அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வேங்கையின் வேந்தன்

முதுமையினால் தளர்ந்தவனும், உடம்பில் தொண்ணூற்றாறு காயவடுக்கள் உள்ளவனும், கால்களில் பட்ட கொடிய காயத்தினால் எழுந்து நிற்கும் சக்தியை இழந்தவனுமான அக்கிழவன் எப்படியோ யுத்த அரங்கத்துக்கு வந்து விட்டான். பல்லவ சைன்யம் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடக்கே போய்விட்டால், சோழநாடு மறுபடியும் நெடுங்காலம் தலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த அந்தக் கிழச் சிங்கத்தின் கர்ஜனை, பல்லவர் கட்சியில் எஞ்சியிருந்த வீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது.

"
ஒரு யானை! எனக்கு ஒரு யானை கொடுங்கள்!" என்றான்.

"
நமது யானைப்படை முழுதும் அதமாகிவிட்டது; ஒன்றுகூடத் தப்பவில்லை" என்றார்கள்.

"
ஒரு குதிரை! ஒரு குதிரையாவது கொண்டு வாருங்கள்!" என்று சொன்னான்.

"
உயிருள்ள குதிரை ஒன்று கூட மிஞ்சவில்லை" என்று சொன்னார்கள்.

"
சோழநாட்டுச் சுத்தவீரர்கள் இருவரேனும் மிஞ்சி உயிரோடு இருக்கிறார்களா? இருந்தால் வாருங்கள்!" என்று கிழவன் அலறினான்.

இருவருக்குப் பதிலாக இருநூறுபேர் முன்னால் வந்தார்கள்.

"
இரண்டு பேர் - தோளில் வலிவும் நெஞ்சில் உரமும் உள்ள இரண்டு பேர் - என்னைத் தோள் கொடுத்துத் தூக்கிக் கொள்ளுங்கள். மற்றவர்கள் இரண்டு இரண்டு பேராகப் பின்னால் வந்து கொண்டிருங்கள். என்னைச் சுமக்கும் இருவர் விழுந்தால், பின்னால் வரும் இருவர் என்னைத் தூக்கிக் கொள்ளுங்கள்!" என்றான் அந்த வீராதி வீரன்.

அப்படியே இரண்டு பீமசேனர்கள் முன்னால் வந்து அந்தக் கிழவனைத் தோளில் தூக்கிக்கொண்டார்கள்.

"
போங்கள்! போர் முனைக்குப் போங்கள்!" என்று கர்ஜித்தான்.

போர்க்களத்தில் ஓரிடத்தில் இன்னமும் சண்டை நடந்து கொண்டிருந்தது. தெற்கத்தி மறவர்கள் எஞ்சி நின்ற பல்லவ வீரர்களைத் தாக்கிப் பின்வாங்கச் செய்து கொண்டே வந்தார்கள்.

இருவருடைய தோள்களில் அமர்ந்த கிழவன் அந்தப் போர் முனைக்குப் போனான். இரண்டு கைகளிலும் இரண்டு நீண்ட வாள்களை வைத்துக் கொண்டு திருமாலின் சக்ராயுதத்தைப் போல் சுழற்றிக்கொண்டு, எதிரிகளிடையே புகுந்தான். அவனைத் தடுக்க யாராலும் முடியவில்லை. அவன் புகுந்து சென்ற வழியெல்லாம் இருபுறமும் பகைவர்களின் உடல்கள் குவிந்து கொண்டேயிருந்தன.

ஆம்; இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்காகப் பின்வாங்கிய வீரர்கள் பலரும் முன்னால் வந்தார்கள். கிழவனுடைய அமானுஷ்ய வீரத்தைக் கண்டு முதலில் சிறிது திகைத்து நின்றார்கள். பிறகு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டு தாங்களும் போர் முனையில் புகுந்தார்கள்.

அவ்வளவுதான்; தேவி ஜயலஷ்மியின் கருணாகடாட்சம் இந்தப் பக்கம் திரும்பிவிட்டது.

பல்லவர் படைத் தலைவர்கள் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரை போகும் யோசனையைக் கைவிட்டார்கள்.

மூன்று வேந்தர்களும் தமக்குரிய மூலபல வீரர்கள் புடைசூழப் போர் முனையில் புகுந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டிய வீரர்கள் பின்வாங்கத் தொடங்கினார்கள். பிறகு அவர்கள் பாண்டிய நாட்டின் எல்லைக்குச் சென்றுதான் நின்றார்கள்.

கங்க மன்னன் பிரிதிவீபதி அன்றையப் போரில் செயற்கரும் செயல்கள் பல புரிந்த பிறகு தன் புகழுடம்பை அப்போர்க் களத்தில் நிலைநாட்டி விட்டு வீர சொர்க்கம் சென்றான்.

இக் கிழவன் தான் விசயாழய சோழன்

(பொன்னியின் செல்வனில் இருந்து)

1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger துளசி கோபால்

என்னார்,

உங்களுக்குப் போட்ட தனிமடல் திரும்பி வந்துருச்சு.
உங்கமெயில் ஐடியை துளசிதளத்துலே பின்னூட்டமாப் போடுங்க.

 

Post a Comment

<< முகப்பு