகுடம் தயாராக வில்லையா?'
என்பார் அதற்கு அவர்,'இல்லை மன்னா தாங்கள் தாழ்ந்த ஜாதியாம் அதனால் அரசுரிமை ஏற்க்கக் கூடாதாம்' என்பர் அப்பொழுது நமது திலகத்தின் வசனம் சூப்பர் யாராது மன்னிலே யாராது கேட்ப்பது....எங்கே பகைவர் எங்கே பகைவர் என தேடி அழிக்கமட்டும் ஜாதியில்லையாம் அரசுரிமைஏற்க தகுதியில்லையாம் கரையான் புற்றிலே கருநாகம் குடிகொண்டு அந்த கரையானை அழிப்து போல இடிப்பொடிந்தோரெல்லாம் இள்ளத்தில் இருங்கள் ஏறு முன்னேறு என எக்காலமிட்டு பிடித்த கோட்டைதான் இது .......

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஜி ஆர்
ஒருவன் முன்னேற வேண்டுமாயின் எந்த அளவிற்கு கஷ்டப்பட வேண்டியுள்ளது பாருங்கள். நடிகர் திலகத்தின் முன்னேற்றத்தைக் கண்ட இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris)

என்னார் ஐயா!
தம்பி கல்யாணத்தை 100 புரோகிதர் வைத்துச் செய்தாரா???அவர் கல்யாணத்துக்கு என்ன?,குறை.கல்யாணத்துக்கு மாப்பிள்ளை;மணப் பெண் போது மென நினைப்பவன் நான்;
சுவையான தகவல்கள்.
அடுத்து ரவி சங்கருக்கு "கீழ்சாதி என்று சொல்லப்படுகின்ற" எனும் வசனம் மறந்தும் வேண்டாம். அவர்கள் வேண்டுமென தாழ்த்தப்பட்டவர்கள்; !!!;ஔவையாரைப் பற்றி அழகாக ,எழுதும் இறைபக்தியுள்ள உங்கள் போல் இளைஞர்கள்;எண்ணத்தில் இப்படிப்பட்ட நினைப்பே!! வேண்டாம். இதனால் நம்மினம் பட்ட துன்பம் போதும்.
மன்னிக்கவும்.
நீதி உயர்ந்தமதி கல்வி! அன்பு நிறையவுடையவர்கள் மேலோர்!
யோகன் பாரிஸ்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஜான்
நன்றி
//தம்பி கல்யாணத்தை 100 புரோகிதர் வைத்துச் செய்தாரா???அவர் கல்யாணத்துக்கு என்ன?//
ஆம் இதை அவரே மேடையில் சொல்லக்கேட்டிருக்கேன் தான் இந்து கொள்கைப்படி திருமணம் கொள்ளாததால் தம்பி சண்முகத்திற்கு
100 புரோகிதரை வைத்து செய்தார் தான் முறையாக படிக்க முடியாததால் ஆங்லோ இந்திய பெண்மணியை வந்த படித்தார். கென்னடியின் அழைப்பை ஏற்று அமெரிக்க செல்வதற்கு சில நாட்களுக்கு முன். அவருக்கு ஆண்டவன் தந்த வரம் எதையும் ஞாபத்தில் வைத்துக்கொள்ளும் நினைவாற்றல் அவருக்கு உண்டு.

 

Post a Comment

<< முகப்பு