அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 26 -

இனி, இவர்களது தற்கால நிலைமையை நோக்குவோம். இவ்வகுப்பினரில் ஓர் அரசர் இருக்கின்றனர். பல சமீன்றார்கள் இருக்கின்றனர்; ஆயிரவேலி நிலக்காரர்கள் உள்ளனர் ; உத்தியோகத்தர் (போலீசு டிப்டி கமிஷனர், போஸ்டல் சூப்பரின்டெண்ட், ஜில்லா முனிசீப், தாசில்தார், சப்மாஜிஸ்ட்ரேட்) சிலர் உளர்; வக்கீல் சிலர் உண்டு ; கல்வியிலாகாவில் உயர் தகுதி வாய்ந்து சென்னை இராஜதானிக் கல்லூரி உள்ளிட்ட காலேஜ் ஹைஸ்கூல்களில் புரொபஸராயும், தமிழாசிரியர் முதலானோராயும் சிலர் இருக்கின்றனர். மற்றும் இவர்களில் சட்டசபை அங்கத்தினர் இருக்கின்றனர்; தாலூகா போர்டு, ஜில்லாபோர்டு முனிசிபாலிட்டிகளில் தலைவர் உதவித்தலைவர் ,உறுப்பினராகச் சிலர் இருக்கின்றனர்; ராவ்பகதூர், திவான்பகதூர் முதலிய பட்டங்களும் பெற்றிருக்கின்றனர். இருப்பினும் என்? இதுகொண்டு இவ்வகுப்பே நல்ல நிலைமையில் இருப்பதர்கக் கூறிவிடலாகுமோ? இவ்வகுப்பின் இப்பொழுதைய நிலைமை பெரிதும் இரங்கத்தக்க தொன்றாம். இவர்களில் ஏறக்குறைய நூற்றுக்கு எழுபத்தைந்து போர் வரையில் தங்கள் சொத்தில் முக்காற் பாகத்திற்கு அதிகமாகவே யிழந்து விட்டனர். சிலர் முற்றிலுமே பொருளையிழந்து வாழ்க்கையை நடத்த முடியாது தத்தளிக்கின்றனர். உலகத்திலே தாங்களும் மக்கட் பிறப்பினரென்று வெளித்தோற்ற மாத்திரத்திலாவது காட்டிக்கொள்ள முடியாத இழிந்த நிலைமைக்குப் பலர் வந்து விட்டனர். வம்பு வழக்குகளினாலே பலர் பொருளிழந்தனர்; வீண் ஆடம்பரங்களினாலே பலருடைய பொருள் போயிற்று; மதுபான முதலிய தீய பழக்கங்களினாலும் பலர் தொலைந்தனர், அந்தொ! இழிந்த மாக்களும் மறைந்து குடிக்கும் இயல்புடைத்தாயிருந்த மதுவை இப்பொழுது பெரிய மனிதரென்று சொல்லிக் கொள்வோரெல்லாம் வெளிப்படையாகக் குடித்து விட்டுப் புரள ஆரம்பித்து விட்டனர். இது கலியின் கொடுமையே போலும்.!


இங்ஙனம் பொருள் இழந்தனர்; பொலிவழிந்தனர்; மதியிழந்தனர்; வலியிழந்தனர்; வறுமையுற்றனர்; பொருமையற்றனர்; இவர்கள் படும் துன்பத்திற்கும் பரிபவத்திற்கம் ஓர் எல்லையில்லை. இவற்றுக்கொல்லாம் பொறுப்பாளர் யாவர்? பொதுவாக இந்நாட்டு மக்கள் அரசாங்கத்திலோ வெளியிலோ சில பதவிகளும் பெருமைகளும் அடைந்து விடுவார்களானால் எளியமக்களின் நிலைமை அவர்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. கடவுள் ஒருவர் உண்டு என்ற எண்ணமேயில்லாமல் எளியவர்களுக்கு எவ்வளவு துன்பமுஞ் செய்யப் பின்வாங்க மாட்டார்கள். ஒரு தனி மனிதனையெடுத்துப் பார்க்கினும் ஒரு கூட்டததை யெடுத்துப் பார்க்கினும் எங்கும் பிறரை அமிழ்த்திவிட வேண்டுமென்ற எண்ணமே மேலிட்டிருப்பதைக் காணலாகும். பல ஆண்டுகளாகப் பல பெரியோர்கள் தேச முன்னேற்றமே கருதி உழைத்துவந்தார்களாயினும் தேசம் அடிப்படையில் எவ்வளவு சீர்கேடாயிருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள முடியாமற் போய்விட்டது. இந்தியா என்கிற கட்டிடத்தின் அடிப்படையைப் பழுது பார்ப்பதற்கு இன்னும் பலர் பலகாலம் உழைக்க வேண்டுமெனத் தோன்றகிறது. பொதுவில் தேசத்தையே குறிப்பாகக்கொண்டு உழைக்க முடியாதவர்கள் தாழ்நிலை யடைந்துள்ள ஒரு சமூகத்தின் பொருட்டாவது உழைக்க வேண்டும். அதுவும தேச உழைப்பே யாகும். இனி கள்ளர் வகுப்பினர்ககுப் பிறர் புரிந்த அல்லதுபுரிகின்ற நன்மை தீமைகளை விடுத்து, இவ்வகுப்பிலே பெரிய மனிதர்களாயுள்ளோர் என்ன நன்மை செய்திருக்கிறார்க ளென்று கேட்போம். அவர்களில் ஒரு அரசர் இருந்தால் என்? பல ஜமீன்றார்கள் இருப்பின் என்? பெரும் பணக்காரரும் நிலக்காரரும் இருந்து என்? தம்எளிய வகுப்பினரது முன்னேற்றத்திற்கு அவர்கள் யாது உதவி புரிந்திருக்கின்றனர்? இதுகாறும் ஒருதவியும் செய்யவே யில்லை. தம்வகுபினர் இவ்வித இழிந்த நிலைமையடைந்திருப்பது அவர்கள் மனத்தில் சற்றேனும் உறுத்தவெயில்லை. அதனாலன்றோ இவ்வளவு பரிபவத்திற்கு அவர்கள் ஆளாகவேண்டியிருந்தது? மதுரைப் பக்கத்திலிருந்த இழிவு பெரிய மனிதர்கள் இருக்கும் தஞ்சைப் பக்கத்திலும் எட்டிப் பார்க்கத்தொடங்கிவிட்டது. இனியேனும் அவர்கள் உறக்கத்தினின்றெழுந்து வேலை செய்தல் வேண்டும்.


ஒரு தீமையினின்றும் நன்மையுண்டாகும் எனனும் விதிப்படி மதுரைப் பக்கத்துக் கள்ளர் வகுப்பினர் முன் பல துனபங்களுக்கு ஆளாயினும் இப்பொழுது சில திருத்தமும் நன்மையும் அடைந்து வருகின்றனரென்பது ஒருவாறு ஆறுதலளிக்கக் கூடியதாகும். அங்கே பல பள்ளிக்கூடங்கள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. அவர் கட்குக் கைத்தொழிலும் கைத்தொழில்களும் கற்பிக் கப்படுகின்றன. விவசாயமும் , கைத்தொழிலும் நல்ல பயனளித்துவருகின்றன. கடவுள் திருவருளால் கூடிய விரைவில் அவர்கள் நன்னிலையடைவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தஞ்சைப் பக்கத்திலும் இரண்டு மூன்று ஆண்டுகளாக இவர்கட்கென அரசாங்கத்தார் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தி வருவது பாராட்டத்தகுந்தது. இச்சமயத்தில் தஞ்சைக் கள்ளர் மகா சங்கமானது பலருடைய ஒற்றுமையும் பெற்று ஊக்கத்துடன் முறைப்படி உழைத்துவருமாயின் இதனால் பல நன்மை யுண்டாகக் கூடும்.


இனி, இவ்வகுப்பினர் மேற்கொள்ள வேண்டிய முயற்சி வகைகளையும், சீர்திருத்தங்களையும் கூறுமுன், இவர்கள் கல்வியில் எவ்வளவு பிற்போக்கடைந் துள்ளார்கள் என்பதனைக் காட்டுதும்.

தொடரும்...27

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு