அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 28 -

இனி, இவர்களோடு ஓரினமாக எண்ணப்படுகினற மற்றை வகுப்பினரைக் குறித்தும் இங்கே சிறிது கூறுதல் பொருத்தமாகும்என நினைக்கின்றேம்


கள்ளர்களைப் போன்றே மறவர் என்போரும் தமிழ் நாட்டில் ஓர் பெருங் குழுவினராவர். இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இவ்வகுப்பினரென்பதை யறிவோர் இவ்வகுப்பானது தொன்றுதொட்டு எவ்வளவு மேன்மை வாய்ந்துள தென்பதை உணரக்கூடும். சேதுபதிகளைப் போன்று தமிழை வளர்த்தோரும், புலவர்களை ஆதரித்தோரும், வள்ளன்மை சிறந்து விளங்கினோரும், எண்ணிறந்த அளங்க ளியற்றினோரும் உலகத்தில் யாவருளா? அன்றியும் இராமேச்சுரம் சென்று இறைவனை வழிபட்டு வருவோர் யாவரே யெனினும் அவர்கள் சேதுபதிகளையும் தரிசித்து வருவது தொன்றுதொட்ட வழக்கமாயிருப்பது அன்னோரது ஒப்பற்ற மாட்சியைப் புலப்படுத்துவதாகும். இராமநாதபுரத்தரசர் போன்றே செல்வத்திலும் பெருமைமயிலும் சிறந்த சிவகங்கை மன்னரும் இவ்வகுப்பினராவர். இவர்களேயன்றி, பாலவனத்தம், பாலையம்பட்டி, சிங்கம்பட்டி, கடம்பூர், ஊற்றுமலை, சேற்றூர், சொக்கம்பட்டி, ஊர்க்காடு, கொல்லங்கொண்டான் முதலிய பல சமீன்றார்கள் இவ்வகுப்பினராக வுள்ளனர்.


அகம்படியரென்போரும் ஓர்பெருங் குழுவினரான தமிழ் மக்களாவர். இவர்களும் தொன்றுதொட்டு உயர்நத நிலையில் இருந்து வந்தருக்கின்றனர். இவ்வகுப்பினரில் பெருநிலமும், பெருஞ்செல்வமும் வாய்ந்தோர் அளவற்றவர்கள் இப்பொழுதும் இருக்கின்றனர்.


இம்மூன்று வகுப்பினரும் அஞ்சாமை, வீரம், ஈகை முதலிய குணங்களில் ஒரு பெற்றியே சிறந்து விளங்குவோராவர். மற்றும் பல தன்மைகளில் அவர்கள் ஒப்புமையுடையராவர். மற்றும் பல தன்மைகளில் அவர்கள் ஒப்புமையுடையரா யிருக்கினறனர். இம்மூன்று வகுப்பும் ஒவ்வொருகாலத்தில் கல்யாணம் முதலிய வற்றாலும் ஒன்றுக்கொன்று மசம்பந்தப் பட்டிருக்கின்றன. இராமநாத புரத்தரசரக்குச் செம்பிநாடன் என்ற பட்டமும், சேற்றூர் ஜமீன்றார்க்கு சோழகர் என்ற பட்டமும், கொல்லங் கொண்டான் ஜமீன்றார்க்கு வாண்டையார் என்ற பட்டமும் இருத்தலாலும், சேற்றூர் ஜமீன்றார் தஞ்சைப் பக்கத்திலிருந்து வநதவர் என்றும் கூறப்படுதல் முதலியவற்றாலும் இவர்களும் ஆதியில் கள்ளர் வகுப்பினரே யாவர் என்று சிலர் கருதுகின்றனர். இவர்கள் எல்லோரும் ஒரே வகுப்பனர் என்ற உணர்ச்சி இப்பொழுதும் இருந்து வருகறது. இவ்வுணர்ச்சிக்கு அறிகுறியாகச் சிற்சில இடங்களில் சங்கங்களும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவர்கள் மேன்மேலும் ஒருமையுற்றுப் பெருமை யெய்துவார்களாக. இவர்கள் பெருமை மயுறுவதென்பதும், தமிழ் நாடு பெருமையுறுவதென்பதும் ஒன்றே; தனித்தமிழ்நாட்டிலுள்ள தனித்தமிழ்ப் பெருமக்கள் இவர்களாதலின் இவ்வுரிமையினாலே இவர்கள் தமிழ்மொழியைப் போற்றிப் புரந்துவந்திருக்கின்றனர். மதுரையிலும் கரந்தையிலும் உள்ள தமிழ்ச் சங்கங்கள் இவர்களால் நிருவப் பெற்றும் புரக்கப் பெற்றும் வருவதிலிருந்து இப்பொழுதும் இவர்கள் தமிழ் மொழிக்கு ஆதரவாகவிருப்பது புலனாம். எனினும் இவர்கள் தம் தாய்மொழியைப் புரப்பதில் இன்னம் மிகுதியான ஊக்கமெடுத்துக் கொள்ளக் கடமைப்பாடுடையர் என்பதனைக் குறிப்பிட விரும்புகின்றோம். இனி, தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு வகுப்பினரும் தாம் இப்பொழுது பல பிரிவினராக இருப்பினும் தாமெல்ல்ாம் தமிழ்த்தாயின் மக்களாகிய ஒரே யினத்தவரென்னும் உண்மையுணரந்து யாவரும் அன்பும் ஒற்றுமை யுணர்ச்சியும் உடையவராக. எவரையும் சிறியரென்று இகழாதிருப்பாராக. தம் பண்டைப் பெருமையை நினைவு கூர்ந்து, மீட்டும் அப்பெருமையை நிலை நிறுத்துதற் பொருட்டு ஒற்றுமையுடனும் ஊக்கத்துடனம் உழைப்பாராக. கருணையங் கடலாகிய இறைவன் இவர்கட்கு எல்லா அறிவாற்றலையும் தந்து இந் நாட்டினைப் பாதுகாப்பானாக. எங்கும் அவன் புகழே மிகுதல் வேண்டும். மன்னுயிரெல்லாம் இன்புற்று வாழ்தல் வேண்டும்


கள்ளர்சரித்திரம் முற்று

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு