அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

நக்ஸலைட் ஊடுருவல்

ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் நக்ஸல் அமைப்புகளுக்குத் தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. நக்ஸலைட்டுகள், தமிழகத்தில் ஊடுருவி விடாமல் இருக்கவே, இந்த நடவடிக்கை என்கிறார்கள், போலீஸார்.

தமிழகத்தில் அந்த அமைப்புகளுக்கு ஏற்கெனவே தடை போடப்பட்டிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எந்த அளவுக்கு அவசியமானவை என்று அறிய காவல்துறை அதிகாரியிடம் பேசினோம்.

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் ஆந்திர நக்ஸல் அமைப்பினர், தமிழகத்தில் ஊடுருவுவதாகவே தெரியும். ஆனால், அது சாத்தியம் இல்லை’’ என்கிறார் ஓர் அதிகாரி.

‘‘ஆந்திர, கர்நாடக நக்ஸல்களுக்கு முக்கியப் பிரச்னையே மொழிதான். அதற்குமேல் பிரதான சமாசாரம் ஒன்று உள்ளது. அது நம்பகத்தன்மை. நம்ம ஊரில் இருக்கிற குட்டி, குட்டி அமைப்பினரை அவர்கள் நயாபைசா அளவிற்கும் நம்புவது கிடையாது. பயிற்சி, ஆயுதம், பொருளாதாரம் (பணம்) போன்ற எதை எடுத்தாலும் தமிழக அமைப்புகள் அதலபாதாளத்தில் உள்ளனர். ஆந்திர நக்ஸலைட்டுகள் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளையும், ஏவுகணைகள், ரேடார் போன்ற சர்வபலத்துடனும், இவற்றிற்கெல்லாம் மிஞ்சி கோடிக்கணக்கான பணத்தையும் வைத்திருக்கின்றனர்.

ஆனால், இங்குள்ள அமைப்பினர் அன்றாடங் காய்ச்சிகளாக, வழிப்பறி போன்றவற்றைச் செய்துகொண்டு சிம்னி விளக்கு குப்பியில் வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கே இருக்கின்றனர்’’ என்றார், அவர்.

‘‘ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள வேலூர், பேர்ணாம்பட், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி போன்ற அனைத்துப் பகுதிகள் வழியாகவும் நக்ஸல் அமைப்புகள் ஓரளவுக்கு தருமபுரிக்குச் சென்று விடலாம்.

அதுவும் அவ்வளவு சுலபமல்ல. இந்தப் பகுதிகளின் மையத்திலிருக்கும் திருப்பத்தூரில், கியூபிராஞ்ச் அலுவலகம் ஒன்று இதையெல்லாம் கண்காணிக்கச் செயல்படுகிறது.

இவர்களுடைய நெட் ஒர்க் நீண்ட நெடுநாள் பழையது. எங்கும் ஊடுருவியுள்ளது என்பதால், எது நடந்தாலும் அறிந்துகொள்ளும் அளவுக்கு ஸோர்ஸ்களை அவர்கள் வைத்திருக்கின்றனர்.

எனவே, தமிழகத்தினுள் ஊடுருவ ஆந்திர நக்ஸல்கள் ஒருபோதும் முயன்றது கிடையாது. அது சாத்தியமும் இல்லை’’ என்கிறார் ஓய்வுபெற்ற அதிகாரி.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம்தான் தமிழக எல்லையோரம் இருக்கிறது.

இம்மாவட்டத்தில்தான் திருப்பதியும், சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியும் உள்ளன.

இந்த மாவட்டத்திலிருந்து ஐதராபாத் 614 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதையும் தாண்டித்தான் ஸ்ட்ராங்கான ஆந்திர நக்ஸல் அமைப்புகள் உள்ளன.

இவைகளுக்கு எடுபிடி வேலைகளைச் செய்ய மட்டும் சித்தூர் மாவட்ட ஸ்ரீ காளஹஸ்தியிலும் குப்பம் பகுதியிலும் குறைந்த எண்ணிக்கையில் குழுக்கள் உள்ளனவாம்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இப்பகுதி குழுக்கள், சென்னை துறைமுகப் பகுதியில் தாங்கள் சில வேலைகளை வைத்துக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்கள்.

எல்.டி.டி.ஈ.யிடமிருந்து ஆயுதங்கள் ரகசியமாக இந்த துறைமுகத்துக்கு வருகின்றன. அதை இறக்குமதி செய்து நக்ஸல் அமைப்பினருக்கு இவர்கள்தான் அனுப்புகிறார்கள் எனத் தகவல் பரவியதையடுத்து, இவர்களின் செயல்பாடுகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிட்டனவாம்.

இப்படியிருக்க, 600 கிலோ மீட்டர் தூரத்துக்கப்பால் இருந்து ஓடிவந்து தமிழகத்தினுள் ஊடுருவுவதாகக் கூறுவது நம்ப முடியாத சமாசாரம் என்றே கருதப்படுகிறது.

நேபாளம் முதல் தமிழகத்தின் தருமபுரி வரை நாற்பதாயிரம் நக்ஸலைட்டுகள் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால் இவற்றின் பலம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.

ஆந்திராவில் மாநில முதல்வருக்கே சவால் விடும் அளவுக்கு நக்ஸல்கள் வளர்ந்துள்ளனர்.

சமீபத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை நக்ஸல்கள் சுட்டுத் தள்ளிய பிறகு, அதற்குப் பதிலடியாக அரசு தரப்பு, ஜனசக்தி என்கிற அமைப்பின் முக்கியத் தலைவரான சாகர் உட்பட பலரைப் பிடித்துவிட்டது. இந்த வேட்டையில் முக்கிய நக்ஸல் தலைவர்களில் ஒருவரான அமர் என்பவர் தப்பிவிட்டார்.

தப்பிச் சென்ற அமர், சாதாரண லீடர் இல்லை என்பது அரசு தரப்புக்குத் தெரியும். அவர் கரீம் நகர் மாவட்டத்தில் ஊடுருவியதே சி.எம்.முக்கு வைத்த குறியை நிறைவேற்றத்தான் என்று அம்மாநில உளவுத்துறை எச்சரிக்க, முதல்வர் ராஜசேகர ரெட்டிக்குக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு, தேவாரம் தருமபுரியில் நக்ஸல்களை வேட்டையாடினார். அதன்பிறகு இங்கே எந்தச் சலனமும் பெரிதாக இல்லை. இடையே 2002_ல் ஊத்தங்கரை பகுதியில் சிவா என்பவரைச் சுட்டுக் கொன்ற போலீஸ், 24 பேரை கைதுசெய்து அவர்களை நக்ஸல்பாரிகள் என்று குற்றம் சுமத்தினர். அவர்கள் நக்ஸலைட்டுகள் இல்லை என்று தற்போது வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதையடுத்து சமீபத்தில் அங்கே சிம்னி விளக்கு வெடிகுண்டுகள் பிடிபட்டதுதான் பெரிய செய்தி. இதெல்லாம் நக்ஸல்கள் அமைப்பு இங்கே பலம் வாய்ந்தவையாக ஆக்டிவ்வாக இல்லை என்பதையே காட்டுவதாகக் கருதுகிறார்கள்.

‘‘ஆந்திராவை எடுத்துக் கொண்டால் நக்ஸல் அமைப்புகள் எல்லாத் துறையிலும் ஊடுருவி உள்ளார்கள். மீடியா, அரசியல், போலீஸ் என பல துறையிலும் உள்ளதால் இவர்களை அடக்க முயலும், அரசு நடவடிக்கைகள் முடங்கிப்போகின்றன’’ என்கிறார், நம்மிடம் பேசிய ஓர் அதிகாரி.

‘‘இந்த இயக்கங்களில் ஈடுபாட்டுடன் இருந்த பலர், அவற்றை விட்டுவிட்டு திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் பொருளாதார நிலையும் உயர்ந்துகொண்டே வருவதால், நக்ஸல்கள் அமைப்பு இங்கே வளருவது சிரமம்தான். இருந்தாலும் தமிழகக் காவல்துறையினர் விழிப்புடன் இருப்பதற்குக் காரணம், கொஞ்சம் அயர்ந்தாலும் இங்கே ஆந்திரா போல நக்ஸல் அமைப்புகள் பெருகிவிடக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வுதான்’’ என்கிறார், அந்த அதிகாரி.
நன்றி குமுதம்

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு