கள்ளர் சரித்திரம் - 5 -
'சிவபக்தியில் மேம்பட்டவனும் மிக்க புகழ்வாய்ந்தோனும் ஆகிய காடு வெட்டி யென்னும் ஓர் தலைவன் மதுரையிற்சொக்கலிங்கப் பெருமானைப் பணிதற்குச் சென்று வையையாற்றின் வடகரையை அடைந்தான். அப்பொழுது பாண்டியன் நாற் புரத்த மதிற் கதவையும், சாத்தித்தன் முத்திரையிட்டு, அவனுடன் படையெடுக்க முயன்றான். வையையும் பெருகிவிட்டது. இந்நிலைமையில் சிவபிரானானவர் காடு வெட்டியின் அன்புக்கு இரங்கி, நள்ளிரவில் வடக்கு மதில் வாயிலை முரித்து வந்து, ஓர் இயந்திரத்தால் அவனையாற்றின்தென்கரையில் ஏற்று வித்து, மதில் இடித்த வழியாகக் கொண்டு சென்று, இருளை வெளிதாக்கி, அவனுக்குச் சோதி விமானத்தையும், தாம் தமது ஒப்பற்ற திருவுருவத்தையும் காட்டியருள, அவனம் கண்டுபோற்றி மனமுருகி நின்றான். நின்றவன் பின் பெருமானது கட்டளையால் விடியமுன்னே மதுரையை விட்டுப்போய் விட, ஆலவாயடிகளாரும் மதிலை புதுப்பித்துத் தமது இடபவிலச்சினையிட்டுப் பாண்டியனுக்குக் கனவிலே அறிவித்தருளினார்' என்பது கதைச் சுருக்கம். இதில் சுட்டியுள்ள தோன்றலை ஓர் சோழன் என்று கடம்பவனபுராணம் முதலியன கூறுகின்றன. பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணம் இவனைச் சோழன் என்று கூறினும் கச்சியில் இருந்தவனாகத் தெரிவிக்கின்றது. வரலாற்றுண்மை அறிய வழியில்லாத நிலைமையில் புராண ஆசிரியர்கள் இவனைச் சோழனென்று கருதினர் போலும்? மேலெ குறிப்பிட்ட பெயர்கள் (தொண்டைமான், பல்லவராயர், பாடவராயர், சேதிராயர், காடு வெட்டி) எல்லாம் கள்ளர் வகுப்பினரக்குள் வழங்கும் கிளைப்பெயர் அல்லது பட்டங்களாக உள்ளன. வாண்டையார் (வண்டையார்) என்னம் பட்டமும் வண்டை வேந்தனாகிய கருணாகரத் தொண்டைமான் வழியினர்என்பதைக் காட்டும். இவர்களுக்குள்வழங்கும் பட்டப் பெயர்களேல்லாம் இந்நூலிறுதியில் தொகுத்துக் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெயரினையு முடையார் பற்பலவூர்களில் இருந்தலால் அவ்வூர்களை அங்கே குறிப்பது மிகையாகும்.
இனி, முத்தரையர் என்பார் கள்ளர் வகுப்பினரென முன்போ காட்டப்பட்டது. முத்தரையர் என்னும் பெயர் முதலில் பல்லவர்க்கு உரியதாய்ப் பின்ப அவர் கீழ் ஆண்ட சிற்றரசர்க்கு வந்ததெனச் சிலர் கருதியுள்ளனர். முதல் மகேந்திரவர்மன், முதற் பரமேச்சுரவர்மன் என்ற பல்லவ வேந்தர்கட்கு முறையே பகாப்பிடுகு. பெரும் பிடுகு (பிடுகு = இடி) என்ற பட்டங்கள்உள்ளன. முத்தரையர்க்கும் இப்பெயர் வழக்குண்டு என்பதனைப் பெரும்பிடுகு முத்தரையன் என்னும் பெயர் காட்டும். புதுக்கோட்டை நாட்டிலுள்ள திருமெய்யத்தில் 'விடேல்விடுகு' என்னும் பெயருள்ள முத்தரையன் ஏரிகள் வெட்டு வித்திருக்கின்றனன். நந்திக் கலம்பகத்தில் நந்திவர்ம பல்லவன் 'விடேல் விடுகு' என்று கூறப்படுகின்றனன் .இங்ஙனம் பல பெயர்கள் ஒத்திருப்பது முத்தரையரும் பால்லவ வகுப்பினரே யென்று காட்டும். காஞ்சியிலிருந்து ஆண்ட பேரரசர்களாய பல்லவர்கள் தம் இனத்தவரையே தஞ்சை முதலிய இடங்களில் அரசாளும்படி செய்திருந்தனரென்பது பொருத்தமாம். இது காறும் கூறியவற்றிலிருந்து கள்ளர்கள் பல்லவ வகப்பினர் அதாவது பல்லவரின் ஒரு கிளை என்பது பெறப்படும். பெயர்கள் ஒத்திருப்பது கொண்டு இவர்கள் பல்லவ வகுப்பினரெனல் பொருந்தாது எனின், பெயர்களே யன்றி வரலாறுகளும் ஒத்திருத்தல் இதில் பலவிடத்தும் காணப்படும். பல்லவரல்லர் என்பதற்கோ யாது காரணமும் இல்லையென்க.
கள்ளர் வகுப்பினராகிய புதுக்கோட்டை அரச பரம்பரையினர் தொண்டைமண்டலத்திலிருந்து வந்த பல்லவர் எனவே புதுக்கோட்டைச் சரிதம் கூறுகின்றது. வின்சன் எ. ஸ்மித் முதலியோரும் அங்ஙனமே கருதியுள்ளாரென்பது முன்பு காட்டப் பட்டது. திருவாளர் பி.டி. சீனிவாசையங்கார் அவர்கள் தாம் எழுதியுள்ள பல்லவர் சரிதத்தில், ( நாம் முன்பு மறுத்துள்ள) சில காரணங்களையெடுத்துக் காட்டிப் பல்லவர் கள்ளரினத்தினினின்றும் உதித்தவராகாதர் எனக் கூறினரேனும், பின் பல்லவர் தமிழராகிவிட்டாரென்று கூறி வந்து, தமது நூலை முடிக்குமிடத்தில் 'ஒரு தெலுங்கு பல்லவக் கிளையார் 17-ம் நூற்றாண்டில் தொண்டைமான் என்றும் பல்லவ ராஜா என்றும் பட்டத்துடன் புதுக்கோட்டை அரசரானார். இப்போது புதுக்கோட்டை அரசரே பல்லவகுல மன்னருடைய புகழை நிலை நிறுத்தி ஆள்கிறார்' என்று குறித்திருக்கின்றனர். இங்ஙனம் பலர் கருத்தும் இக்கொள்கையை ஆதரிப்பனவாகவேயுள்ளன.
இனி, புதுக்கோட்டை மகராஜா காலேஜில் தலைவராக இருந்த திருவாளர் வெ. இராதாகிருட்டினையர் அவர்கள் எழுதிய புதுக்கோட்டைச் சரிதத்திலிருந்தும், கல்வெட்டு முதலியவற்றிலிருந்தும் கள்ளர்களைப் பற்றி அறியப்படுகின்ற பல அறிய செய்திகளை இங்கே தொகுத்துக் காட்டுவோம்.
வளரும்..............(6)
2மறுமொழிகள்:
அன்பு என்னார்,
முத்துக்கோர்வை போன்ற ஒரு ஆய்வுக் கட்டுரை. இன்னும் நிறையத் தவல்களை எழுதுங்கள்.
நன்றி சார்
Post a Comment
<< முகப்பு