அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 9 -

சோழர்கள் கி.பி. 14-ம் நூற்றாண்டு வரையில் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். பின்பு அவர்கள் எங்கே போயினர்? அவரது ஆட்சி நிலை குலைந்து விட்டதேயன்றி அவர் தாமும் கிளையுடன் அறவெயொழிந்து விட்டனராவரா? எந்த குலமும் அஃது எவ்வளவு சீர்கேடான நிலையை அடைந் திருப்பினும் அறவேயொழிந்துவிடு மென்பது பொருத்தமாகாது. ஆயின், அது மற்றொன்றிற் கலந்து விடுதலும், பெயர் முதலியன மாறி நிற்றலும் இயல்பே ஆகலின் சோழர்கள் எம்மரபிலே கலந்துள்ளனர் என்பதே ஆராய வெண்டுவது.


கள்ளர்களைச் சோழர் மரபினரெனச் சிலர் கருதியுள்ளாரென்பது முன்பு காட்டப்பட்டது. இவர்கள் முதலில் பல்லவ வகுப்பினரே யென்றும், சோழர்கள் பின்பே இவர்களுடன் கலந்துள்ளனரென்றும் நாம் கூறுகின்றோம். சோழர் கலந்துள்ளன என்பதற்கும் வேறு ஆதரவுகள் வேண்டும். அவ்வாதரவுகளே இங்கே எடுத்துக் காட்ட விருப்புகின்றவை.


இப்பொழுது பெரிய மனிதர்களாகவோ, பெரிய மனிதர்களின் வழியினராகவோ கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள் வழி வழியிருந்து ஆட்சி புரிந்த நாடு என்பதை முதலில் நினைவிற் கொள்ளவேண்டும். சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு 'கோனேரிமேல் கொண்டான்' என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன:


"திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும், தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு இவிவோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து."


''கோனேரி மேல்கொண்டான் கருவூர்த் திருவானிலை ஆளுடையார் கோயில் தேவர்கன்மிகளுக்கு -- இந்நாயனார் கோயிலுக்கு நம்பெயரால் இயற்றின வீரசோழன் திருமடவளாகத்தில் குடியிருந்த தவசியர்க்கும், சிவப்பிராமணர்கும், தேவரடியார்க்கும், உவச்சர்க்கும், பலபணி நிமந்தக்காரர்க்கும் சீவனசேஷமாகத் தென்கரை ஆந்தனூரான வீரசோழ நல்லூர் கொடுத்து இவ்வூரால் வந்த இறையும் எலவையும் உகவையும் கொள்ளப்பெறாதோமாக விட்டு மற்றுள்ள குடிமைப்பாடும் எப்பேர்ப்பட்டதும் இந்நாயனார் கோயிலுக்குச் செய்து இவ்வூர் இப்படி சந்திராதித்த வரை அநுபவிப்பார்களாக நம்மோலைக் கொடுத்தோம். இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக்கொள்க. இவை விலாடத்தரையன் எழுத்து"


இவற்றிலிருந்து தோன்றும் பிற உண்மைகள் ஒருபுறம் நிற்க. கோனேரி மேல்கொண்டான் என்னும் பெயரே இங்கு வேண்டுவது. பெயரினைக் குறித்துத் தென்னிந்தியசாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற்பகுதி 21-ம் சாசனத்தில் சாசன பரிசோதகர் பின் வருமாறு குறித்திருக்கின்றனர்.:


"இப்பெயர் ஒரு விடுகதை பொன்றே இருந்து வந்திருக்கிறது. பலர் பலவிதமாக இதனை எழுதியுள்ளார்கள்........கோனேரின்மை கொண்டான் என்பதற்கு அரசர்க்குள் ஒப்பிரல்லாதவன் என்று பொருள்கொள்ளலாம். கோனேரி எனப் பின்னர் மருவியிருக்கிற தாகத் தெரிகிறது, வீரசோழனும், குலோத்துங்க சோழதேவனும் கோனேரிமேல்கொண்டான் எனவும், கோனேரிமேங்கொண்டான் எனவும் பட்டம் பூண்டிருக்கின்றனர். ஒரு நாணயத்தில் கோனேரி ராயன் என்று எழுதப்பட்டிருக்கிறது. கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம் சோழவரசர் ராஜராஜ தேவராலும் கொள்ளப் பட்டிருக்கிறது. சுந்தர பாண்டியனுக்கும் இப்பட்டமுண்டு. வீரபாண்டியன், குலசேகர தேவன் இவர்களுக்கும் இப்பட்டத்தையே கொண்டவர்கள்"

இப்பெயர் இங்ஙனம் திரிந்து காணப்படினும், கோனேரி மேல்கொண்டான் என்பதே திருத்தமுள்ளதாக இப்பொழுது கொள்ளற்பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்த்தம் கோனேரி என்னும் பாலது. திருப்பதிமலையிலுள்ள ஒரு தீர்தம் கோனேரி என்னும் பெயரதாதலும், கோனேரிராஜபுரம் எனச் சில ஊர்களிருத்தலும், கோனேரி என்று பலர் பெயர் வைத்துக் கொண்டிருத்தலும் இவ்வுண்மையை விளக்குவனவாகும். குலசேகர ஆழ்வார் காலத்திலேயே கோனேரி என வழங்கியிருப்பது, அவர்,


'கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே'


என்று பாடுவதால் அறியலாகும்.

தொடரும்........10

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு