அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 11 -

கள்ளர் சரித்திரம்

மூன்றாம் அதிகாரம்

அரையர்களின் முற்கால நிலைமை

கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த ஓர் வகுப்பினரென்பது பல தக்க மேற்கோள் கொண்டு மேலே வலியுறுத்தலாயிற்று. சோழரென்பார் படைப்புக் காலந் தொடங்கித் தமிழகத்திலிருந்து செங்கோலோச்சி வந்த பேரரசராகலானும், பல்லவரும் தமிழ் நாட்டுடன் ஆந்திர நாட்டையும் ஒரு காலத்தில் திறமையுடன் ஆட்சிபுரிந்த செங்கோல் மன்னராகலானும் இவர்களின் அப்பொழுதைய நிலைமையை இங்கு வேறாக எடுத்துக் கூறவேண்டுவதின்று. இன்னவரின் ஆட்சி நிலை குலையத் தலைப்பட்டதன் பின்பு இருந்துவந்த நிலைமையே இங்கே ஆராய்தற் பாலது. இவ்வாராய்ச்சிக்கு இவர்களுக்குள் வழங்கும் கிளைப் பெயர்கள் பெரிதும் உதவி புரிவனவாகவுள்ளன. பழைய தமிழ்ச் சங்க நாளிலே இப்பொழுது வழங்குவன போன்ற பல பட்டப் பெயர்கள் மக்களுக்கு வழங்கவில்லையென முன்பே கூறியள்ளாம். இப்பெயர்களின் தோற்றங்களை ஆராயுமிடத்தே இவையெல்லாம் அவரவர் இருந்த நாடு பற்றியும். பிறநாடுகளை வென்று கைக் கொண்டமை பற்றியும், படைத்தவைராகவோ, படைவீரராகவோ இருந்தமை பற்றியும், நாடாட்சி முதலியன பற்றியும் இடைக் காலத்தே உண்டாயின என்பது விளக்கமாம்.. இங்ஙனம் ஒவ்வொரு காரணம் பற்றி ஒவ்வொருவர்க்கும் உண்டாகிய இப்பெயர்கள் பின்பு அவர்களின் வழியில் வந்தோர்க்கெல்லாம் வழங்கு வனவாயின. விஜய நகர அரசர்கள் தம் படைத்தலைவர்களைப் பல இடங்கட்கு அனுப்பினர். படைத்தலைவர் என்ற பொருளில் நாயக் அல்லது நாயக்கர் என்ற பெயர் அப்பொழுது அவர்கட்கு உரியதாயிருந்தது. இப்பொடுது அப்பெயர் ஓர் பெருங்கூட்டத்தினையே குறித்து நிற்பது காண்கின்றோம். முதலி என்னுஞ் சொல்லும் படைத்தலைவன் என்னம் பொருளது எனச் சாசன அராய்ச்சியாளர் கூறுகின்றனர். படையாட்சி என்பது படையை ஆள்பவன் அதாவது படைத்தலைவன் என்னும் பொருளதாதல் வெளிப்படை. பெரிதும் பிற்காலத்திலுண்டாய சாஸதிரி, தீக்ஷிதர், குருக்கள், ஓதுவார் முதலிய பெயர்களும் இப்பொழுது குலப் பெயராக வழங்குதலையும், அவர்களில் பலர் இப்பெயர்களின் பொருட்குச் சிறிதும் பொருத்தமில்லாத திருத்தலையம் காண்கின்றோம், கள்ளர்களின் பல பட்டங்களைக் குறித்து யாம் எழுதுவதும் அவர்களது பழைய வரலாறு தெரிவிப்பதற்கே யன்றி இப்பொழுதை நிலைமை கருதியன்று.

கள்ளர் வகுப்பினர்க்கு வழங்கும் பட்டங்களை இப்புத்தகத்தின் இறுதியிற் காணலாம். யாம் அறியலாகாத பட்டங்கள் பல இன்னம் இருத்தல் கூடும். வேறு எவ்வகுப்பினுள்ளும் இத்துணை மிகுதியான பட்டப்பெயர்கள் இருப்பதாக யாம் விசாரித்தவளவில் வெளியாகவில்லை. அங்கராயர், அரசாண்டார், ஈழத்தரையர், உலகம்பாத்தார், உறந்தைராயர், கலிங்கராயர், காடவராயர், குச்சராயர், கொங்கரையர், கொல்லத்தரையர், சீனத்தரையர், சேதிராயர், சோழகர், தஞ்சைராயர், நாடாள்வார், நாட்ரையர், பல்லவராயர், பாண்டியர், மழவராயர், முனையதரையர், மூவரையர், விஞ்சைராயர், வில்லவராயர் முதலிய பெயர்களெல்லாம் நில ஆட்சியில் இவர்க்களுக்குள்ள சம்பந்தத்தைப் புலப்படுத்துகின்றன. ஈழங் கொண்டார், கடாரந்தாங்கியார் முதலிய பெயர்கள் இவர்கள் பிற நாடுவென்று கைப்பறினைமையைக் குறிப்பிடுகின்றன. களத்துவென்றார், களமுடையார், கொற்றப்பிரியர், கோதண்டப்புலியர், யுத்தப்பிரியர், வாள்வெட்டியார் முதலிய பெயர்கள் இன்னவர் படைவீரராயிருந்தமையைத் தெரிவிக்கின்றன.

இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலே இன்னோர் பெயர்களிற் சிற்சில காணப்படுகின்றன. அவை:- கச்சியராயன், காடவராயன், காடுவெட்டி, காலிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான் , நந்தியராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன் முதலியன.

இவ்வாறே , வேறு சில பட்டங்களும் கல்வெட்டுகளில் உள்ளன. அவை:- அனகராயன், களப்பாளராயன், குருகுலராயன், சம்புவராயன், தமிழதரையன், பங்களராயன், மன்றாடி, மீனவராயன், மூவராயர்கண்டன், மூவேந்தரையன், வங்கத்தரையன், வாளுவராயன், விலாடத்தரையன், விளுப்பாதராயன் முதலியன.

இவையும் கள்ளர்க்குரியனவாயிருப்பினும் இருக்கலாம். இப்பட்டங்கள் உடையார் எங்கிருக்கின்றன ரென இப்பொழுது எமக்கு அரியவாராமையால் இவை இன்னார்க்குரியவெனத் துணிந்துரைக்கக் கூடவில்லை. மன்றாடி என்பது கொங்கு வேளாளர்க்குள் வழங்குகின்றது.

கோயில்களுக்கு நிலம் முதலியன தானஞ் செய்தவிடத்தும், அரசர்கள் சில தீர்ப்புச் செய்த விடத்தும் கீழே கையெழுத்திட்டோரின் பெயர்களாக இப்பட்டங்கள் கல்வெட்டுகளிலே காணப்படுகின்றன. இதிலிருந்தே இப்பெயர்களையுடையோர் சற்று உயர்ந்த நிலையில் இருந்திருக்க வேண்டுமெனக் கருதலாகும். இவர்கள் அமைச்சர் முதலானோராயிருந்தமையைக் கல்வெட்டுகள் வெளிப்படையாகவும் கூறுகின்றன.

'திருமந்திரவோலை வானவன் பல்லவ தரையன் எழுத்து' திருமந்திரவோலை நாயகம் இராஜராஜனான தொண்டைமான் எழுத்து. அரையன் இராஜராஜனான வீரராஜேந்திர ஐயமுரி நாடாள்வான் எழுத்து. வீரராஜேந்திர மழவராயன் எழுத்து' (தென்னிந்திய சாசன புத்தகம் தொகுதி 3, பகுதி1, பாகம் 40) என்று இங்ஙனம் பல விடங்களில் வருகின்றன. திருமந்திரவோலை என்பது அமைச்சர்க்கும், திருமந்திரவோலலை நாயகம் என்பது முதலமைச்சர்ககும் உரிய பெயர்களாகும் இது சாசன ஆராய்ச்சியாளரின் துணிபு.

தொடரும் .......12

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு