அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மருது பாண்டியர்கள் 1

இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகில் உள்ள முக்குளம் என்ற கிராமத்தில் வாழ்ந்த உடையார்த் தேவர் என்ற மொக்க பழநியப்பன் என்பவருக்கும் அவரது மனைவி ஆனந்தாயி என்ற பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748ல் மகனாகப் பிறந்தவர் பெரியமருது பாண்டியர்.
ஐந்து ஆண்டுகள் கழிந்து 1753ல் சிறிய மருது பாண்டியர் பிறந்தார். பெரிய மருது பாண்டியர் வெள்ளை நிறத்துடன் இருந்ததால் வெள்ளை மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. பெரிய மருதுவைவிட உயரத்தில் சிறியவராக இருந்ததால் இளைய மருது சின்ன மருது பாண்டியர் என்ற பெயரும் உண்டு. மொக்க பழனியப்பர் சிறந்த பக்திமானாகவும் வீரராகவும் திகழ்ந்தார். இவர் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவர்களான பெரியமருதுவும் சின்ன மருதுவும் எதற்கும் அடங்காதவர்களாகவும் விளையாட்டில் விருப்பம் உள்ளவர்களாகவும் இருந்தனர் . தாயார் பொன்னாத்தாள் அவர்களுக்கு வீரர்களின் வரலாற்றை சொல்லி துணிவையும் ஏற்படுத்தினார். அவர்கள் தொல்லைகள் பெருகவே, அவற்றைத் தாங்கமுடியாத தாயார் மொக்கைப் பழநியப்பருடன் சேதுபதிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். அங்கும் அவர்களின் தொல்லைகள் தொடர்ந்தன.
இரவு வேளையில் கோட்டைக் கதவுகளை மூடி அவற்றிற்கு அணைவாக 5 அல்லது 6 பேர்கள் சேர்ந்து ஒரு பீரங்கியை குறுக்காக தள்ளி வைப்பது வழக்கம்.
ஒருநாள் இரவு சிறுவர்களான பெரியமருதுவும் சின்னமருதுவும் அந்த பீரங்கியைத் தள்ளிவைத்து கோட்டைக் கதவுகளை திறந்து வைத்துவிட்டனர். யார் இதைச் செய்தது என்று அறியாத காவலர்கள் மறுநாள் இரவு கதவுகளை அடைத்துவிட்டு மறைந்திருந்து காத்துக்கிடந்தனர். நடு இரவில் மருது சகோதரர்கள் அந்தபீரங்கியைத் தள்ளிக் கதவுகளைத் திறந்தனர். மறைந்திருந்த காவலர்கள் அவர்களைப் பிடித்த பொழுது அவர்கள் தளபதி மொக்க பழநியப்பரின் மைந்தர்கள் என்றறிருந்து செய்வதறியாது திகைத்தனர். மொக்க பழநியப்பர் வெளியூர் சென்றிருந்ததால் காவலர்கள் அரசரின் கவனத்திற்கு அந்த நிகழ்ச்சியைக் கொண்டு சென்றனர். பயந்தனர். எனினும் சேதுபதி அரசர் சிறுவர்களின் பலத்தையும், புத்திசாலித்தனத்தையும், அஞ்சாமையையும் கண்டு வியந்தார், மொக்க பழநியப்பர் ஊருக்கு திரும்பிய பொழுது, அந்த செய்திக் கேட்டு என்ன செய்வது என்று திகைத்திருந்தார். அரசர் அழைக்கவே, தளபதி அவரைச் சந்தித்தார். சிறுவர்களின் வீரத்தை மெச்சி புகழ்ந்ததோடு, அவர்களுக்கு சூரக்கோட்டையில் சிறந்த போர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தார். தந்தையின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பயிற்சிக்குப் பின் அவர்களை அரண்மனைக் காவல் பணியில் அரசர் அமர்த்தினார்.
மருது பாண்டியர்கள் சிவகங்கை சீமைக்கு வந்த விதம்
ஒரு நாள் அரசர் விசயரகுநாத கிழவன் சேதுபதி வேட்டைக்கு சென்றுவிட்டு ஆறுமுகக் கோட்டையில் தங்கி இருந்தார். அப்பொழுது சிவகங்கைச் சீமையின் அரசரும் தனது மருமகன் முத்து வடுகநாதத் வேரும், அரசி வேலுநாட்சியாரும் அங்கு வந்தனர். தமது அரசியல் அமைச்சரான தாண்டவராய பிள்ளைக்கும், தளபதியான சுப்பிரமணியத் தேவருக்கும் வயதாகி விட்டதாகவும் , அவர்களுக்குப் பின்பு நாட்டைத் திறமையுடன் ஆளத் தகுதிவாய்ந்த இளவல்களை சேது நாட்டிலிருந்து அனுப்பினால் தக்க பயிற்சி கொடுத்து நியமிக்கலாம் என்று அரசர் முத்துவடுகநாத தேவர் கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, அனைத்துத் தகுதிகளையும் பெற்றுத் தனது மதிப்பிற்குப் பாத்திரமாகத் திகழ்ந்த மருதுபாண்டியர் சகோதர்களை அனுப்பலாமென்று விசய இரகுநாத அரசனின் தளபதி மொக்க பழனியப்பனிடம் தமது விருப்பத்தைச் சொன்னார். அவரும் அவர்களைச் சிவகங்கை அரசரிடம் ஒப்படைத்து அழைத்து செல்லுமாறு கூறினார். இளவல்களைக் கண்ணுற்ற முத்துவடுக நாதரும் வேலு நாட்சியாரும் சிறிது ஐயத்துடன் அவர்களை சிவகங்கைக்கு அழைத்து வந்தனர். இது 1761 ம் ஆண்டில் நடந்தது.
பசும் பொன் 30 வது அண்டுமலரிலிருந்து
தொடரும் . . . .

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு