அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வீரப்பன்

வீரப்பன் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல புதிய திருப்புமுனைகள் ஏற்பட்டிருப்பதை, கடந்த இதழில் எழுதியிருந்தோம். வீரப்பனை அதிரடிப்படை கொல்லவே இல்லை என்பதை நிரூபிக்கும் முக்கியமான நபர்கள் சிலரது ஒப்புதல் வாக்குமூலங்களைக் கொண்ட ஆடியோ, வீடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார் முத்துலட்சுமி. அதில் மிக முக்கியமானது, பழனியுடனான பூசாரி மணியின் உரையாடல். அவை போன இதழில் நாம் சொன்னவற்றை உறுதிப்படுத்துகின்றன.

வீரப்பன் ஆவி பயத்தால் அரண்டு போய்க் கிடந்த பழனியிடம், பரிகார பூஜையை நடத்துவதாகக் கூறி நைசாகப் பேச்சுக் கொடுத்து, உண்மைகளைக் கறந்திருக்கிறார் பூசாரி மணி. இவர்களுக்கிடையே நடந்த உரையாடல், மணியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோடேப்பில் பதிவாகியிருக்கிறது. ஒலிநாடாவில் இருந்த இவர்களது உரையாடல், தற்போது சி.டி.யாக மாற்றப்பட்டு அது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

பழனியுடன் பூசாரி மணி நடத்தியிருக்கும் உரையாடலின் மிக முக்கியமான பகுதிகள்...

வீரப்பனைக் கொல்றதுக்கு போலீஸ் தந்த விஷம் எப்படி உன் கைக்கு வந்தது? நீ போய் வாங்கிட்டு வந்தியா? இல்லே அவங்களே உன் வீட்டுக்கு வந்து தந்தாங்களா?

‘‘மாத்துப்பரி கல்லட்டைல இருக்கிற என் மாமா மாதையன் வீட்டுக்கு, அதிரடிப்படை போலீஸ் அதிகாரிங்க வந்து பேசினாங்க. ‘பணம் தர்றோம். வீரப்பனைப் புடிச்சித் தர்றியா’ன்னு மாதையனைக் கேட்டாங்க. வீரப்பனைக் காட்டிக் கொடுன்னு மாதையனை போலீஸ் மிரட்டுனாங்க. ‘அவரைப் புடிக்கிறதெல்லாம் முடியாத காரியம்’னு நான் சொன்னேன். ஆனா, போலீஸ்காரங்க அதை நம்பலை. ‘வீரப்பனுக்கு நீங்கதான் சாப்பாடு கொண்டு போறீங்கன்னு தெரியும். அந்தச் சாப்பாட்டுல விஷத்தைக் கலந்து கொடுத்து வீரப்பனைக் கொன்னுடு’ன்னு சொல்லி மாதையன்கிட்ட அவங்க தந்தாங்க.’’

அப்புறமா என்ன ஆச்சு...?


‘‘நான் தயங்கினேன். ‘விஷத்தை வைக்கலேன்னா உன்னைச் சுட்டுப்புடுவோம்’னு அவங்க மிரட்டினதால, பயந்துபோய் அதைச் செய்ய நான் சம்மதிச்சேன். ‘நீ கொன்னதா நாங்க சொல்ல மாட்டோம். நாங்க சுட்டதா சொல்லிக்கிறோம், பயப்படாதே’ன்னு எனக்குத் தைரியம் சொன்னாங்க.’’

அந்த விஷத்தை எதுல கலந்து வீரப்பனுக்குத் தந்தே? என்ன ஆச்சு?

‘‘என்னோட உறவுக்கார அக்கா மல்லிகா, மோர்ல விஷத்தைக் கலக்கித் தந்துது. அதைத்தான் நான் எடுத்துட்டுப் போய் வீரப்பனுக்கும், அவன் கூட வந்தவங்களுக்கும் தந்தேன். ‘பசியா இருக்குடா; சாப்பாடு எங்கே’ன்னு எங்கிட்ட வீரப்பன் கேட்டாரு. ‘சாப்பாடு வருது. முதல்ல நீ மோரைக் குடி’ன்னு தந்தேன். அதைக் குடிச்ச அவங்க செத்துப் போயிட்டாங்க.’’

எவ்வளவு நேரத்துல அவங்க செத்தாங்க...?

‘‘ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளாற அவங்க எல்லோருமே செத்துப் போயிட்டாங்க. அதுக்குப் பிற்பாடு பாடிய செடி மறைவுல மறைச்சு வச்சிட்டு, நான் போலீஸுக்குத் தகவல் தெரிவிச்சேன். மறுநாளு போலீஸ் வந்து பரிசல்ல அதை எடுத்துட்டுப் போயிட்டாங்க. ‘ஆஸ்பத்திரிக்குப் போறதுக்குன்னு வீரப்பன் வெளிய வந்தான். அவனை மடக்கிச் சுட்டோம்’னு சொல்லிட்டாங்க.’’

வீரப்பனைக் கொல்றதுக்கு உனக்கு எவ்வளவு பணம் தந்தாங்க...?

‘‘எங்களுக்கு (பழனியின் மாமா மாத்துப்பரி மாதையன், அத்தை மகன்கள் அர்ச்சுனன், மயில்சாமி, உறவுக்காரப் பெண் மல்லிகா) ஆளுக்கு ஏழு லட்ச ரூபாய் தந்தாங்க. மத்தவங்களுக்கும் இதைப் போலத் தந்தாங்களான்னு எனக்குத் தெரியாது.’’

வீரப்பனும் அவங்க ஆட்களும் கொண்டாந்த துப்பாக்கிங்க, இப்போ எங்கே இருக்குது...? அந்தத் துப்பாக்கிங்களை போலீஸுக்குத் தெரியாம மறைச்சு வச்சிருக்கீங்களா? இல்ல... நீங்களே இதை வச்சுக்கோங்கன்னு அவங்களே உங்களுக்குக் கொடுத்திட்டாங்களா?’’

‘‘என்கிட்ட ஒண்ணு, அய்யந்துரைகிட்ட ஒண்ணு, மாதையன்கிட்ட ஒண்ணுன்னு மொத்தம் மூணு துப்பாக்கிங்க எங்ககிட்ட இருக்குது. போலீஸுக்குத் தெரியாமத்தான் நாங்க அந்தத் துப்பாக்கிங்களை வச்சிருக்கோம்.’’

செத்தவங்ககிட்ட இருந்த துப்பாக்கிங்க எங்கன்னு போலீஸ்ல உங்களைக் கேட்கலையா?

‘‘கேட்டாங்க. அதைப் பற்றி எங்களுக்குத் தெரியாது. அவங்ககிட்ட எதுவுமே இல்லை. சாப்பாடு சாப்பிட அவங்க சும்மாதான் வந்தாங்கன்னு சொல்லிப்பிட்டேன்.’’

சரி, அவங்க போட்டிருந்த நகை, நட்டெல்லாம் எங்க இருக்குது...?

‘‘அதுவும் எங்கிட்டதான் இருக்குது. அதைப் பத்திரமா வெச்சிருக்கேன்.’’

மல்லிகாகிட்ட அந்த நகைங்க ஏதாச்சும் இருக்கா..?

‘‘அதுகிட்ட நகையெல்லாம் இல்லை. போலீஸ்காரங்க தந்த ஏழு லட்ச ரூபாய்தான் இருக்கு.’’

வீரப்பன் எங்கெங்கே பணம் வச்சிருந்தான்னு உனக்குத் தெரியுமா?

‘‘சத்தியமங்கலம் காட்டுக்குள்ள பணம் வெச்சிருந்

தது எனக்குத் தெரியும். அது நம்ம ஆளுங்களுக்குத் தெரியும். ஆனா, வீரப்பன் செத்த பின்னால அந்தப் பணத்தை அதிரடிப்படையினர் எடுத்துகிட்டாங்க.’’

வீரப்பன்கிட்ட இருந்து நீங்க பணம் வாங்கியிருக்கீங்களா..?

‘‘ஆமா... ஆளுக்கு அஞ்சு லட்ச ரூபாய் வாங்கியிருக்கோம்..’’

அதிரடிப்படைக்காரங்களால உங்களுக்குத் தொந்தரவு ஏதுமில்லையா?

‘‘தமிழ்நாட்டு அதிரடிப்படையால தொல்லை ஏதும் இல்லை. அவங்க சப்போர்ட்லதான் நாங்க இருக்கோம். கர்நாடகாக்காரனுங்கதான் அடிக்கடி என்னையும், மயில்சாமியையும் புடிச்சிட்டுப் போய்த் தொல்லை கொடுக்கிறாங்க. எங்களை ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்காங்க. ‘வீரப்பன் எப்படிடா செத்தான்?’னு கேட்டுக்கிட்டு இருக்காங்க. வாக்குமூலம் தரச் சொல்லி எங்களை வற்புறுத்தறாங்க.’’

கெரகம் சரியில்லே. அதுக்குப் பரிகார பூஜை பண்ணிடலாங்கறியா?

‘‘வீரப்பன் செத்ததுல இருந்து எனக்கு கெரக காலமே சரியில்லை. எனக்கு நேரங்காலமும் நல்லா இல்லை. அதுக்காகத்தான் பரிகார பூஜை பண்ணணும்னு கேக்குறேன்.’’

வீரப்பன் செத்த இடத்திலேயே பூஜையை வச்சுக்கலாமா?

‘‘ஆமா... அங்க வெச்சே பூஜையைச் செய்யலாம்.’’

பூஜையைச் செய்யணுமின்னா அதுல வீரப்பனோட துப்பாக்கிங்களை வைக்கணுமே... அதை நீ கொண்டு வர்றியா?

‘‘நிச்சயமாக் கொண்டு வர்றேன்’’ என்று பழனி கூறி முடிக்க, ‘‘அப்படின்னா எம் மேல நம்பிக்கை வச்சு நீ சாமியைக் கும்பிடு. மத்ததை நான் பார்த்துக்கறேன்’’ என்று அவனைத் தேற்றி அனுப்பியிருக்கிறார் பூசாரி மணி.

வீரப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளிடமிருந்து துப்பாக்கிகளை வைத்துப் பூஜை செய்தால்தான் அது எஃபக்டிவாக இருக்கும் என்று பூசாரி மணி சொன்னதற்கு, முதலில் பழனி ஒப்புக் கொண்டிருக்கிறான். பூஜையில் வைக்கக் கொண்டு வரப்படும் அந்தத் துப்பாக்கிகளை எப்படியேனும் அந்த இடத்திலிருந்து கைப்பற்றி, அதைக் கோர்ட்டில் ஒப்படைக்க முத்துலட்சுமி திட்டம் போட்டிருந்திருக்கிறார். இந்தத் திட்டம் தெரிந்தோ என்னவோ பூஜைக்கு எனக் குறிக்கப்பட்ட நாளில் பழனி வரவேயில்லை. அன்றிலிருந்தே ஆள் தலைமறைவாகி விட்டானாம். பழனியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த வீரப்பனின் துப்பாக்கி மற்றும் ஐந்து பேட்டரிகளைப் போட்டுப் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு டார்ச்லைட் ஒன்றையும் தானே நேரில் பார்த்ததாக பூசாரி மணி, முத்துலட்சுமியிடம் தெரிவித்திருக்கிறார். அந்த டார்ச்லைட் சேத்துக்குளி கோவிந்தனுடையதாம்.

தன்னிடம் தரப்பட்ட விஷத்தை வீரப்பனுக்கு வைக்க மறுத்து, மரப் பொந்தில் தூக்கியெறிந்த அம்மாசி என்ற நபரைப் பற்றி, விஷம் வைத்த பழனி மூலமாகத்தான் பூசாரி மணிக்குத் தெரிய வந்திருக்கிறது. அம்மாசியைத் தேடிப் பிடித்து அந்த விவரங்கள் உண்மைதான் என்று உறுதி செய்து கொண்ட மணி, அவனை முத்துலட்சுமியிடம் அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அம்மாசியும் நடந்த உண்மைகளை முத்துலட்சுமியிடம் சொல்ல, மறைவாக வைக்கப்பட்டிருந்த வீடியோ காமிரா மூலம் அது அப்படியே படமாக்கப்பட்டிருக்கிறது. பின்பு டி.வி.டி.க்களாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றைத்தான் தன்னுடைய புகாருக்கான முக்கியமான ஆதாரமாக நீதிமன்றத்தில் தந்திருக்கிறார் முத்துலட்சுமி.

முதலாவது டி.வி.டி.யில், அம்மாசியை பூசாரி மணி ஒரு வீட்டிற்குள்ளாக அழைத்து வருகிறார். அந்த அறையிலிருந்து வழக்குரைஞர் அரிபாபு, அவர்களிடம் பேச்சை ஆரம்பிக்கிறார். உரையாடல் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அறைக்குள்ளிருந்த இன்னொரு மின்சார விளக்கை அரிபாபு போட, இருட்டாக இருந்த வீடியோ ஓரளவு வெளிச்சமாகத் தெரிகிறது. சில நிமிடங்கள் கழித்து அந்த அறைக்கு வருகிறார் முத்துலட்சுமி. இவர்கள் நால்வருக்குமிடையே நடக்கும் கலந்துரையாடலின்போது காட்டுக்குள்ளே நடந்த விவகாரங்கள் அம்மாசியால் அம்பலமாக்கப்படுகின்றன.

இதற்கு அடுத்தாற்போல சில நாள் கழித்து, அவர்களிடையே மீண்டும் ஒரு சந்திப்பு நடந்திருக்கிறது. இந்த முறை அம்மாசி, பூசாரி மணி ஆகியோருடன் குப்பன், அய்யந்துரை என்று இரண்டு புதிய நபர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவருமே பழனியின் அண்டை வீட்டுக்காரர்கள். வீரப்பன் இறந்த விவகாரம் பற்றித் தங்களுக்குத் தெரிந்ததாக அவர்கள் கூறும் தகவல்கள் எல்லாமே அம்மாசியும், பழனியும் சொன்ன தகவல்களை நினைவுபடுத்துவதாகவே இருக்கின்றன. இவை இரண்டாவது டி.வி.டி.யில் பதியப்பட்டிருக்கின்றன.

டி.வி.டி.யில் பதியப்பட்டு கோர்ட்டில் தரப்பட்டிருக்கும் அம்மாசியின் உரையாடலிலிருந்து முக்கியமான சில பகுதிகள்....

‘‘எனக்குத் தெரிந்து மாத்துப்பரி கல்லட்டைப் பகுதியில் வீரப்பன் ஒரு ஆண்டு காலமாகத் தங்கியிருந்தார். காட்டிலிருந்த வீரப்பனுக்கு மாத்துப்பரி பழனி, அவனோட அத்தை மகனான மயில்சாமி ஆகியோர் மூலமாகத்தான் சாப்பாடு போய்க்கிட்டு இருந்தது. அந்தச் சமயத்துல, அவங்களோட நானும் சில முறை போயிருக்கேன். அரிசி, பருப்பு வகைகளை நான் வாங்கி வந்து தருவேன். பழனியின் வீட்டிலிருந்தே சாப்பாடு சமைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டு வந்தது.

இதை, எங்களை ஃபாலோ பண்ணி தெரிஞ்சிகிட்ட அதிரடிப்படை எஸ்.ஐ..யான ஸ்டீபன்ங்கிறவர் என்கிட்ட பாலிதீன் பையில கட்டியிருந்த விஷ மருந்தைத் தந்து, ‘உங்க ஏரியாவுக்கு வீரப்பன் வர்றப்போ அவனுக்கு சாப்பாட்டுல இதைக் கலந்து தந்திரு’ன்னு சொன்னார். இது வீரப்பன் சாகறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாலேயே நடந்தது. என்கிட்ட ஸ்டீபன் எஸ்.ஐ. தந்த அந்த மருந்தை வீரப்பனுக்குத் தர எனக்குத் தைரியமில்லை. அதனால, நான் அதை ஈச்ச மரப் பொந்துல தூக்கி வீசிட்டேன். மாத்துப்பரி பழனிகிட்டயும் இதேபோல மருந்தைத் தந்திருக்காங்கன்னு அப்புறமாத்தான் எனக்குத் தெரிய வந்தது.

நான் பழனிகிட்ட ‘அந்த மாதிரி எதுவும் பண்ண வேண்டாம்’னு சொன்னேன். இதை அவன் அதிரடிப்படைக்காரங்ககிட்ட சொல்லிட்டான். என்னால விஷம் வைக்கிற திட்டம் கெட்டுறக்கூடாதுங்கிற பயத்துல அதிரடிப்படை எஸ்.ஐ.க்களான கண்ணன், கந்தசாமி, ஸ்டீபன் இந்த மூணு பேருமாச் சேர்ந்து என்னை என் ஊருலேயிருந்து தூக்கிட்டுப் போய் ஒகேனக்கல் பக்கத்துல மறைவா வச்சிட்டாங்க. வீரப்பன் செத்த அன்னிக்குத்தான் என்னை வெளியே போகவிட்டாங்க.

சம்பவம் நடக்கறதுக்கு ரெண்டு நாளைக்கு முன்னே இருந்து, காட்டுக்குள்ளிருந்த வீரப்பனுக்கு வேணுமின்னே சாப்பாட்டை பழனி எடுத்துட்டுப் போகலை. போலீஸ் கெடுபிடியா இருக்கிறதால வர முடியலேன்னு தகவல் மட்டும் அனுப்பியிருக்கான். சம்பவம் நடந்த அன்னிக்கு அதாவது, சனிக்கிழமை காலையில மாத்துப்பரி கல்லட்டைப் பகுதியைச் சேர்ந்த பழையூருகிட்ட, ஒரு மஞ்சக் காட்டுல இருந்த வீரப்பனை பழனியும், மயில்சாமியும் போய்ப் பார்த்திருக்காங்க.

‘சாப்பாடு கொண்டாந்தியா?’ன்னு கேட்ட வீரப்பன்கிட்ட, ‘சாப்பாடு தயாராகிக்கிட்டு இருக்கு. அது இப்ப வந்திரும். அதுக்கு முன்னால நீங்க குடிக்கிறதுக்குன்னு மோர் கொண்டாந்திருக்கேன். அதைக் குடிங்க. போலீஸ் வந்தாலும் வந்திரும். சீக்கிரமாக் குடிங்க’ன்னு அவசரப்படுத்தி மோரை அவங்க எல்லாருக்கும் ஊத்தித் தந்திருக்கான் பழனி. அந்த மோரில்தான் விஷம் கலக்கப்பட்டிருந்தது.

முதலில் சேதுமணி, அப்புறம் சந்திரகவுடா, அதுக்குப் பின்னால சேத்துக்குளி கோவிந்தன்னு மோரைக் குடிக்க, கடைசியாத்தான் வீரப்பன் குடிச்சிருக்கார். முதலில் குடிச்ச மூணுபேருமே தடுமாறித் தள்ளாடி கீழே விழ ஆரம்பிக்க, வீரப்பனும் தடுமாற ஆரம்பித்திருக்கார். ஏதோ விபரீதம் நடக்குதுன்னு நொடிக்கிற நேரத்தில புரிஞ்சிக்கிட்ட வீரப்பன், ‘துரோகம் செஞ்சிட்டியேடா பாவி. உன்னைக் குடும்பத்தோட அழிக்காம விடமாட்டேன்டா..’ என்று சொல்லியபடியே விழுந்து இறந்திருக்கிறார். சீராமலைக்கு வடக்கே, மாத்துப்பரி கல்லட்டைக்கு மேற்கே இருக்கிற ஒரு சமவெளிப் பகுதியிலதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கு.

கருங்கல்காடுங்கிற இடத்தில மறைவா பிணங்களை இழுத்துப் போட்டு செடி, கொடிகளால அதை மூடி மறைச்சு வச்சிட்டு, இந்தத் தகவலை பழனி தன்னோட மாமாவான மாத்துப்பரி மாதையன், தம்பி அய்யண்ணன் மற்றும் அர்ச்சுனன் ஆகிய மூணு பேருக்கும் முதலில் சொல்லியிருக்கான். அவங்க மூலமா அதிரடிப்படை அதிகாரிகளுக்குத் தகவல் போனது. வெள்ளிக்கிழமை சாயங்காலமா இருட்டுற வேளையில, தமிழக அதிரடிப்படை அதிகாரிகள் வீரப்பன் செத்துக் கிடந்த இடத்துக்கு வந்திருக்காங்க. அங்கே வச்சு ஏதேதோ ஏற்பாடெல்லாம் செஞ்சு வீடியோ படமெல்லாம் எடுத்திருக்காங்க.

சம்பவம் நடந்தது முழுக்கமுழுக்க கர்நாடகா எல்லைக்குள்ள இருக்கிற பகுதி. அதனால, இந்த விஷயம் கர்நாடகா போலீஸுக்குத் தெரிஞ்சிடக் கூடாதுன்னு ரொம்ப எச்சரிக்கையா தமிழ்நாட்டு அதிரடிப்படைக்காரங்க இருந்தாங்க. ஞாயிற்றுக்கிழமை சாயங்காலமா நாலு பரிசல்களைக் கொண்டாந்து அதில் பிணங்களைத் தூக்கிப் போட்டு அடிப்பாலாறு வழியா தமிழ்நாட்டு எல்லையான சின்னக்காவல் திட்டுக்குக் கொண்டாந்திருக்காங்க. அங்கே தயாரா இருந்த ஆம்புலன்ஸ் வண்டியில பிரேதங்களை எடுத்துட்டுப் போயிருக்காங்க. பிணங்களைச் சுமந்து வந்த நாலு பரிசல்களையும் அப்புறமா தீ வைச்சுக் கொளுத்திட்டாங்க.

2004_ம் வருசம் அக்டோபர் மாதம் 17_ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்டீபன்ங்கிற எஸ்.ஐ. என்கிட்ட ‘வீரப்பனைச் சுட்டுக் கொன்னு போட்டோம்’னார். அதை நான் நம்பலை. ‘என்கூட வர்றியா. உனக்கு நான் வீரப்பன் பிணத்தைக் காட்டறேன். பத்தாயிரம் ரூபாய் பந்தயம் கட்டுறியா?’ன்னு கேட்டார். அவ்வளவு பணம் எங்கிட்ட இல்லைன்னதும், ‘சரி நூறு ரூபாயாவது கட்டு’ன்னு சொன்னார். ஆனா, அதுக்கு அடுத்த நாள் ராத்திரியிலதான் வீரப்பனை போலீஸ் சுட்டுக் கொன்னுதுன்னு பேப்பர்ல போட்டாங்க. அப்புறமாத்தான் வீரப்பனை மருந்து வச்சுக் கொன்னுட்டு, அதை வேற மாதிரி சொல்றாங்கன்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன். எனக்குத் தெரிஞ்சு நடந்தது இதுதான்’’ என்று சொல்லியிருக்கிறான் அம்மாசி.

அம்மாசியும், பூசாரி மணியும் நீதிமன்றத்தில் உண்மைகளைச் சொல்வதாக ஒப்புக் கொண்டபிறகு பழனியை ஒப்புக் கொள்ளவைக்க முயன்றார்கள். ஆனால் முடியவில்லையாம்.

இதனால் அம்மாசி, பூசாரி மணி இவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு முத்துலட்சுமி, வழக்குரைஞர் அரிபாபு ஆகியோர் சென்னைக்குக் கடந்த வாரம் வந்திருக்கிறார்கள். சென்னைக்கு வந்த மாத்திரத்திலிருந்தே மிரட்சியுடன் காணப்பட்ட இருவரும் அங்கே மனம் மாறி விட்டிருக்கின்றனர். ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்து அவர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.

உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கரசுப்புவும், விஜயேந்திரனும் தற்போது கிடைத்திருக்கும் ஆதாரங்களை, சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 30_ம் தேதி தாக்கல் செய்தனர். அவர்களிடம் பேசினோம். ‘‘மனுதாரர் முத்துலட்சுமி முக்கிய சாட்சிகளான மணி, அம்மாசி, வீரப்பனுக்கு விஷம் வைத்தவர்களான பழனி, அய்யண்ணன் (பழனியின் அண்ணன்), மாதையன், மயில்சாமி, மல்லிகா, முனியன், இன்னொரு வீரப்பன் ஆகிய அனைவரின் உயிருக்கும் அதிரடிப்படையால் ஆபத்து நேரும் வாய்ப்பிருக்கிறது. எனவே, அவர்களுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும். அதிரடிப்படைத் தலைவர் விஜயகுமார் மற்றும் பிற காவல் அதிகாரிகள், கொல்லப்பட்டவர்களின் உடலைப் பிரேத பரிசோதனை செய்த டாக்டர் வள்ளிநாயகம் உள்ளிட்ட, மூன்று டாக்டர்கள் ஆகியோர் மீது துறை ரீதியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நடக்காத மோதலுக்காக பரிசுத் தொகையைப் பெற்றிருக்கும் அதிரடிப்படையினரிடமிருந்து அதைத் திரும்பப் பெற வேண்டும். அதிரடிப்படையினரால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் கிராம மக்களுக்கு நஷ்ட ஈடாக அந்தத் தொகையினைப் பிரித்து வழங்க வேண்டும். இத்துடன் வீரப்பன் கொல்லப்பட்டதற்கான சி.பி.ஐ. விசாரணையையும் வீரப்பனின் பிரேதம் மறுபரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் மீண்டும் நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம்’’ என்றனர் அவர்கள்...

நன்றி குமுதம்

4மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Vaa.Manikandan

பாவம்ய்யா மனுஷன் செத்தாலும் விடமாட்டாங்க!

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அவர் பாவம் தான் அவரால் கொல்லப்பட்டவர்கள்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

எங்கே இருந்து ஐயா இதெல்லாம் உமக்கு கிடைக்கிறது?

இதெல்லாம் உண்மை தானா?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

அங்கேயுள்ள குமுதம் தை கிளிக் செய்யவும் .

 

Post a Comment

<< முகப்பு