அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 15 -

மண்டலம், கோட்டம், நாடு முதலியவற்றின் பெயர்கள் காலத்திற்கு காலம் மாறியும் வந்துள்ளன. தொண்டை மண்டலத்திற்கு ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று பெயர் ஏற்பட்டு விட்டது வெளிப்படை. 'தொண்டை நாடான ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மானாடு' என இங்ஙனம் வருகின்றன. இவ்வாறே பாண்டி நாட்டிற்கு ராஜராஜ மண்டலம் என்றும், கொங்கு நாட்டிற்கு சோழ கேரள மண்டலம் என்றம் பெயர்கள் வழங்கியுள்ளமை ' பாண்டிநாடான் ராஜராஜ மண்டலம்' என்றும், கோனேரி மேல்கொண்டான் கொங்கான சோழகேரள மண்டலம் என்றும் வருதலால் அறியலாகும் அதிராஜராஜ மண்டலத்து வெங்கால நாடு என வருதலால் கொங்கிற்கு அப்பெயருண்மையும் பெறப்படும். ஈழ நாடும் ' மும்மடி சோழமண்டலம்' எனப்பட்டது. இவையெல்லாம் சோழ மன்னர்களின் வெற்றிக்கு அடையாளங்கள் ஆகும்.


தொண்டை மண்டலம் 24 கோட்டங்களாகவும் 79 நாடுகளாகவும் வகுக்கப்பட்டிருந்தது. ' நாளாறு கோட்டத்து புலியூர்க்கோட்டம்' , ' கோட்டமோ ரிருபானான்கு கூறுநா டெழுபத்தொன்பான்' என்பன காணக.

கோட்டம் இருபத்து நான்காவன:-

  1. ஆமூர்

  2. இளங்காடு

  3. ஈக்காடு

  4. ஈத்தூர்

  5. ஊற்றுக்காடு

  6. எயில்

  7. கடிகை

  8. காளியூர்

  9. களத்தூர்

  10. குன்றபத்திரம்

  11. சிறுகரை

  12. செங்காடு

  13. செந்திருக்கை

  14. செம்பூர்

  15. தாமல்

  16. படுவூர்

  17. பல்குன்றம்

  18. புழல்

  19. புலியூர்

  20. பேயூர்

  21. மணையில்

  22. வெண்குன்றம்

  23. வேங்கடம்

  24. வேலுர்

என்பன.


ஒவ்வொன்றன் பின்னும் கோட்டம் என்பது சேர்த்துக் கொள்க.


தொண்டைநாடு ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று பெயரெய்தியவிடத்தும் அங்ஙனமே கோட்டம் என்னும் பிரிவுகளை உடைத்தாய் , இருந்தது. ஆமூர் கோட்டம் , படுவூர் கோட்டம், பல்குன்றக்கோட்டம், காலியூர் கோட்டம் , எயிற்கோட்டம் , ஊற்றுக்கோட்டம், வெண்குன்றகோட்டம், செங்காட்டுக்கோட்டம் , புலியூர்கோட்டம், புழற்கோட்டம், மணையிற் கோட்டம், களத்தூர்கோட்டம் முதலிய ஜெயங்கொட்ட சோழமண்டலத்தில் இருந்தனவாக சாசணங்களால் அறியலாகும். முற்பட்ட சில சோழர்காலத்தில் கோட்டம் என்றிருந்தது, பின் வந்த சோழர் காலத்தில் சோழ மண்டலத்தின் பிரிவு முறைப்படி வள நாடு என மாறியும் இருக்கிறது. 'ஜெயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் கோட்டமான குலோத்துங்க சோழ வளநாட்டு மணிமங்களம்' என்பது உதாரணமாகும். .


சோழ, பாண்டிய, சேர மண்டலங்களில் கூற்றம் , வளநாடு முதலியவை எத்துணைப் பகுதிப் பட்டிருந்தனவென்னும் வரையரை புலப் படவில்லை உறையூர் கூற்றம், பாச்சிற் கூற்றம், தஞ்சாவூர்க் கூற்றம், வெண்ணிக்கூற்றம் , ஆவூர் கூற்றம் , கழார் கூற்றம், பட்டினகூற்றம், பாம்புணிகூற்றம், வேளூர் கூற்றம், ஒளியூர் கூற்றம் உறத்தூர் கூற்றம், சூரலூர் கூற்றம் என்னும் கூற்றங்களும்; மங்கல நாடு , மருகல் நாடு , மழநாடு, புலியூர் நாடு, அழுந்தூர் நாடு, ஆக்கூற் நாடு, அம்பர் நாடு, அதிகை மங்கை நாடு, இடையள நாடு, நறையூர் நாடு, தேவூர் நாடு பொய்கை நாடு, மண்ணி நாடு, நென்மலி நாடு , புறங்கரம்பை நாடு, பனையூர் நாடு, திரைமூர் நாடு, பிரம்பூர் நாடு, குறும்பூர் நாடு, மிழலைநாடு, குறுக்கை நாடு, விளத்தூர் நாடு, திருக்கழுமல நாடு, திருவாலிநாடு, வெண்ணையூர் நாடு, நாங்கூர் நாடு, கொண்டல் நாடு, ஒக்கூர் நாடு, உறத்தூர் நாடு, பாப்பாநாடு, பைங்காநாடு, அம்பு நாடு, கற்பிங்க நாடு, ஊமத்த நாடு, காசா நாடு, தென்னவநாடு, மீய்செங்கிளி நாடு, எயிநாடு, புறக்கிளியூர் நாடு, மேற்கா நாடு, கார்போக நாடு, வடவழிநாடு, பிடவூர் நாடு, குழிதண்டலை நாடு, நல்லாற்றூர் நாடு, ஏரியூர் நாடு, இடையாற்று நாடு, ஊற்றத்தூர் நாடு, மீகோழை நாடு , கோ நாடு முதலிய நாடுகளும் ; அருண்மொழித்தேவர் வளநாடு , பாண்டியகுலாசணி வள நாடு, நித்தவினோத வளநாடு, ராஜராஜ வளநாடு, ராஜேந்திர சிம்ம வளநாடு, உய்யகொண்டான் வளநாடு, க்ஷத்திரிய சிகாமணி வளநாடு, கேரளாந்த வளநாடு, ஜயசிங்க குலகாள வள நாடு, ராஜாசிரய வளநாடு, கடலடையா திலங்கை கொண்டான் வளநாடு, விருதராஜ் பயங்கர வளநாடு என்னும் வளநாடுகளும் சோழமண்டலத்தில் இருந்தனவாக கல்வெட்டுக்கள் முதலியவற்றால் தெரிவிக்கின்றது.


வளநாடுகளெல்லாம் சோழமன்னர்களின் பெயர்களையே பெயராகக்கொண்டுள்ளன.

சோழருக்கு வளவர் என்பது ஒரு பெயராகலின் அவர் ஆண்ட நாடுகள் வளநாடு எனப்பட்டன. அவ்வச்சோழர் காலத்திலேயே அவை உண்டாயின ஆகலின் வள நாடு என்னும் பெயர் தொன்று தொட்டதாகாது.. ஒரு காலத்தில் நாடு என வழங்கியது பிறிதொரு காலத்தில் வளநாடு என்றாயது என்பதற்கு 'மழநாடான ராஜாசிரய வளநாட்டுப் பாச்சிற் கூற்றம்' என வருவது சான்றாகும். வளநாட்டின் பெயரும் ஒவ்வொரு காலத்தில் மாறி வந்துள்ளது. தஞ்சாவூரைத் தன்னகத்துடைய நாடு ஒரு காலத்தில் 'க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாடு' என்றும், மற்றொரு காலத்தில் 'பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றம்' என்றும் வெவ்வேறு பெயர்களை உடைத்தாயிருந்தது.


கொங்குமண்டலத்தின் பிரிவுகளில் கோட்டம், வளநாடு என்னும் பெயர்கள் காணப்பட்டில. அஃது இருபத்து நான்கு நாடுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. அவை:-

  1. பூந்துறை நாடு

  2. தென்கரை நாடு

  3. காங்கேய நாடு

  4. பொன்கலூர் நாடு

  5. ஆறைநாடு

  6. வாரக்கனாடு

  7. திருவாவினன்குடி நாடு (வையாபுரி நாடு)

  8. மணநாடு

  9. தலைய நாடு

  10. தட்டய நாடு

  11. பூவாணிய நாடு

  12. அரைய நாடு

  13. ஒடுவங்க நாடு

  14. வடகரை நாடு

  15. கிழங்கு நாடு

  16. நல்லுருக்க நாடு

  17. வாழவந்தி நாடு

  18. அண்ட நாடு

  19. வெங்கால நாடு

  20. காவடிக்கனாடு

  21. ஆனைமலை நாடு

  22. இராசிபுர நாடு

  23. காஞ்சிக்கோயினாடு

  24. குறும்பு நாடு

என்பன. இவற்றில் சில நாடுகட்கு இணை நாடுகள் எனவும் வேறு உள்ளன. பூந்துறை நாட்டின் இணை நாடுகள் பருத்திப்பள்ளி நாடு, ஏழுர் நாடு என்பன. இங்ஙனமே வேறு சிலவும் உள்ளன.


கோட்டம், வளநாடு நாடு என்பன இன்ன இன்ன இடத்தில் இருந்தனவென்பது அவற்றைச் சார்ந்துவரும் ஊர்ப்பெயர் முதலிய வற்றால் அறியலாகும். 'ஜயங்கொண்ட சோழமண்டலத்துப் புழற்கோட்டத்துப் புழல் நாட்டுத் திருவொற்றியூர் , ஜயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்துக் களத்தூர் நாட்டுத் தன் கூற்றுத் திருக்கழுக்குன்றம், உலகுய்யக்கொண்ட சோழவள நாட்டுத் திரைமூர் நாட்டுத் திருவிடைமருதூர், பாண்டியகுலாசனி வளநாட்டு மீகோழை நாட்டுத் திருவாணைக்கா, க்ஷத்திரிய சிகாமணி வளநாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்' என்பன காண்க சில இடங்களில் ஊர்பெயரே கோட்டம் முதலியவற்றின் பெயராக அமைந்திருத்தலும் அவற்றை அறிதற்கு உதவியாகும் ஒரொவழி நாடு இருக்கூறுடையதாகி 'வகை' என வழங்கியுள்ளது. நகரங்களும் ஊர்களும் 'தனியூர் , பற்று, ஊர், குறைபற்று' என்பனபோலும் பெயர்களால் வழங்கின. சிற் சில ஊர்கள் தமக்குரிய பழம்பெயருடன் சில அரசர் பெயர்களையும் பெயராக ஏற்று வழங்கலுற்றன. 'கருந்திட்டைக் குடியான சுங்கந்தவிர்த்த சோழ நல்லூர், திருக்கழுக்குன்றமான உலகளந்த சோழ புறம், சேவூரான சோழ கேரள நல்லூர், கோட்டாறு ஆன மும்மடிச்சோழ நல்லூர், கருவூரான முடிவழங்கு சோழபுறம், ஏரிநாட்டு விண்ணனேரியான மும்மடி சோழ நல்லூர்' என இங்ஙனம் வருகின்றன. கல்வெட்டுகளை ஆராய்தலினால் இங்ஙனம் அறியலாகும் உண்மைகள் மிகப் பலவாம்.


நாட்டின் பிரிவுகள் தொன்று தொட்டு இங்ஙனம் வேறு பட வழங்கிவந்தாற் போலவே இப்பொழுது கள்ளர்கள் மிக்குள்ள சோழ பாண்டி மண்டலங்களில் வழங்கி வருகின்றன. வள நாடு, நாடு முதலிய பல பிரிவுகளும் இப்பொழுது விரவிக்கிடக்கின்றன. நாட்டின் எல்லைகள் சில ஊர்கள் அளவிற் குறுகியும் உள்ளன. இந்நாடுகட்கெல்லாம் தலைவராயினார் கள்ளர் குலத்தோர் ஆதலின் இவை பொதுவே கள்ளர் நாடு எனவும், கள்ளர் பற்று எனவும் வழங்குகின்றன. கள்ளர்களுக்கு நாட்டார் என்னும் பெயர் பொதுவாக வழங்குகிறது. கள்ளர் நாடுகளைப் பற்றி தெரிந்தவரை இங்கே எழுதுகின்றோம் .


ஈதர்ஸ்டன் என்பார் எழுதிய ' தென்னிந்திய சாதி வகுப்பு வரலாறு' என்னும் புத்தகத்தில் பின் உள்ளவை காணப்படுகின்றன.

தொடரும்.........16

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு