அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

விஜயகாந் பேட்டி (குமுதம்)

தொப்புளில் பம்பரம் விட்டவர்’ என்றெல்லாம், திருமாவளவன் உங்களை விமர்சனம் செய்திருக்கிறாரே?

‘‘அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டு என் நேரத்தை வீணடிக்கத் தயாராக இல்லை.

எனது அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு, எனது கேள்விகளுக்கு, அவர் பதில் சொல்லத் தயாராக இருப்பாரா என்று பார்க்கலாம்.

இப்போது, கலைஞனான என்னை, சிலர் அரசியல்வாதியாக இருந்துகொண்டு, விமர்சனம் செய்வதற்கெல்லாம் கோபப்பட்டால், நான் அரசியல் வாழ்விற்குத் தகுதியில்லாதவனாகி விடுவேன். பக்குவம் அடைந்த என் பாதையும், பார்வையும் தெளிவாக இருக்கிறது. என்னை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம். அது முடியவும் முடியாது.’’
கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவெடுத்து விட்டீர்களா?

‘‘நிஜமாகவே இன்னும் பெயர் என்னவென்று தீர்மானிக்கவில்லை. மக்கள் மனதில் பதியும் விதமான பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருக்கிறேன். மாநாட்டு மேடையேறிப் பேச ஆரம்பிக்கும் வரை, யோசிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.’’

மாநாட்டில் என்ன பேசுவது என்றாவது தீர்மானித்து விட்டீர்களா?

‘‘உண்மையைச் சொல்லப் போனால், இது பற்றியும் இன்னும் யோசிக்கவில்லை. ஆனால், நாடு முழுவதுமிருந்து வந்து கூடும் தொண்டர்கள் மத்தியில், இரண்டு மணி நேரம் பேசுவதற்குரிய விஷயத்தையெல்லாம், அசை போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். என்ன மாதிரியான சமாசாரங்களைப் பேசப் போகிறேன் என்று இப்போதே சொன்னால் ‘கிக்’ போய்விடும்.’’

இன்றைய முன்னணித் தலைவர்கள் மாதிரி, உங்களுக்கான மேடைப்பேச்சை எழுதித் தருவதற்கென்று, யாரையாவது நியமித்துள்ளீர்களா?

‘‘இதுவரை யாரையும் அப்படி நியமிக்கவில்லை. நாளாவட்டத்தில், அதற்குத் தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு மக்களை நோக்கி, மக்களின் பிரச்னையை, மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் பேசுவதற்கு, எனக்கே தெரியும். காரணம், நானும் இந்த மக்களில் ஒருவன்தானே!’’

யாரிடமும் நன்கொடை வாங்காமல், முதல் மாநாட்டை நடத்துகிறீர்கள். இந்தச் செலவுகளுக்கான கணக்கு வழக்குகளைப் பராமரித்து வருகிறீர்களா?

‘‘ஒவ்வொரு பைசாவிற்கும் உண்மையான கணக்கெழுதி வருகிறேன். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எனது கணக்கு விவரங்களை ஆய்வு செய்யலாம். எனது சொந்த உழைப்பின் பணம் மட்டுமின்றி, என் தொண்டர்களின் பங்களிப்பும் இடம் பெற்றிருப்பதால், நாளை ஏதாவது ஒரு குழப்பமோ, கேள்வியோ வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.’’

முதல் மாநாட்டை யாரிடமும் நன்கொடை வாங்காமல் நடத்துவது போல, தொடர்ந்து நன்கொடை வாங்காமல், கட்சியை நடத்த முடியும் என்று நம்புகிறீர்களா? யாராவது விழா மேடையில் ஏறி, டொனேஷன் கொடுத்தால் வாங்கிக் கொள்வீர்களா?’’

‘‘அப்படிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன். ஆனாலும், அது நடக்காது என்று நம்புகிறேன். அதற்கான தேவையுமில்லை. இதுவரை, நானோ எனது மன்றத்து ஆட்களோ, ஒரு புக்கை அச்சடித்து வசூல் பண்ணியதாக யாராவது சொல்ல முடியுமா? என்னைப் போலவே என் மன்றத்தாரும் சொந்தச் செலவைச் செய்து, சொந்த உழைப்பைக் கொடுத்து வருகிறார்கள்.

பழைய அரசியல்வாதிகளைப்போல நானில்லை என்று நிரூபிக்கத்தான் பாடுபட்டு வருகிறேன். யாருடனும் என்னை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். காசு கொடுத்தால்தான் கூட்டம் வரும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? என்னைப் பற்றியும், என் மன்றத் தொண்டர்களின் செயல்பாடுகளைப் பற்றியும் நானே பெருமையாகச் சொல்லிக் கொள்ளக்கூடாதுதான். என்றாலும், என் சொல்லை ‘லட்சுமணன் கோடு’ போல பாவித்து நடந்து கொள்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை, ஆசையை, எதிர்காலத்தை வளப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் யோசித்துச் செயல்பட்டு வருகிறேன்.

வருமானம் பண்ணுவதற்கு, எனக்கு அரசியல் தேவையில்லை. அதுதான் இலக்கு என்றால், இதுநாள் வரை நான், இந்தக் கலைத்துறையின் மூலம் சேர்த்த வருமானத்தைப் பாதுகாத்தாலே போதும். மக்களிடம் கற்காலம் பற்றிப் பேசவேண்டும் என்றோ, அவர்களிடம் ‘பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஆண்ட கதை’யைச் சொல்லி குழப்ப வேண்டும் என்றோ, நான் திட்டமிடவில்லை. உள்ளதை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு நல்லதைச் செய்ய, என்னையே இழக்கத் தயாராகி வருகிறேன்.’’

மீண்டும் கேட்கிறோம்... மாநாட்டில் பேசப் போகும் உரையின் ஹைலைட் என்னவென்று ரகசியமாகவாவது சொல்லுங்களேன்...

‘‘ஐயய்யோ, சத்தியமா நான் எதையும் திட்டமிட்டு வந்து பேசப் போவதில்லை. பல விஷயங்களை யோசிச்சிக் கிட்டிருக்கேன். மாநாட்டுக்கு முதல்நாள் வரையில் மக்களைப் பாதித்த, மக்களில் ஒருவனான என்னைப் பாதித்த, விஷயங்கள் பற்றித்தான் பேசப் போகிறேன்.

அத்துடன், என்னை அரசியலுக்கு இழுத்து வந்த சூழ்நிலை பற்றியும் தெரிவிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில், என் சொத்து ஒன்றை விற்று அரசியலுக்குச் செலவிடுவதை எழுதியிருந்த நாளிதழ் ஒன்று ‘சின்ன மீனைப் போட்டுத்தானே பெரிய மீனைப்பிடிக்க வேண்டும்’ என்று கமெண்ட் அடித்திருந்ததையும் சுட்டிக்காட்டி, அதற்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற யோசனையும் இருக்கிறது.

எந்தச் சின்ன மீனைப் போட்டு அவர்கள், அந்தப் பத்திரிகையை விலைக்கு வாங்கினார்கள் என்பதையும், எந்தச் சின்ன மீன் தயவில் டி.வி நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தார்கள் என்பதையும், புட்டுப்புட்டு வைக்கலாமென்றும், சிந்தனை செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த மாநாட்டைப் பொறுத்தவரை, எனக்கொரு பாடமாகவே எடுத்துக்கொள்கிறேன். படிப்பினை என்றும் சொல்லலாம். படிப்படியாக முன்னேறுவதற்கான முதல் முயற்சியில், சில தவறுகளும் நடக்கலாம்.’’

சில ஊர்களில் உங்கள் மன்றத்தினருக்கும், பிற கட்சியினருக்கும் மோதல் ஏற்படுவதாகச் செய்திகள் வருகிறதே?

‘‘அது இயல்புதானே? எந்தக் கட்சியாவது பிரச்னையில் மாட்டாமல் வளர்ச்சி அடைந்திருக்கிறதா? காங்கிரஸ் இயக்கமும் சரி, இங்குள்ள திராவிட இயக்கங்களும் சரி, ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்களைத்தானே, நாங்களும் சந்திக்கிறோம்.

என்னையும், என் மன்றத்து ஆட்களையும் பொறுத்த வரையில் வம்புச் சண்டைக்குப் போக மாட்டோம். வந்த சண்டையையும் வளர்க்க மாட்டோம்.’’

மாநாடு முடிந்ததும் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப் பயணம் போகப் போவதாகவும் குறிப்பாக, முதலில் ராமநாதபுரத்தில் முகாமிட்டு, பிரசாரத்தை முடுக்கி விடப் போவதாகவும் செய்திகள் வருகிறதே?

‘‘இது மட்டுமா வருகிறது? இஷ்டத்துக்கும் வதந்திகளைப் பரப்புகிறார்கள். ஆனாலும், சூறாவளிச் சுற்றுப் பயணம் போகப் போவது உண்மைதான். தலைவர் எம்.ஜி.ஆர். பயணம் செய்த பிரசார வேனில், வரலாமென்றும் திட்டமிருக்கிறது.

மாநாடு முடிந்ததும் நிர்வாகிகள், அமைப்பாளர்கள் அடங்கிய மனுவுடன் டெல்லி சென்று, கட்சியைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பின், மக்களிடம் எடுபடக் கூடிய பிரசார யுக்தியைக் கையிலெடுக்க வேண்டும். பிறகுதான், பயணத்திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறேன். ராமநாதபுரம் என்பதில்லை, தமிழகம் முழுக்க, திரும்பத் திரும்ப பயணம் செய்து, லட்சிய வெறியுடன் வெற்றியைத் தேடி, பிரசாரம் செய்யத்தானே போகிறேன். அப்போது தெரியும், இந்த விஜயகாந்த் யாரென்று? அதுவரை பொறுத்திருங்கள்.

மேற்கண் பேட்டியில் அரசியல் முதிர்ச்சி தெரிகிறது எனைப்பொருத்தவரை இதையே கைகொண்டால் முன்னுக்கு வருவார் சில்லுவண்டு தனமாக கண்டவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இல்லாமல் தான் கொண்ட இலக்கையடையலாம். இவர்காட்டும் அண்ணாதுரையை தனிப்ட்ட முறையில் விமர்சித்து இருந்த போஸ்டருக்கு லைட்போடச்சொன்ன அண்ணாபோல். பெருந்தலைவரை தனிப்பட்டமுறையில் பேசியதற்கு அவர் அதைப்பற்றியே கண்டு கொள்ளாமல் இருந்ததைப்போல. இவரும் இருந்தால் முன்னுக்கு வரலாம் .

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு