அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 3 -

இம் முத்தரையரைக் குறித்துப் பின்னரும் சிறிது ஆராயப்படும்.

னி, பழைய தமிழர் முதலானோரில் கள்ளர் குலத்தவர் எவ் வகுப்பி லடங்குவர் என்பது பற்றி வேறுபட்ட கொள்கைகள் உண்டு. இவர்களை நாகர் வகுப்பின ரெனச் சிலரும், சோழர் வகுப்பினரெனச் சிலரும், பல்லவர் வகுப்பின ரெனச் சிலரும் கூறுவர். கனகசபைப் பிள்ளை அவர்கள் நாகர் வகுப்பினரெனக் கூறகின்றனர். இராமநாதப்புரத்தரசர், மாட்சிமிக்க பா. இராஜராஜேசவர சேதுபதி அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவில் தலைவர்களாக எழுந்தருளிக் கூறிய விரிவுரையில் பின்வருமாறு காட்டியுள்ளார்கள்;

' சோழர்கட்கு முன் இப்போதுள்ள மறவர், கள்ளர் இச்சாதியாரின் முன்னோர்கள் நாகர் என்ற பெயரோடு இச்சோழ ராச்சியத்தை ஆட்சி புரிந்ததாகவும், அவர்களின் தலை நகராகத் தஞ்சை, திருக்குடந்தை, காவிரிப்பூம்பட்டடினம் இவ்விடங்களிருந்தனவாகவும் சரித்திர வாயிலாக வெளியாகிறது.

மேன்மை பொருந்திய வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் இந்திர குலாதிபர் சங்கத்தின் நான்காவது அண்டு விழாவில் தலைவராக அமர்ந்து செய்த விரிவுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர்:

'இந்நாட்டை யாண்ட அரசர் பெருமக்களுள் சோழரைக் கள்வர் எனவே டாக்டர் பர்னலும், வெங்காசாமி ராவ் அவர்களும் குறிப்பிட்டுள்ளாரகள்.

திருவாளர்கள் ம. சீனிவாசையங்கார் அவர்கள், 'சோழர் சாதியிற் கள்ளரென்றும், பாண்டியர் சாதியில் மறவரென்றும் ஒரு சாரார் கொள்கை' என்பர்.

(செந்தமிழ், தொகுதி -2 , பக்கம்--175)

வின்சன் ஏ. ஸ்மித் என்னும் சரித்திர அறிஞர் 'புராதன இந்திய சரித்திரம்'' என்னும் தமது நூலில் பல்லவர் வரலாறு கூறுமிடத்தே கள்ளர் வகுப்பினரையும் இயைந்து கூறுகின்றனர். அவருரைப்பது,

"ல்லவர் யாவர்? எங்கிருந்து வந்தனர்? தென்னாட்டு மன்னர்களில் எங்ஙனம் தலைமை யெய்தினர்? என்ற கேள்விகளுக்கு இப்பொடுது தக்க விடை யளித்தல் இயலாது. 'பல்லவர்' என்ற பெயர் 'பகல்வா' என்னும் பெயருடன் பெரும்பாலும் ஒத்திருப்பதால், பல்லவர் என்பதும் பகல்வா என்பதும் ஒரே பொருளன என்றும், ஆகவே, தென்டனாட்டில் காஞ்சியிலாண்ட அரசர் குடி பெருசியா நாட்டில் தோன்றியதாக வேண்டும் என்றும் டாக்டர் பிளீட்டும், ஏனைய ஆசிரியர்களும் நினைக்கின்றனர். இந்த நூலின் முதற் பதிப்பிலும் இக்கொள்கை சரியானதா யிருக்கலாமென எழுத நேர்ந்தது. ஆனால் இப்பொழுதைய ஆராய்ச்சி இக்கொள்கை அவ்வளவு சரியானதன் றென்று காட்டி விட்டது. சென்னை மாகாணத்தின் வடபாகத்தில் கிருட்டிணா, கோதாவரி யாறு கட்கு இடையேயிருந்த வெங்கி நாட்டில் வசித்த ஒருவகுப்பினரெனச் சொல்வதே ஏறக்குறையச் சரியான கொள்கை யெனலாம். தமிழ் மன்னர்களுக்கும் பல்லவருக்கும் இடைவிடாப் பகைமை யேற்பட்டிருந்ததும், பல்லவரது ஆட்சிக்குட்பட்ட நிலம் இன்னதென இன்று வரை உறுதிப்படுத்த முடியாதிருப்பதும் பல்லவர் தமிழரல்லர் என்பதனைக் காட்டி நிற்கின்றன. ஆகவே, பல்லவர் தென்னாட்டு மன்னரை வென்றே தமது ஆட்சியைத் தமிழ் நாட்டில் நிலை நிறுத்தி யிருத்தல் வேண்டும், மகாராட்டியரைப் போன்றே பல்லவரும் ஒரு கொள்ளைக் கூட்டத்தார், அல்லது வகுப்பினர் என்றும், அவர்களைப் போன்றே தங்களது வலிமையால் சோணாடு முதலிய நாடுகளைத் தமது ஆட்சிக் குட்படுத்தினரென்றும் கொள்வோமாயின் இதுவரையிற் கிடைத்துள்ள ஆதாரங்கள் அதனை உறுதிப்படுத்து மென்றே நினைக்கின்றேன்.


ள்ளர்களின் தலைவராகிய புதுக்கோட்டை மன்னர் தம்மை ராஜபல்லவ ரென்றும், பழைய அரச வமிசத்தின ரென்றும் சொல்லிக் கொள்கின்றனர். சர் வால்டர் எலியட் என்பார் கள்ளர்கள் கலகக்கூட்டத்தாரில் ஒரு வகுப்பின ரென்றும, ஆண்மையும், அஞ்சாமையும், வீரமும் உள்ளவர்களென்றும் கூறுகின்றார். சரித்திர்ப்படி பல்லவர்களும் அவர்களை யொத்தவர்கள்தான். கள்ளர்கள் இன்று வரையிலும் கருநாடக பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு, அவர்களிடமிருந்து. மகாராட்டியர் செளத் என்ற வரிவாங்கி வந்ததுபோல் ஒருவரியும்வாங்கி வந்திருக்கின்றனர். பல்லவரும் எதிரிகளாகிய தமிழ் மன்னர்களின் வலிமைக்கேற்பத் தமது ஆட்சியை நிலைநிறுத்தி வந்திருக்கின்றனர் என்று நம்பவேண்டியிருக்கிறது. கள்ளர், மறவர் இவர்களுடன் பள்ளி வகுப்பாரும், உழுது பயிரிடும் வேளாளரிற் சிலரும் தாங்கள் பல்லவரைச் சேர்ந்தவர்களென்று சொல்லிக் கொள்கின்றனர். பல்லவரோடு கொள்ளைக் கூட்டத்தின ரென்று கூறப்படும் இவர்களும் தமிழருக்கு முன்பே இந்நாட்டில் வசித்து வந்த ஒரு வகுப்பாரைச் சேரந்தவர்களாயிருக்கலாம்"

னி, மேல் எடுத்துக்காட்டிய கொள்கை ஒவ்வொன்றிலும் எத்துணை உண்மை யிருக்கின்ற தென்பது பின் ஆராய்ச்சியால் அறிந்து கொள்ளலாகும். கள்ளர் நாகரினத்தவர் என்னுங் கொள்கையை முதற்கண் ஆராய்வோம், நாகரின் வரலாறும், பெருமையும் முன்னரே கூறியுள்ளோம். அவர்கள் கைத்தொழில் முதலியவற்றில் எவ்வளவு மேன்மை யடைந்திருந்தன ரென்பது பின்வரும் கனகசபை பிள்ளையவர்கள் கூற்றால் நன்கு விளங்கும்:

" நாகர்கள் பல நுட்பத் தொழில்களில் தெளிவடைந் திருந்ததோடு, நெய்தற் தொழிலில் மிக்க திறமையடைந்திருந்தனர் கலிங்க நாட்டிலிருந்து நாகர் இத்தொழிலில் அடைந்திருந்த புகழ் பற்றிக் கலிங்கம் என்ற சொல்லே தமிழில் துணியை உணர்த்துவதாயிற்று. பாண்டி நாட்டின் கீழைக் கரையிலிருந்த நாகர் இத்தொழிலில் மிக மேம்பாடெய்தி, துணியும், மசிலினும் பெருக ஏற்றுமதி செய்தனர். இவர்கள் நெய்த நுட்ப இழைகளாலான ஆடைகள் தமிழர்களால் மிக மதிக்கபட்டும், பிற நாடுகளில் நம்பத் தகாதவிலைக்கு விறகப்பட்டும் வந்தன . நாகரிடமிருந்த தான் ஆரியர் எழுதும் வித்தையைக் கற்றுக் கொண்டனர் அது பற்றி இற்றைக்கும் வடமொழியெழுத்திற்குத் தேவநாகரி என்ற பெயர் வழங்குகிறது."

நாகர் குலத்து மகளில் பேரழகு வாய்ந்தோரென மணிமேகலை யாலும், பிற நூல்களர்லும் அறியப்படுகின்றது. அவர்கள் சிவபக்தியிலும் மேம்பட்டவரென்பது நாககன்னியர் சிவபெருமானைப் பூசித்து வரம் பெற்றனரென்று உறையூர்ப் புரர்ணம் , பழைய திருவானைக்காப்ப புராணம் , செவ்வந்திப் புராணம் முதலியன கூறுதல் கொண்டு அறியலாகும்.

நாகர் வீரத்திலும் மேம்பட்டவரென்பது, சோழ நாகர் என்பார் உறையூரிலிருந்து அரசுபுரிந்த சோழர்களை அப்பதியினின்றும் போக்கிச் சோழ ராட்சியைக் கைப்பற்றிக்கொண்டனரென்று பழைய ஐரோப்பிய ஆசிரியரான தாலமி என்பவர் கூறுவதால் அறியலாகும். சோழ நாகரென்பார் சோழரும், நாகரும் வரைவாற் கலந்ததிற் பிறந்த வழிபோலும் என்று கனகசபைப் பிள்ளை யவர்கள் கருது கின்றனர். பழைய நாளில் சோழர்கள் நாகர் குலத்தில் கல்யாணஞ்செய்து கொணடிருக்கின்றனர் என்பது தேற்றம். நெடு முடிக்கிள்ளியென்ற சோழவேந்தன் நாக நாட்டரசனாகிய வளைவணன் என்பானது மகள் பீலிவளையை மணம்புரிந்த செய்தி மணிமேகலையிற் கூறப்பட்டிருக்கறிது. தொண்டைமான் இளந்திரையனைப் படிய பெரும்பாணாற்றுப்படையுள் கீழ்வரும்பகுதி அவனது பிறப்பு வரலாற்றை யுணர்த்துகின்றது.


'இருநிலங் கடந்த திருமறு மார்பின்

முந்நீர் வண்ணன் புறங்கடை யந்நீர்த்

திரைதரு மரபி னுரவோ னும்பல்

மலர்தலை யுலகத்து மன்னுயிர் காக்கும்

முரச முழுங்குதானை மூவ ருள்ளும்

இலங்குநீர்ப் பரப்பின வளைமீக் கூறும்

வலம்புரி யன்ன வசைநீங்கு சிறப்பின்

அல்லது கடிந்த அறம்புரி செங்கோற்

பல்வேற் றிரையன்".


நச்சினார்கினியர் இதிலுள்ள சொற்களைக் கொண்டு கூட்டி "மூவேந்தருள்ளும் தலைமை வாய்ந்தோனும், திரூமாலின் பின் வந்தோனுமாகிய சோழன் குடியிற் பிறந்தோன். கடலின் திரை கொண்டு வந்தமையால் திரையன் என்னும் பெயரை யுடையவன்' என்று பொருள் கூறி, ' என்றதனால் நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாககன்னியைப் புணர்ந்த காலத்து, அவள், யான் பெற்ற புதல்வனை என்செய்வேனெற்பொழுது, தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விட அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பலென்று வென் கூற, அவளும் புதல்வனை அங்ஙனம் வர விடத் திரைதருதலின் திரைய னென்று பெயர் பெற்ற கதை கூறினார்.' என ஓர் வரலாறும் குறித்துள்ளார்.

நெடுமுடிக்கிள்ளிக்கு நாகர் மகளான பீலிவளை வயிறறுப் பிறந்தோனே இவ்விளந்திரையன் என்றும் சிலர் கூறுவர். அவர் நச்சினார்கினியர் எழுதியதை உறுதியாக மேற்கொண்டே அங்ஙனம் கூறுவர். நச்சினார்க்கினியரும், மணிமேகலையில் ' புதல்வன் வரூஉ மல்லது பூங்கொடி வாராள்' என்று சாரணர் சோழனுக்குக் கூறிய தாகவுள்ள தொடரை யுட்கொண்டோ, அதுபற்றி வழங்கி வந்ததொரு கதையை மேற்கொண்டோ, அங்ஙனம் எழுதினாராகல் வேண்டும். அவர்,'தொண்டையை அடையாளமாகக் கட்டிவிட' என்றமையின், தொண்டைமான் என்ற பெயரின் காரணமும் அதுவென நினைந்தாராகல் வேண்டும்.

இனி, பெரும்பாணாற்றுப் படையடிகட்கு அவர் கூறியவுரை பொருந்தா தென்பது காட்டுதும். 'முந்நீர் வண்ணன் புறங்கடையந்நீர்த்--திரைதரு மரபி னுரவோனும்பல் ' என்பதற்கு, 'கடல் வண்ணனாகிய திருமாலின் பின்வந்தோனும், கடல் நீர்த் திரையால் தரப்பட்ட மரபினையுடைய உரவோனும் ஆகிய சோழனது வழித் தோன்றல்' என்பதே நேரிய பொருளாகும். நச்சினார்க்கினியர், இளந்திரையன் திரையால் தரப்பட்டவனாதல் வேண்டு மென்னுங் கொள்கையுடையராய், அதற்கேற்பச் சொற்களை மாற்றி நலிந்து பொருள் கூறினர். திரையன் என்பது சோழனுக்குரியதோர் பெயரெனக் கொள்ள வேண்டும் கனகசபைப்பிள்ளை யவர்களும் , திரையர் என்னும் பெயரை சோழருக்கே உரியதாக்குகின்றனர் . தொண்டைமான் என்னும் பெயரும் தொண்டையை அடையாளமாகக் கட்டி விட்டமையால் இளந்திரையனுக்கு வந்த தென்பது பொருந்தாது, அகநானுற்றில் 'வினைநவில் யானை விறற்போர்த் தொண்டைர்--வேங்கடம்' என வந்திருப்பது முன்னரே காட்டியுள்ளோம், பெரும்பாணாற்றிலேயே இளந்திரையன் ' தொண்டையோர் மருகன்' என்று கூறப்படுகின்றான். இஃதொன்றுமே இளந்தரையனுக்கு முன்பே தொண்டையர்என்னும்வழக்குண்மை நிறுத்தப் போதியதாகும்.. இவ்வாற்றால் தொண்டையர் என்னும் பெயர் காஞ்சி, திருவேங்கடம் முதலியவற்றைத் தன்னகத்தே யுடையதொரு நாட்டிலே தொன்று தொட்டு ஆட்சி புரிந்த ஓர் வகுப்பினரைக் குறிப்பதென்பதே தேற்றம் . இளந்திரையானவன், சோழனொருவன் தொண்டையர் மகளை மணந்து பெற்ற புதல்வன் என்றும், அவனே தாய்வழி யுரிமையால் தொண்டை நாட்டுக்கு அரசனாயினான் எனறும் தாய்வழியாற் தொண்டைமான் என்னும் பெயரும், தந்தை வழியால் திரையன் என்னும் பெயரும் அவனுக்கு எய்தின என்றும் கோடல் வேண்டும்..

இனி, இத்தொண்டையரும் காஞ்சியிலிருந்து அரசு புரிந்திருக்கின்றனர். பல்லவரும் காஞ்சியிலிருந்து ஆட்சி நடத்தியுளர். ஆகலின் இவ்விருவரும் வெவ்வேறு வகுப்பினரா? ஒரே வகுப்பினரா? என ஆராய வேண்டியிருக்கிறது. பல்லவர் வடக்கே பெருசியாவிலிருந்து வந்தவரென சரித்திரக்காரர்கள் சொல்லி வந்திருக்கின்றனர் இப்பொழுது சிலர் அக்கொள்கையை மாற்றியும் வருகின்றனர் இவர்கள் பல்லவர் தொன்றுதொட்டு இந்நாட்டவரேனெத் துணிந்துரையாவிடினும், இந்நாட்டினராக யிருக்கலாம் என கருதுகின்றனர் . தொண்டைமான் என்னும் பெயர் கொடிபற்றி வந்ததென்று கூறப்படுதலாயினும் .பல்லவம் என்பதற்குத் தளிரென்பது பொருளாகலானும் இவ்விரு பெயரும் ஒருவரைக் குறிக்கும் ஒரு பொருளுள்ளனவே எனச் சிலர் கருதுகின்றனர். பல்லவர்க்கு வழங்கும் போத்தரசர் என்னும் பெயரும் இப்பொருளதே யென்கினறனர். காஞ்சியிலாண்ட தொண்டைமான் இளந்திரையனையும் சோழன் கரிகாலனையும் உருத்திரங்கண்ணனார் என்னனும்புலவர் பாடியிருத்தலால் இளந்திரையன் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் இருந்தோன் எனத் தெரிதலானும், அதற்கு முன்பு பல்லவர் செய்தி யொன்றும்கேட்க்கப்படாமையானும் இளந்திரையனது வழியில் வந்தோரே பல்லவர் என்றும் சிலர் கருதுகின்றனர். இவர்கள், பல்லவராயினார் சோழர்க்கும் தமக்கும் ஏற்பட்ட பகைமை பற்றியே தம்மை வேறு பிரித்துக்கொள்ள நினைந்து, தமக்குப் பாரத்துவாச கோத்திரத்தைக் கற்பித்துக் கொண்டனர் என்பர். பல்லவர் பெருசியாவிலிருந்து வந்தோரென கூறுபவருக்கு ஆதாரமாக வுள்ளது சில வடமொழிப் புராணவிதிகாசங்களில் காணம்படும் பகல்வா என்னும் பதமாம். அச்சொல்லே பல்லவர் எனத் திரிதுதிருக்கும் என்பது அவர்கள் கருத்து. பல்லவர் இன்னகாலத்தில் இன்னவிடத்திருந்து இவ்வழியாக இவ்விடத்தை யடைந்தனரென்பது வேறுபல மேற்கோள்களால் உறுதிப் படுத்தப்பெற்ற பின்பற்றி தெற்கே காஞ்சியைத் தலைநகராகக் கெண்டு ஆண்ட வகுப்பினர் பெயராய பல்லவர் என்பது பகல்வா என்பதன் திரிபு என்று கொள்ளல் சிறிதும் பொருந்தாது.

வின்சன் ஏ. ஸ்மித் என்பாரும், வால்டர் எலியட் என்பாரும் பல்லவர் கோதாவரி யாறுகட்கு இடையிலுள்ளதான வெங்கி நாட்டில் இருந்தோராகலாம் எனக் கருதுகின்றனர்

ல்லவரைப்பற்றித் தனிநூல் எழுதியியுள்ள புதுச்சேரியிலிருக்கும் புரொபசர் ஜி.ஜே. துப்ரீல் என்பாரும், பல்லவர் ஆந்திர நாட்டிலிருந்தோராகலாமென்றும், பல்லவர் இருகூறாய்ப் பிரிந்து ஆந்திரநாட்டிலும், தமிழ் நாட்டிலும் அரசு புரிந்தனரென்பதும் பொருந்தும் என்றும் இங்ஙனம் கருதுகின்றனரே யன்றிப் பெருசியா முதலிய இடங்களிலிருந்து வந்தொரெனக் கூறவில்லை. பல்லவரது முதன்மைப் பட்டணம் காஞ்சி என்பதும், அவர்கள் ஆந்திர நாட்டுடன் தொண்டைமண்டலத்தையம் ஒரே காலத்தில் ஆண்டிருக்கினறன ரென்பதும் சரித்திரத்தில் நன்கு விளக்கமாம்.

இனி, இவர்களைக் குறித்து எமது ஆராய்ச்சியிற் புலப்பட்ட வற்றை இங்கே காட்டுதும். காஞ்சி முதலிய இடங்களுள்ள பகுதி முன்பு அருவா நாடு எனவும் வழங்கப்பட்டது. அங்கிருந்தோர் அருவாளர் எனப்பட்டனர். அந்நாடு தமிழகத்தின் பகுதியே யாகலின் அருவாளரும் தமிழரே யென்பது கூறாதே அமையும். அருவாளரை நாகரென்பார் கொள்கையும் முன்னரே காட்டப்பட்டது இவருடன், ஆந்திரரும், கருநாடரும் தமிழ் மூவேந்தர்க்குப் பகையாயிருந்தமையாலே' வடுகரருவாளர் வான் கருநாடர் .....குறுகாரறிவுடையார்' என்று இழித்திடப் பட்டனர். சோழன் கரிகாலன் அருவாளரை வென்றதும் தெரிந்ததே. அருவா நாடு தொண்டை நாட்டின் கண்ணதாகலின் அந்நாட்டினை முன்பு ஆண்டோர் எனப் பட்ட தொண்டையர் என்பாரும் அருவாளரும் ஓரினத்தவரென்று கருதலாகும். பழைய நாளில் இவர்கள் ' மன்பெறு மரபின்ஏனோர்' எனவும், 'குறுநில மன்னர் எனவும் கூறப்பட்டு வந்தனர்.

'வில்லும் வேலுங் கழலுங் கண்ணியுந்

தாரு மாரமுந் தேரும் வாளும்

மன்பெறு மரபின் ஏனோர்க்கு முரிய'

என்னும் மரபியற் சூத்திரமும்,

'மன்பெறு மரபின் ஏனோரெனப்படுவார் அரசு பெறுமரபிற் குறுநில மன்னர் எனக் கொள்க. அவை பெரும்பாணாற்றுள்ளும் காணப்படும்' என்னும் அதனுரையும் இவ்வுண்மை தெரிப்பனவாகும். கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பு தொண்டை நாட்டின் ஆட்சியும், நிலைமையும் எப்படி யிருந்தனவென்று விளக்கமாக அறிதற்கு இடமில்லை. கரிகாற் பெருவளவன் காலத்திலிருந்து அது நல்ல நிலமை யடைந்து விட்டதென்று கொள்ளலாகும் . கரிகாலன் காஞ்சிப் பதியை விரிவுபட வகுத்தமைத்தனன் என்பது.


நாக பல்லவ சோழரும், கள்ளரும்

'என்று முள்ளவிந் நகர்கலி யுகத்தி

லிலங்கு வேற்கரி காற்பெரு வளத்தோன்


வன்றி றற்புலி யிமையாமல் வரைமேல்

வைக்க வேகுவோன் றனக்கிதன் வளமை


சென்று வேடன்முன் கண்டுரை செய்யத்

திருந்து காதநான் குட்பட வகுத்துக்


குன்று போலுமா மதில்புடை போக்கிக்

குடியி ருத்தின கொள்கையின் விளங்கும்'


என்று பெரிய புராணம் கூறுதலால் வெளியாகின்றது. கரிகாலனை யடுத்துத் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியிலிருந்து ஆட்சி புரிந்தோனாவன். அவனட்சியின் பெருமையை,


'கைப்பொருள்வெளவுங் களவோர் வாழ்க்கைக்

கொடியோ ரின்றவன் கடியுடை வியன்புலம்

உருமு முரறா தரவுந் தப்பா

காட்டு மாவு முறுகண் செய்யா'


என்றும்,


'முறைவேண் டுநர்க்குங் குறைவேண் டுநர்க்கும்

வேண்டுப வேண்டுப வேண்டினர்க் கருளி

யிடைத்தெரிந் துணரு மிருடீர் காட்சிக்

கொடைக்கட னிறுத்த கூம்பா வுள்ளத்

துருப்பில் சுற்றமோ டிருந்தோன்'


என்றும், பிறவாறும் பெரும்பாணாற்றுப்படை கூறுதல் கொண்டு அறியலாகும். இளந்திரையனுக்குச் சில தலைமுளை பின் வந்தோரே சிலர் ஆந்திர நாட்டிலும், சிலர் காஞ்சியிலுமாக இருந்து பல்லவர் என்னும் பெயருடன்ஆட்சி புரிந்தோராதல் வேண்டும், தொண்டை நாட்டுக்குப் பல்லவ என்பது ஒரு பெயர், அதுபற்றியே தொண்டையர், பல்லவ ரெனப்பட்டனர். இப்பெயரக்ளும், பல்லவர்க்கு வழங்கும் காடவர், காடுவெட்டி யென்னம் பெயர்களும், அந்நாடு முன்பு காடடர்ந்ததாய் இருந்திருக்கவேண்டு மென்று கருதச் செய்கின்றன. தொண்டையர் அல்லது தொண்டைமான் என்னும் பெரும், பல்லவர் என்னும் பெயரும், ஒருவகுப்பினரையே குறிப்பன என்பதில் எத்துணையும் ஐயமில்லை.

1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger vijajabu

கள்ளர் சோழர்களைச்சாரந்தவரகளல்ல.தாலியில் குதிரை முடியும்,சுன்னத் செய்யு வழக்கமும் கள்ளரகுலத்தில் நீணடகாலமாக இருந்ததொன்றாகும். வரலாற்றுக்காலத்தில் முக்குலமோ,தேவர்குலமோ இருந்ததில்லை.

 

Post a Comment

<< முகப்பு