அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 8 -

கி.பி.1116-ல் இராசேந்திர சோழன் ஆட்சியின் 5-வது ஆண்டில் நார்த்தாமலையிற் குறித்துள்ள கல்வெட்டில் தொண்டைமான் என்ற பெயர் குறிப்பிட்டிருக்கிறது. இப்பொழுதிருக்கிற தொண்டைமான் மரபினர் தொண்டை மண்டலத்திலுள்ள திருப்பதியைச் சார்ந்த தொண்டைமான் கோட்டையிலிருந்து தொண்டைமான் புதுக்கோட்டைக்கு வந்ததாகச் சொல்வது வழக்கம்.. தொண்டைமான் தொண்டைமண்டலத்திலிருந்து வந்தவரென்று 'இராஜ தொண்டைமான் அநுராக மாலை' என்ற சுவடியிற் சொல்லியிருக்கிறது.


தொண்டைமான் வமிசாவளி' என்ற தெலுங்குச் சவடியில் (வெங்கண்ணாவால் 1750-ல் எழுதப்பட்டது) தேவேந்திரன் ஒரு நாள் பூமியில் சுற்றி வந்தனனென்றும், அப்பொழுது ஒரு கன்னிகையை மணந்தானென்றும், அவள் பெற்ற பிள்ளைகள் பலரில் ஒருவன் அரசனாயினானென்றும், சொல்லப்பட்டிருக்கிறது. இதன்படி தொண்டைமான் இந்திர வமிசம் என்று கொள்ளப்படும்.


தொண்டைமான் அம்புகோவிலில் குடியேறுதற்கு முன்பு அன்பில் என்ற இடத்தில் தங்கியிருந்தனனெறும், தங்சைக்கத் தெற்கில் உள்ள அம்புகோவில் நாடானது பன்னிரண்டு தன்னரச நாடாக ஏற்பட்டதென்றும் வெளியாகின்றது. வெங்கட்டராவ் புதுக்கோட்டை மானுவலில், தொண்டைமான்களோடு ஒன்பு குடிகள் அம்பு நாட்டில் குடியேறினரென்று கூறி, அவர்கள் பெயரும் குறிப்பிடுகின்றார்.

பெயர்கள்

(வடக்குத் தெருவார்கள்)

 1. மாணிக்காரன்

 2. பன்றிகொன்றான்

 3. பின்பன்றி கொன்றான்

 4. காடுவெட்டி

 5. மேனத்தரையன்

தெற்குத் தெருவார்கள்

  1. பல்லவராயன்

  2. தொண்டைமான்

  3. ராங்கியன்

  4. போர்ப்பன்றி கொண்டான்

  5. கலியிரான்

'இவர்கள் பத்து வீட்டினரும் அரசு என்றும் சொல்லப்படுகின்றனர். இவர்கள், தங்களது புது நாட்டிற்குக் குருக்கள், பிச்சர், மாலைகோப்பார், மேளகாரன், வண்ணான், பரிகாரி என்னும் இவர்களைக் கொண்டு வந்தனர், இன்னவர் அம்பு நாட்டிற் குடியேறிய பின்பு ஆதிய வலங்கன், காளிங்கராயன் என்ற இரண்டு குடும்பங்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டன வென்றும், இவர்கள் எல்லோரும் சேர்ந்து நாலா பக்கங்களிலும் சென்று, பிலாவிடுதி, கரம்பக்குடி, வடக்கலூர், நெய்வேலி, கல்லாக்கோட்டை, நரங்கியன்பட்டி, அம்மணிப்பட்டி, பந்துவாக்கோட்டை, மங்கல வெள்ளாளவிடுதி என்னும் ஒன்பது இடங்களில் குடியேறின ரென்றும் அறிகின்றோம்.


தொண்டைமானால் குறிக்கப்ட்டுள்ள பல தாம்பிர சிலாசாசனங்களில், அவர்கள் தற்காலூரில் (அம்புநாட்டில்) நிலங்களை யுடைய இந்திரகுல அரையர் என்று குறிப்பிட்டிருக்கிறது. சிவன், பிள்ளையார், மாரியம்மன், வீரமாகாளி என்ற தெய்வங்களைப் பூசிப்போர் இவர்கள்.


ஸ்ரீரங்கராயலு என்ற விஜயநகர அரசன் இப்பக்கமாக இராமேச்சுரத்திற்கு யாத்திரை சென்ற பொழுது அவ்வரசனுடைய யானை மதங்கொண்டு பல சேதங்களை யுண்டுபண்ண, அதனை யறிந்த ஆவடைரகுநாத தொண்டைமான் அந்த யானையைப் பிடித்து அடக்கி ராயலுவிடம் கொண்டு வந்தனன் என்றும், அப்பொழுது தொண்டைமானுக்கு 'ராயராகுத்த ராயவஜ்ரீடு ராயமன்னீடு ராய' என்னம் பட்டமும், பல நிலங்களும், யானையும் சிங்கமுகப் பல்லக்கும், பிறவும் வரிசையாக அளிக்கப்பட்டன என்றும். அதிலிருந்து 'தொண்டைராய தொண்டைமான' என அவன் வழங்கப்பட்டனன் என்றும் அறியப்படுகிறது. இந்த மூன்றாவது ஸ்ரீரங்கராயலு என்ற அரசன்றான் சென்னையை ஆங்கிலேயருக்குக் கொடுத்தவன் இதிலிருந்தே (கி.பி.1639) புதுக்கோட்டை தொண்டைமானால் ஆளப்பட்டு வருகிறது."


இதுகாறும் காட்டியவற்றி லிருந்து, கள்ளர்கள் தொண்டை நாட்டினின்றும் சோழ, பாண்டி நாடுகளிற் குடியேறி, அரையர், என்னும் பெயருடன் தன்னரசாக ஆட்சிபுரிந்து வந்தனர் என்னும் உண்மை நன்கு புலப்படுதல் காணலாம். பல்லவராயர் , தொண்டைமான், கள்ளர் என்னும் பெயர்கள் ஒரே வகுப்பினர்க் குரியனவென்று துணிந்து கூறமாட்டாது சரித்திர ஆசிரியர் சிறிது இடர்ப்படினும், அவர் கூறிய வரலாறெல்லாம் ஒரு வகுப்பின ராகவே வலியுறுத்தி நிற்றல் காண்க. யாம் முன்பு கூறியவைகளை இவற்றுடன் சேர்த்துப் பார்க்குமிடத்து நடுவு நிலையுடைய அறிஞர் எவரும் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென்னும் முடிவினை மேற்கொள்வரென்று துணிகின்றனம். ஒரு காலத்தில் தொண்டை மண்டலத்தோடு, சோழ மண்டலத்தையும் அடிப்படுத்து ஆட்சி புரிந்து வந்த பல்லவ சக்கரவர்த்திகள் பின்பு தம் பேரரசாட்சியை இழந்து, பிற விடங்களிற் குடியேறிச் சிற்றரசர்களாயும், சோழர்களிடத்தில் அமைச்சர், தண்டத் தலைவர் முதலானோராயும் இருந்து வந்தனரென்பது மறுக்க வொண்ணாத சரித்திர வுண்மையாம். இவர்கள் தம் பெரும்பதவிகளை யிழந்து சிறுமையுற்ற விடத்தும் இவர்களடன் பிறந்த அஞ்சாமையும், வீரமும் ஒழிந்து விடவில்லை யென்பது மேலே காட்டிய வரலாற்றுக் குறிப்புகளாற் புலபடும். கருணாகரத் தொண்டைமானது வரலாறும் இதனை வலியுறுத்தா நிற்கம்.

தென்னிந்திய சாசன புத்தகம் இரண்டாவது தொகுதி, முதற் பகுதி 22-வது சாசனத்தில்,


" பாண்டி குலபதி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூரில் தொண்டைமானார் தம் பேரால் வைத்த அகரம் சாமந்த நாராயணச்சதுர்வேதி மங்கலம்" என்று வருகிறது. இதுற்கு விளக்கம் எழுதியிருப்பது,


"தொண்டைமானார் என்பவர் இந்நிலங்களை வாங்கித் தந்தவர். சாமந்த நாராயணன் என்பதே இவர் பெயராகவும் வழங்கி வந்திருக்கவேண்டும். இவர் ஒரு சிற்றரசராகவோ அன்றி ஒரு பெரிய பதவியினராகவோ இருந்திருக்க வேண்டும். இப்பொழுது புதுக்கோட்டை அரசர் தொண்டைமான் என்னும் பட்டம் புனைந்தவர், இவருடைய முன்னோர் 1680 ல் பல்லவராய தொண்டைமானைத் தள்ளிவிட்டுப் பட்டத்திற்கு வந்தவர். இவர் ஒருகால் சாமந்த நாராயண தொண்டைமான், கருணாகரத் தொண்டைமான் இவர்கள் வழியினராக இருத்தல் வேண்டும். கலிங்கத்துப் பரணியின்படி கருணகரத் தொண்டைமான் வண்டை நகரில் வசித்த பல்லவ அரசன்: குலோத்துங்கனடைய முதன் மந்திரி. தொண்டைமான் என்னும் பட்டத்திற்குப் பொருள் தொண்டை நாட்டரசக் என்பதாம். தொண்டை மண்டலம் என்பது பல்லவர் நாட்டின் தமிழ்ப் பெயராகும். காஞ்சிபுரம் அதன் தலைநகரம். இந்நகரில் அகப்பட்ட எண்ணிறநத சாசனங்கள் பல்லவராச்சியம் சோழ மன்னருக்கு இரையானமையைத் தெரிவிக்கின்றன" என்பது. இத்தகைய ஆதவுகள் எண்ணிறந்தனவுள்ளன.

இத்துணையும் காட்டிப் போந்தவைகளால் கள்ளர் பல்லவ வகுப்பினரே யென நிலை நாட்டப்படுகின்றது. எனினும் சோழர்குடி முதலியவும் பிற்காலத்தில் இம்மரபிலே கலந்து விட்டன எனத் தெரிகிறது. இங்கே சோழரது கலப்பைக் குறித்துச் சிறிது காட்டுதும்.

தொடரும்...........9

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு