அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

கள்ளர் சரித்திரம் - 10 -

இவ்வாற்றால் கோனேரி, மேல்கொண்டான் என்னும் இரு பெயர்களை இணைந்து ஒரு பட்டமாக வழங்கியிருப்பது புலனாகும். இப்பெயர்களில் யாதேனும் யாருக்காவது இப்பொழுது பட்டப்பெயராக வழங்குகின்றதா என்பதே கண்டறிய வேண்டுவது. கள்ளருக்குள் வழங்கும் பல்வகையான பட்டப் பெயர்களில் மேல் கொண்டார் என்பதும் ஒன்று. இப்பட்ட முடையார் செங்கிப்பட்டி முதலிய இடங்களில் இருக்கின்றனர். இன்னோர் பரம்பரையாக மிக்க மேன்மை யுடையராய் இருந்து வந்திருக்கின்றனர். மதுக்கூர்ச்சமீன்றாரின் மாப்பிள்ளையும் கூனம் பட்டியின் அதிபருமாகிய திரூவாளர் S. குமாரசாமி மேல்கொண்டார் அவர்களை இதற்குச் சான்றாகக் குறிப்பிடுதல் பொருந்தும். கோனேரி என்னும் பெயரும் கள்ளர்களில் பலர் தரித்து வந்திருக்கின்றனர் இவகைளிலிருந்து. சோழர் பலர்க்கு வழங்கிய மேல்கொண்டான் என்னும் பெயர் அவர் வழியினர்க்குப் பட்டமாக இருந்துவருகிறதென்றும், அவர்கள் பல குடும்பங்களாகப் பிரிந்து தங்கள் நாடாட்சியை இழந்து பிற்காலத்திலே சோழர் குடியிற் றேன்றினோ ரென்னும் உண்மை மறக்கப்பட்டிருக்கிறதென்றும் துணியலாகும்.


இனி, இவர்கள் பட்டங்களில் சோழங்கர் அல்லது சோழங்க தேவர் என்பதும் ஒன்று, இப்பெயரின் வரலாற்றை ஆராயும் பொழுது சோழ சம்பந்தம் பெறப்படுகிறது. சோழ மன்னர்கள் ஓரொருகால் தாம் வென்று கைப்பற்றிய நாடுகளில் தம் கிளைஞரைப் பிரதிநிதிகளாக நியமித்து, அவர்கட்கு வெவ்வேறு பட்டங்கள் கொடுத்திருக்கின்றனர் எனத் தெரிகிறது. சோழ பாண்டியன், சோழ கேரளன், சோழபல்லவன் முதலியன அங்ஙனம் உண்டாய பட்டங்களாகும். தென்தனிந்திய சாசன புத்தகம் மூன்றாவது தொகுதி, முதற் பகுதி 59-ம் சாசனத்தில் வந்துள்ள பட்டங்களில் 'சோழங்கன்' என்பதும் ஒன்று, 'தன்றிருத்தம்பியர் தம்முள்--மதுராந்தகனைச் சோழகங்கனென்றும், மணிமுடிசூட்டி' எனக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து சோழமன்னன் ஒருவன் தம்பி சோழகங்கன் சோழங்கன் மருவுவது மிக எளிதே. இப்பட்டமுடைய கள்ளர் குல மக்கள் துண்டுராயன்பாடி, அந்தலை முதலிய இடங்களில் இருக்கின்றனர். இவரெல்லாம் தொன்றுதொட்டுப் பெருமை வாய்ந்துள்ள குடும்பத்தினர்களாவர். இன்னோர் கோட்டை கட்டியும் ஆட்சி புரிந்திருக்கின்றனர். அது பின் கூறப்படும்.


சாசனங்களில் 'சோழகோன்' என ஒரு பட்டம் வந்துள்ளது. இது சோழகன் எனத்திரிந்து பன்மையில் சோழகர் என்றாகி இவ்வகுப்பினர்க்கு வழங்குகிறது.


கள்ளர்களில் நாட்டாள்வார் அல்லது நாடாள்வார் என்னும் பட்டந்தரித்தோர் பல இடங்களில் பெருந்தொகையினராக இருக்கின்றனர். கோனாடு, கானாடுகளின் பிரிவுகளை 'அரையர் ' 'நாடாள்வார்' என்னும் பட்டமுடையார் ஆட்சிபுரிந்த செய்தி கல்வெட்டுகளில் வெளியாவது முன்பே காட்டப்பட்டது. நாடாள்வார் என்னும் இப்பெயர் முதல் குலோத்ததுங்கன் மகனாகிய விக்கிரம சோழனுக்கு வழங்கியுள்ளது. குருபரம்பரைப் பிரபந்தம் என்னும் தமிழ்ச் செய்யுள் நூலில், இராமாநுசர் சரிதையில்,


'சீராரு மரங்கத்துச் சிலபகல்கண் மன்னவந்நாட்

பாராளு மன்னவன் பாகவத ரிடத்திலென்றும்

ஆராத காதலனாம் அகளங்க நாடாள்வான்

ஏராரும் வைகுந்த நாடாள வேகினான் (794)


என்று கூறப்படுதல் காண்க. (செந்தமிழ் தொகுதி 3, பாக்கம் 347-351)


ிக்கிரமனுக்குப் பின்னர் ஸ்ரீரங்கத்தில் சிற்றரசர்களாயிருந்தோர்க்கும் இப்பெயர் வழங்கிய செய்தி கல்வெட்டக்களால் வெளியாகின்றது. அது பின்பு காட்டப்படும். இவைகளிலிருந்து முடியுடை வேந்தராகிய சோழர்க்கு வழங்கிய நாடாள்வார் என்னும் பெயர் அவ்வழியினர்ககும் ஆட்சி சுருங்கிய பிற்காலத்தும் வழங்கி வந்திருப்பது புலனாம். இவ்வாறே மற்றும் பல பட்டங்கள் சோழர்க் குரியன கள்ளரிடத்திற்காணப்படுகின்றன.


இது காறும் தட்டியவற்றிலிருந்த பல்லவர் வழியினராகிய கள்ளரோடு சோழரும் கலந்து விட்டமை உள்ளங்கை நெல்லிக் கனிபோல் விளங்கும். பல்லவர் வழியும் சோழர் வழியும் ஒன்றுபட்ட ஓர் வகுப்பு இஃது எனலும் பொருந்தும்.


இனி, இவர்கட்கு வழங்கும் கள்ளர், இந்திரர் என்னும் பெயர்கள் எப்படி வந்தன என்பது ஆராயற்பாலது. இந்திர குலாதிபர் சங்கம் நாலாவது ஆண்டு விழாவில் தலைமை வகித்த சீமான் வா. கோபாலசாமி ரகுநாத இராசாளியார் அவர்கள் தமது முகவுரைப் பிரசங்கத்தில் இப்பெயர்களைக் குறித்து விரிவாக ஆராயந்துள்ளார்கள் . அவற்றில் ஏற்பவற்றை இங்கே சுருக்கிக் காட்டுதும்.


      1. "கள்வனென் கிளவி கரியோனென்ப' எனத் திவாகரமும், 'கடகரிப் பெயரும் கருநிற மகனும், கர்க்கடக விராசியும் ஞெண்டும் கள்வன்' எனப் பிங்கலந்தையும் கூறுவதிலிருந்து கள்வன் என்னுஞ் சொல் கருநிறமுடையோன் என்னும் பொருளில் தொன்று தொட்டு வழங்கியுள்ளமை புலனாகும் . ஆரியர் தமிழரைக் கரியவரென்று இருக்குவேத மந்திரத்திற் கூறுகின்றனர். இந்திரனுக்கும் கரியோன் எனப் பெயரிருக்கிறது. சோழனும் கருநிறம் பற்றியே 'மால்' என அழைக்கப்படுகின்றான். இவ்வாற்றால் இந்திர குலத்தவர் எனினும், கள்வர் குலத்தவர் எனினும் இந்தியப்பழங் குடியினரான தமிழர் என்பதே பொருள் எனத் துணியப் படுகிறது.

      2. கள்வர் என்னும் சொல்லுக்குப் பிறர் பொருளை வெளவுவோர் என்னும் பொருளும், பகைவர் என்னும் பொருளும் உண்டு. இதற்கு நேரான 'தஸ்யு' என்னும் சொல்லை வடமொழி அமரகோசத்தில் சூத்திர வர்க்கத்தில் சேரான் என்னும் பொருளில் வைத்திருப்பதோடு ஷத்திரிய வர்க்கத்தில் பகைவன் என்னும் பொருளில், வைத்திருத்தலும் காண்க. ஆரியர் இந்நாட்டுப் பழங்குடிகளைத் 'தஸ்யுக்கள்' என வழங்குகின்றனர். இங்ஙனம் ஆசிரியர்களால் தமக்குப் பகைவர் என்று அழைக்கப்பட்ட பழந்தமிழரே கள்வர் என்னும் சொல்லுக்குப் பொருளாய் நிற்றல் துணியப்படுகிறது.

கள்ளர் என்னுஞ் சொல்லுக்குக் கரியவர், பகைவர் என்ற இரு பொருளும், இந்திரன் குலத்தவர் என்னுஞ் சொல்லுக்குக் கரியவர் என்ற ஒரு பொருளும் இங்கே கொள்ளப்பட்டுள்ளன.


இனி, ஒரு சாரார் களப்பிரர் என்னும் பெயரே கள்வர் எனத் திரிந்ததாகும் எனக் கருதுகின்றனர். களப்பிரர் என்பார் தட்சிணத்தை ஆண்ட ஓர் அரச வமிசத்தினர். இவர்கள் ஒரு காலத்திற் பண்டி நாட்டையும் வென்று அடிப்படுத்திருக்கின்றனர்.

இனி, சீவகசிந்தாமணி 741 -ம் செய்யுளில் உள்ள " கள்ளராற் புலியை வேறு காணிய'" என்னந் தொடருக்கு 'அரசரைக் கொண்டு சீவகனைப்போர் காணவேண்டி' என உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் பொருள் கூறியிருத்தலின் கள்ளர் என்னும் சொல்லுக்கு அரசர் என்னம் பொருள் கருதப்படுகிறது. சீவகனைப் புலியென்று கூறியதற்கேற்ப அரசரைக் கள்ளர் என்றார் எனின், அப்பொழுதும் வீரத்தின் மேம்பட்டார் என்னும் பொருள் பெறப் படுகின்றது. வீரர் என்னும் பொருள் பற்றியே கள்வர் அல்லது கள்ளர் என்னும் குலப்பெயர் தோன்றியதென்பது பழைய ஆதரவு கட்கும் யூக அநுபவங்கட்கும் ஒத்ததாயிருக்கின்றது. இதனை மறுப்பதற்கு எவ்வகையான காரணமும் இல்லை. காட்டில் வாழும் ஆறலை கள்வர் என்பார் உளராயினம் அன்னவர் வேறு இவர் வேறு என்பதனைச் சிறிதறிவுடையாரும் அறிவர். பொய்யடிமையில்லாப் புலவர் பெருமக்களால் கள்வர்கோமான் புல்லி எனவும் , கள்வர் பெருமகன் தென்னன் எனவும் சிறப்பித்தோதப் பட்டிருத்தலை அறியும் அறிவுடையார் எவரும் கள்வர் என்னும் குலப்பெயர்க்கும் உயர்பொருள் கொள்ளாமலிரார். கள்வர் கோமான் புல்லிக்கும் இன்னவர்க்கும் யாதும் தொடர்பில்லை ; இவர்கட்கு இப்பெயர் சிறிது காலத்தின் முன்பே இவர்களது தீச்செயலால் ஏற்பட்டிருக வேண்டும் என்னில், புல்லிக்கம் இவர்க்கும் தொடர்பில்லாது போயினும் பல்லவ, சோழ மன்னரது வழியினராய், இற்றைக்கும் பல இடங்களில் குறு நில மன்னராய், இருந்து வரும் ஓர் பெரிய வகப்பினர் தமது தீச்செயல் பற்றிப் பிறர் இட்ட பெயரினைத் தமக்குக் குலப்பெயராக ஒருங்கே ஏற்றுக்கொண்டன ரென்பது எவ்வளவு அறியாமை யாகும்! இனி வெட்சிமறவர் கள்வர் எனவும். கரந்தை மறவர் எனவும் வழங்கப்படுவரென்னில், வஞ்சி மறவர், உழிஞைமறவர், தும்பை மறவர் முதலியோர்க் கெல்லாம் ஒவ்வொரு வகுப்பினரைக் காட்டுதல் வெண்டும் என்க. ஓர் அரசனாதல், அவன் படையாளராதல் தாம் புரியும் போர் முறைபற்றி வேறு வேறு திணைக்கும் உரியராவரென்பதும், அதனால் ஒருவர்க்கே பல பெயரும் பெற உரிமை யுண்டென்பதும் தமிழிலக்கணம் கற்றவர் நன்கு அறிவர்.


இனி, இவர்கள் வீரராயினும் அரசராகவோ, படையாளராகவோ சென்று மாற்றாரது நிலத்தைக் கொள்ளை கொண்டமையால் இவ்பெயர் எய்தினாராவர் என்னில், உலக சரித்திரத்தில் அறியலாகும் எந்த அரச பரம்பரையினரும் கொள்ளை கொள்வோர் என்னும் பெயருக்கு உரியராகாது தப்பவியலாது; இப்பொழுது ஐரோப்பாக் கண்டத்திலுள்ள எல்லா அரசுகளும் இப்பெயரினைப் பெறுதற்கு முற்றிலும் தகுதியள்ளவை; எனினும் இது குறித்து இப் பெயர் உண்டாதல் வழக்காறன்று, இனி இவ்வகுப்பினரில் களவுத் தொழில் செய்வார் இருப்பதும் உண்மையே. வேறு எவ் வகுப்பிலே தான் இத்தீத்தொழில் செய்வோர் இல்லாதிருக்கின்றர்? களவுக்குக் காரணம் அவரவர் நிலைமையே யன்றி, ஓர் வகுப்பினுட் பிறத்தலன்று என்பதை அறிவுடையோர் எவரும் மறுக்கார். அரசாங்கத்தினரும், பொது மக்களும் எழைகளின் நிலைமையறிந்து அவர்க்கு உதவி புரியாது புறக்கணித்திருப்பதனாலேயே இத்தகைய குற்றச் செயல்கள் மிகுகின்றன. எனவே குற்றத்திற்கு அனைவரும் பங்காளிகள் என்பதனை உணரவெண்டும். இதுகாறும் கூறியவற்றிலிருந்து கள்வர் அல்லது கள்ளர் என்னும் குலப்பெயரின் வரலாறு பலராற் பலவாறு கூப்படினும் வீரர் என்னும் பொருள் பற்றி அப்பெயர் உண்டாயிற்றென்பதே முற்றிலும் பொருந்தியதெனல் பெறப்படுமாறு காண்க.


இனி, இந்திரகுலத்தார் என இவர்கள் வழங்கப்படுதற்கும் ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளக்கு முற்பட்ட ஆதரவுகள் கிடைக்கின்றன. தேவேந்திரன் ஒரு நாள் பூமியிற் சுற்றி வந்தானென்றும், அப்போது ஒரு கன்னிகையை மணந்தா னென்றும், அவள் அநேக பிள்ளைகளைப் பெற்றனளென்றும், அவர்களில் ஒருவன் அரசனானானென்றும் 172 ஆண்டுகளின் முன் எழுதப்பெற்ற தொண்டைமான் வமிசாவளி என்னும் நூலிற் கூறியிருப்பது முன்பே காட்டியுள்ளாம், கள்ளர்,மறவர், அகம்படியர் என்ற மூன்று வகுப்பினரும் ஒரே யினத்தவரென்றும், இவர்க ளெல்லாரும் இந்திர குலத்தினரென்றும் பலர் சொல்லியும், எழுதியும் வந்திருக்கினறனர். பஞ்ச கன்னிகைகளில் ஒருத்தியும் கொதமர் பத்தினியும் ஆகிய அகலிகையைத் தேவேந்திரன் கரவிற் புணர்ந்த காலத்து மூன்று மக்கள் பிறந்தனரென்றும், முனிவர் மனைக்குத் திரும்பியபொழுது மறைந்தவன் கள்ளனென்றும், மரத்திலேறியவன் மரவனென்றும், அகங்காரத்துடன் நின்றவன் அகம்படியனென்றும் பெயர்பெற்றன ரென்றும் கதை கூறுவர். இதிலிருந்தே இக்கதையைப் படைத்தவன் எவ்வளவு அறிவிலியாயிருக்க வேண்டுமென்பது புலப்படும். இது போலும் அறிவிலார் கூற்றுக்களை ஆராயாதே ஆங்கிலத்தில் எழுதிச் சரித்திரமாகக் காட்டிவிடும் பெரியோர்கள் இன்னமும் இவ்வுலகத்தில் இருக்கின்றனர் ! இக்கதை, இந்திர குலம் என்ற வழக்கை வைத்தக்கொண்டு, சூரிய குலம், சந்திர குலம் என்பவற்றின் உறபத்திக்கு ஆண் பெண் வேண்டி யிருந்தமை போல இதற்கும் வேண்டுமென்று கருதிய யாரோ கட்டியதொன்றாகும். கட்டியவரது கல்வி, மறவர் முதலிய பெயர்க்குப் பொருள் காணலாகாத அளவினதாகும். இந்திரனுக்கும் அகலியைக்கும் பிறந்தார் என்பதில் ஓர் குறைவு இருப்பதாகக் கருதி இங்ஙனம் கூறுககின்றே மல்லேம். உலகத்தின் படைப்பையும், சூரிய சந்திர வமிசங்களின் தோற்றத்தையும், வசிட்டராதி முனிவர்களின் பிறப்பையும் நோக்குங்கால் அவையாவும் இழிவுள்ளனவாகவே நமக்குத் தோற்றுதல் கூடும். தமிழர்களாய இவர்களை இந்திரனுக்கும் அகலியைக்கும் பிறந்தவர்களென்று கூறுவது சிறிதும் சரித்திர இயல்படையதாகா தென்பதே நம் கருத்து. அகலியை வரலாறு கூறும் இராமாயணம் முதலியவற்றில் கள்ளர் முதலியோரின் பிறப்புக் கூறப்பட்டிருக்குமேல் அது சரித்திர மாகாவிடினும் ஒருவாறு மதிப்பிற்குரியதாகும். அங்ஙனமின்றி யாரோ அறிவிலார் கட்டிவிடுவதெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ளத்தகும்?


இனி, இம்மூன்று வகுப்பையும் குறித்துப் பூவிந்திர புராணம், கள்ளகேசரி புராணம் என்ற தமிழிலே புராணங்கள் எழுதப் பட்டிருக்கின்றன. இவையெல்லாம் பிரமாண்ட புராணம் முதலியவற்றைச் சேர்ந்தனவாம். சிவபிரான் உமாதேவிக்கும்,

அகத்தியர் புலத்தியர்க்கும், சூதபுராணிகர் நைமிசவன முனிவர் கட்கும் கூறியனவாம். இவற்றின் சிறப்பையும் மதிப்பையும் இங்கெடுத்துக் கூறுதல் மிகை. இந்திரன் அகலியைபால் விருப்பங்கொண்டதை யறிந்த இந்திராணி தன் சாயையால் அகலியை போலும் அழகுடைய மோகனாங்கி என்பாளைப் படைத்திட, இந்திரன் அவளைச் சேர்ந்து கள்ளர், மறவர், அகம்படியர் என்னும் பூவிந்திரர் மூவரைப் பெற்றனனென்றும், அவர்கள் தமிழ்நாடு மூன்றுக்கும் அரசராயினார்கள் என்றும் அப்புராணங்கள் கூறும். இவையும் இந்திர குலம் என்னும் பெயர் வழக்கிலிருந்து தோன்றியவை யென்பது கூறவேண்டியதில்லை. இவைகளிலிருந்து, நெருங்கிய சம்பந்தமுடையராய், இந்திர குலத்தினரென வழங்கப் பெற்று வந்திருக்கின்றனர். என்ற அளவு உண்மையெனக் கொள்ளலாகும்.

இனி, ஏறகுறைய ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளின்முன்பே இந்திரகுலம் என்னும் வழக்குண்மை வெளியாகின்றது. சாவக நாட்டிலே நாகபுரத்தில் இருந்து அரசு புரிந்த பூமி சந்திரன், புண்ணியராசன் என்னும் நாக அரசர்களை இந்திர குலத்தார் என மணிமேகலை கூறுகின்றது. சூரிய சந்திர வமிசங்களைக் காட்டு தற்கும் மணிமேகலையினும் பழமையான சான்று தமிழில் இல்லை. இங்ஙனம் மிகப் பழைய நாளிலே இந்திர குலத்தின ரெனப்பட்ட நாகரது வழியிலே அல்லது நாகராய பல்லவர் வழியிலே வந்தமையால் கள்ளர்கள் இந்திர குலத்தினரென்று வழங்கப்பட்டாராதல் வேண்டும். அன்றி, சோழர்களே இந்திரன் வழியினரென்பது ஒரு சாரார் கொள்கை. இந்திரன் ஆரியர் வழபட்ட கடவுள் என வடமொழி நூல்களிற் பெறப்படுமேனும், தமிழரது தெய்வம் என்று சிலர் கருதுகின்றனர். சோழர் தம் குல முதல்வனாகிய வேந்தனைத் தெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தன ரென்றும் கூறுவர். பழைய நாளில் சோழர்கள் இந்திரனுக்குப் பெருஞ் சிறப்புடன் திருவிழாச் செய்து போந்தமை சிலப்பதிகாரம் முதலியவற்றால் வெளிப்படை, 'சுராதி ராசன் முதலாகவரு சோழன்" எனக் கலிங்கத்துப் பரணி கூறுகின்றது. இவ்வற்றிலிருந்து சோழர் இந்திர குலத்தாரென்பது பெறப்படுமேல் அவர் வழியினராகிய கள்ளர் இந்திர குலத்தினர் எனப்படுவது அதனானே அமையும். தேவர் என்னும் பெயர், இராசராச தேவர், இராசேந்திர தேவர், குலோத்துங்கசோழதேவர் எனச் சோழ மன்னர்க்கு வழங்கியிருப்பதும், கள்ளர், மறவர் அகம்படியர் என்னும் இவ்வகுப்பினரும் தேவர் என வழங்கப்படுவதும் இங்கு அறியற்பாலன.


இவ்வாற்றால் பண்டுதொட்டு வழங்கியுள்ள இந்திரகுலம் என்னும் வழக்கும் இவ்வகுப்பினர்க்குப் பொருத்தமான தென்றே ஏற்படுகிறது. கள்ளர், இந்திர குலத்தார், தேவர், அரையர், நாடாள்வார் என்னும் இவ்வைந்தும் இவ்வகுப்பினரைக் குறிக்கும் பொதுவான பெயர்களாகும், இவற்றுள்ளும் அரையர் என்பது பல பட்டங்களோடும் கலந்திருத்தலானும், சரித்திர ஆதரவுடைமையானும் முற்றிலும் பொருந்தியதோர் பொதுப் பெயராகக் கொள்ளற்பாலது.


இரண்டாம் பாகம் முற்றும்

தொடரும் ........11

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு