அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 12 -

இன்று அவர்களின் பிறந்த நாள் 12-04-06

சென்ற 15-4-84 ல் இரண்டாம் பதிப்பும்

இன்று 12-04-06 ல் இணைத்திலும் வெளியாகினறது


11,12 வது நூற்றாண்டுகளில் எழுந்த தமிழ் நூல்களிலிருந்தும் இன்னோரின் உயர்ந்த நிலைமை வெளிப்படுகிறது. கருணாகரத் தொண்டைமான் முதற் குலோத்துங்கனுடைய முதலமைச்சன் என்பது கலிங்கத்துப் பரணியால் வெளிப்படை .

விக்கிரம சோழனுலாவில்

'முன்னம்

குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி

மலையத் தருந்தொண்டை மானும் - பலர்முடிமேல்

ஆர்க்குங் கழற்கா லனகன் றனதவையுட்

பார்க்குமதி மந்திர பாலகரிற்--போர்க்குத்

தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ் சூடிக்

கொடுத்த புகழ்முனையார்கோனூமுடுக்கரையும்

கங்கரையு மாராட் டரையுங் கலிங்கரையும்

கங்கரையு மேனைக் குடகரையும்- தங்கோன்

முனியும் பொழுது முரிபுருவத் தொடு

குனியுஞ் சிலைச்சோழ கோனும்..........

அடியெடுத்த வெவ்வே றரசிய வீரக்

கொடியெடுத்த காலிங்கர் கோனும்-கடியரணச்

செம்பொற் பதணச் செறியிஞ்சிச் செஞ்சியர்கோன்

கம்பக் களியானைக் காடவனும்'


என்று வருதலானும் இன்னோர் நிமை புலனாம்.


சோழ ஆட்சி நிலைதளரந்த பின்பு கள்ளர்கள் இந்நாட்டைக் கூற்றங்களாகவும், நாடுகளாகவும் பிரித்துத் தன்னரசுகளாக இருந்து ஆண்டிருக்கின்றனரென்பதும், அங்ஙனம் ஆண்டவர்கட்கு அரையர், நாடாள்வார் என்னும் பெயர்கள் வழங்கின வென்பதும் முன்பு காட்டப்பட்டன. சர்க்கரைப் புலவரின் வழித்தோன்றலாய திருவாளர், சர்க்கரை இராமசாமிப் புலவரவர்களின் வீட்டில் இருந்த தொரு மிகப்பழைய ஏட்டில் ஏழு கூற்றமும், பதினெட்டு நாடும், ஏழு கூற்றத்திற்கும் ஏழு ராயரும் கூறப்பட்டுள்ளன, கூற்றமும், நாடும் பின்காட்டப் பெறும். ராயர் எழுவராவார்: சேதிராயர், கலிங்கராயர், பாணாதிராயர், கொங்குராயர், விசையராயர், கனகராயர், கொடுமளூர்ராயர் என்போர்.


திருவானைக்காக் கல்வெட்டு ஒன்று பின்வருமாறு கூறகின்றது:


'ஸ்ரீகுலோத்துங்க சோழதேவர்க்கு யாண்டு 4107-வது பாண்டி குலாசனிவள நாட்டு மீகோழை நாட்டுத் தேவதான பிரமதேயம் திருவானைக்காவில் திருவெண்ணாவற்கீழ் அமர்ந்தருளிய திரிபுவன பதிக்கு மூலப்பிருத்தியனாகிய சண்டேசவரன் உள்ளிட்ட தேவகன்மிகள், ஜயசிங்ககுல கால வளநாட்டு மீசெங்கிளிநாட்டு வளம்பகுடி அரையன் மகன் முனையன் அருமொழி தேவனான வில்லவராயனுக்கு நாம் விற்றுக்கொடுத்த நிலமாவது..............(தென்னிந்திய சாசன புத்தகம் தொகதி 3, பகுதி 2 , பக்கம் 168).


இதிற் குறித்துள்ள வளம்பகுடி என்பது பூதலூருக்குத் தெற்கில் ஐந்தாறு நாழிகையளவில் உள்ளதோர் ஊர். இவ்வூர் அந்நாட்டுக் கள்ளர்கள் நாட்டுக் கூட்டம் கூடுதற் குரிய பொது விடமாகும். வில்லவராயன் பட்டி என்பதோர் ஊரும் பூதலூருக்குத் தெற்கில் ஒரு நாழிகையளவில் உள்ளது. வளம்பகுடியில் இருந்த கள்ளர் குலத்தவனாகிய வில்லவராயனை ' அரையன் மகன்' என்று கூறியிருப்பது காண்க. இக் கல்வெட்டில் 'இவன்' உடையார் திருவானைக் காவுடைய எம்பெருமான் கோயிலில் இடங்கை நாயகரென்று எழுந்தருளவித்த இடப வாகன தேவர்க்கும் நம் பிராட்டியாரக்கும்' என்று வருதலால் இவனது பிரதிட்டைத் திருப்பணியும் புலனாம்.


ஸ்ரீரங்கத்திலுள்ள ஓர் கல்வெட்டிலிருந்து, அங்கிருந்த கைக் கோள முதலிகள் சிலர் அவ்வூர் தலைவராகிய அகளங்க நாட்டாள்வார் உயிர் துறக்க நேரும்பொழுது தாமும் உடன் உயிர் துறப்பதாகப் பிரதிஞ்ஞை செய்து கொண்டனர் என்னும் செய்தி வெளிப்படுகிறது. குருபரம்பரை, இராமநுஜ திவ்யசரிதை இவ்விரு பிரபந்தங்களிலும் அகளங்க நாட்டாள்வான் இராமாநுஜரது சீடனாகக் கூறப்படுகின்றான். திருச்சிராப்பள்ளியில் இன்றும் நாட்டாள்வார் என்று, கள்ளரில் ஒரு வகுப்பினர் இருக்கின்றனர். இப்பெயர் தற்காலம் நாடாவார் என மருவி நிற்கிறது. (செந்தமிழ், தொகுதி 3, பக்கம் 252) இங்ஙனம் எத்தனையோ பல சான்றுகள் இவர்களது பழைய ஆட்சி நிலையைக் குறிப்பனவாகவுள்ளன.


பல ஊர்ப்பெயர்கள் இன்னோர் பெரால் அமைந்திருத்தலும் அவ்தவிடங்களில் இவர்கள் முதன்மையுற்றிருந்தன ரென்பதற்குச் சிறந்த சான்றாகும். அவற்றுள் எமக்குத் தெரிந்தன கீழ்வருவன:-

  1. காங்கெயன்பட்டி

  2. சோழகன்பட்டி

  3. ராயமுண்டான்பட்டி

  4. வாலியன்பட்டி

  5. தொண்டைமான்பட்டி

  6. கண்டியன்பட்டி

  7. சாதகன்பட்டி

  8. துண்டுராயன்பாடி

  9. ஆரமுண்டான்பட்டி

  10. ஓசையன்பட்டி

  11. வில்லவராயன்பட்டி

  12. செம்பியன்களர்

  13. உலகங்காத்தான்பட்டி

  14. மலைராயன்பட்டி

  15. திராணிபட்டி

  16. கலியராயன்பட்டி

  17. சாணூரன்பட்டி

  18. கச்சியராயன்மங்கலம் (கச்சமங்கலம்)

  19. ஏத்தொண்டான்பட்டி

  20. பத்தாளன்கோட்டை

  21. பாப்பரையன்பட்டி

  22. மாதைராயன்பட்டி

  23. சேதிராயன் குடிக்காடு

  24. நல்ல வன்னியவன் குடிக்காடு

  25. வல்லாண்டான்பட்டி

  26. வாண்டையானிருப்பு

  27. தென்கொண்டானிருப்பு

  28. நரங்கியன்பட்டி

  29. பாலாண்டான்பட்டி

  30. கண்டர்கோட்டை

  31. வன்னியன் பட்டி

  32. பாண்டுராயன்பட்டி

  33. சுரக்குடிப்பட்டி (சுரக்குடியார் பட்டி)

  34. காடவராயன்பட்டி

  35. சாளுவன்பேட்டை

  36. நாய்க்கர்பாளைம் (சாவடி நாயக்கர் கிராமம்)

  37. செம்பின் மணக்குடி


இனி, கள்ளர் சிற்றரசர்களாயிருந்த காலத்தில் பல விடங்களில் அரண் (கோட்டை)கள் கட்டியிருந்தனர் என்பது அறியற்பாலது.


  1. துண்டுராயன்பாடி

  2. பலபத்திரன்கோட்டை

  3. காங்கெயன்பட்டி

  4. ஆற்காடு

  5. சுரக்குடிப்பட்டி

  6. சோழகன்பட்டி

  7. உறத்தூர்

  8. விண்ணமங்கலம்

  9. திருக்காட்டுப்பள்ளி

  10. பூண்டிபானமங்கலம்

  11. அன்பில்

  12. மாங்குடி

  13. கண்டர்கோட்டை

  14. கிள்ளிக்கோட்டை

  15. பாத்தாளன் கோட்டை

  16. வாழவந்தான் கோட்டை

  17. பனையக்கோட்டை

  18. காசாங்கோட்டை

  19. பட்டுக்கோட்டை

  20. கல்லாக்கோட்டை

  21. கோட்டைப்பத்து

  22. பிங்களக்கோட்டை

  23. திருமங்களக்கோட்டை

  24. வத்தனாக்கோட்டை

  25. மல்லாக்கோட்டை

  26. எயிலுவான்கோட்டை

  27. நடுவாக்கோட்டை

  28. மயிலாடுகோட்டை

  29. வாளமரங்கோட்டை

  30. துரையண்டார்க்கோட்டை

  31. தெற்குக்கோட்டை

  32. சூரக்கோட்டை

  33. சத்துருசங்காரக்கோட்டை

  34. நாயக்கர்கோட்டை

  35. ஆதனக்கோட்டை

  36. மாதைராயன் புதுக்கோட்டை


என்னும் இடங்களிலெல்லாம் இவர்களுடைய கோட்டைகள் இருந்தன. இவற்றுட் சில ஊர்களில் கோட்டை அழிந்தவிடத்தில் திடர்களும், நிலங்களும் கோட்டைமேடு, பீரங்கிமேடு, என்னும் பெயர்களால் வழங்குகின்றன.


முற்காட்டிய ஊர்களில் துண்டுராயன்பாடி என்பது தஞ்சை சில்லாவில் ஐயனார்புரம் புகைவண்டித் தங்கலுக்கு அரைநாழிகை யளவில் விண்ணாற்றின் தென்கரையில் இருப்பது, அதில் செங்கல்லாலய கோட்டை மதிலின் அடிப்பகுதியம், நாற்புறத்தும் கொத்தளமும் இன்னமும் இருக்கின்றன. கோட்டைக்குள்ளேயே வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கு நிலத்திற் புதைந்துகிடந்து அகப்பட்ட பல பீரங்கிக் குண்டுகளை நேரிற்பார்த்துள்ளேம். ஒரு மகம்மதிய மன்னரானவர் கண்தெரியாமலிருந்து, துண்டுராயன்பாடியிலுள்ள கள்ளர் குலப் பெரியாராகிய சோழங்கதேவர் ஒருவரால் கண் தெரியப்பெற்று, அவருக்குப் பரிசாக ஓர் தந்தப் பல்லக்கும், பாட்சா என்னும் பட்டமும் அளித்தனர் என்றும், அதிலிருந்து அவர் 'செங்கற் கோட்டை கட்டித் தந்தப் பல்லக்கேறிக் கண்கொடுத்த சோழங்கதேவ பாட்சா' எனப் பாராட்டப்பட்டு வந்தனரென்றும் கூறுகின்றனர். துண்டராயன்பாடிக் கோட்டையிலிருந்து சோழங்க தேவ அம்பலகாரர்க்கும் . அதனையடுத்து விண்ணாற்றின் வடகரையிலுள்ள ஆற்காட்டுக் கோட்டையிலிருந்த கூழாக்கி அம்பலகாரர்க்கும் பகைமை மிகுந்திருந்ததாகவும், சோழங்கதேவர் படையெடுத்துச் சென்று ஆற்காட்டுக் கோட்டையை அழித்துவிட்டதாகவும், கூழாக்கியார் அப்பொழுது தஞ்சையில் அராசாண்டு வந்த மராட்டிய மன்னர் தம்மிடம் நண்பு பூண்டிருந்தமையின் அவ்வரசரிடம் தெரிவித்துத் துண்டுராயன்பாடி மீது படைகளை அனுப்பச்செய்ததாகவும், அதனால் அக்கோட்டையும் அழிவெய்தியதாகவும் கூறுகின்றனர்.


பலபத்திரன் கோட்டை என்பது ஐயனார்புரத்தின் மேற்கே முக்கால் நாழிகை யளவில் உள்ள விண்ணனூர் பட்டியில்மஏறக்குறைய இருநூறு ஆண்டுகளின் முன்னிருந்த பலபத்திரச் சோழகரால் கட்டப்பட்டது. பிறகோட்டைகளின் வரலாறுகள் பின்பே ஆராய்ந்து தெரியவேண்டியிருத்தலின் அவற்றைக் குறித்து ஒன்றும் எழுதாதுத விடுக்கின்றோம். இப்பொழுது இக்குலத்தாரில் அரசரும், குறுநில மன்னருமாயுள்ளார் வரலாறுகள் அடுத்த அதிகாரத்திற் காட்டப்படும்


மூன்றாம் அதிகாரம் முற்றும்

1மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

This comment has been removed by a blog administrator.

 

Post a Comment

<< முகப்பு