அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

மாவீரன் பூலித்தேவன்

மாவீரன் பூலித்தேவன்


முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!!

சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வரலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.

மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.

இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் 'வெள்ளையனே வெளியேறு' என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழ் மறவன் பூலித்தேவனின் வரலாற்றுச் சுவடிகளில் சிலவற்றைக் இங்கு காண்போம்.


மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு பாளையங்களாக பிரிக்கப்பட்டதன் காரணம் பாண்டிய வமசத்தினர் மீண்டும் படைத் திரட்டி ஆட்சியைப் பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான். மதுரை, திருச்சி, கொங்குநாடு ஆகிய பகுதிகளில் தெலுங்கர்களையே நாயக்க மன்னன் நியமித்தான். திருநெவேலிச் சீமையில் தான் பெரும்பாலும் தமிழர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

மேலும் பாண்டிய வம்சத்தின் சிலரையும் பாளையக்காரர்களாக நியமித்து ஓரளவு வம்சாவழி எதிர்ப்பையும் அடக்கினான். மக்களிடத்து இவ்வாறு அதிகார வரம்பை பகிர்ந்தளித்ததால் மக்கள் எதிர்ப்பும் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நாயக்க அரசர்களின் ஆட்சி பலவீனமடைந்தது. இதனால் ஓரளவு சுய அதிகாரம் பெற்றிருந்த பளையக்காரர்கள் சிறிது சிறிதாக நாயக்கராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகினார்கள்.

இத்தனைய பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம் இந்திய விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள் பெயர் சித்திர புத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர்.

1-9-1715 ல் மாவீரன் பூலித்தேவர் இவர்களின் புதல்வராக தோன்றினார். இயற்பெயர், 'காத்தப்ப பூலித்தேவர்' என்பதாகும் 'பூலித்தேவர்' என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர் பூலித்தேவர் பிறந்த பொழுது அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். அதற்கு காரணம் பூலித்தேவரின் தந்தை சித்தி புத்திரத் தேவரின் நல்லாட்சிதான். அவருடைய ஆட்சி நல்ல முறையில் இருந்ததால்தான் மக்கள் அவர் மீது மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் தான் அவருக்கு பூலித்தேவர் பிறந்தபொழுது, மக்கள் மகிழ்வுற்றார்கள்.

சித்திரபுத்திரத் தேவர் எந்த பிரச்சினையும் இல்லாத அறுபத்து மூன்று ஆண்டுகள் மக்கள் போற்றும் வண்ணம் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாளைக்காரர்கள் மத்தயில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான் பூலித்தேவர் வளர்க்கப்பட்டார். சிறுவயதில் தாதிகளிடம் தன்னுடைய முன்னோர் பற்றிய வீர வரலாறுகளைக் கேட்டு மகிழ்ந்தார்.

மேலும் அந்த பிஞ்சு உள்ளத்தில் இறையுணர்வு பற்றிய தெளிவான விளக்கமும் பதிய வைக்கப்பட்டது. இவ்வாறு சிறுவயதில் ஊன்றப்பட்ட வீர உணர்ச்சியும், இறையுணர்வும் இறுதிவரை அவர் மனதில் இருந்தது. பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது.

சிறு வயதிலேயே முன்னோர் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டதால் தாமும் அவர்களைப்போல் பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உறுதி பூலித்தேவர் மனதில் இருந்தது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார் மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.

பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு.

இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர் பூலித்தேவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு மாவீரன் என்று கூறுமளவிற்கு அவருடைய உடல்வாகு இருந்தது. அவரைப் பற்றிய ஒரு நாட்டு பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். சோதியைப் போல முகமிருக்கும், திண் தோள்களை உடையவர், பல்லோ பளபளக்கும், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.

காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக் கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து அவரை அத்தனை இளம் வயதில் மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.

பின்னர் பூலித்வேருக்கு திருமண ஏற்டபாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான். கயல்கண்ணி நல்ல அழகி மட்டுமல்ல, வீர விளையாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர புத்திர தேவன் மற்றும் சிஞானப் பாண்டியன் என்று மூன்று நன்மக்கள் பிறந்தனர்.

பூலித்தேவருக்கு பதினெட்டு வயதிருக்கும் பொழுது கிழக்குப் பளையங்களைச் சேர்ந்த இலவந்தூர் , ஈராட்சி ஆகியவற்றிற்க்கு ஏற்பட்ட எல்லைத் தகராறைத் தீர்த்து வைக்கச் சென்றிருந்தார். அச்சமயம் சிவகிரிப் பாளையத்தான் வந்து கால் நடைகளைக் கவர்ந்து சென்றான். இந்தச் செய்தியை ஒற்றன் மூலம் பூலித்தேவருக்கு கூறப்பட்டது. உடனே அவர் தளபதியான சவனத்தேவருக்கு செய்தி அனுப்பி சிவகிரிப் பளைக்காரணை தடுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார்.

உடனே 150 வீர்களுடன்ட புறப்பட்டு நேராக சிவகிரிப் படைகளைத் தாக்குவதற்குச் சென்றார். பூலித்தேவர் போர்க்களத்தில் நுழைந்ததும் சிவகிரி படைகளின் எண்ணிக்கை கனிசமாக் குறைந்து கொண்டே வந்தது. இதனைக் கண்டு மேலும் பலர் களத்தை விட்டு ஓடினர். பூலித்தேவர் இறுதியில் வெற்றிகரமாக கால்டைகளை மீட்டுச் சென்றார். அக்காலப்போர் முறையின் முதற்கட்டமே வேற்று நாட்டின் கால்நடைகளைக் கவர்ந்து செல்வதுதான்.

போரில் வெற்றிபெற்றாலும் சவணத்தேவர் கூடலூர் வரை எதிரிகளை துரத்திச் சென்று போரிட்டார். அவர்களின் எல்லைக் கருகில் சென்று விட்டதால் எதிரிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது.

ஆனாலும் மனம் தளராது போராடி பல பேரை சவணத்தேவர் கொன்று குவித்தார். ஆனால் களத்தில் அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அதையும் பொருட்படுத்தாமல் அவர் போராடியதில், இறுதியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதற்கு விலையாக தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.

மாவீரன் பூலிதேவருக்குத்தான்ஒரு வீரனின் மதிப்பும் அவனுடைய இழப்பையும் உணரமுடியும் . அந்த வீரத்தளபதியின் நினைவாக பூலித்தேவர் வீரக்கல் நட்டு பெருமைப்படுத்தனார். பூலிதேவரின் இளம் வயது போர் வெற்றி அவருக்கு போர்க்கள நுணுக்கங்களில் மேலும் முதிர்ச்சியைக் கொடுத்தது.

மதுரையில் விசயரங்க சொக்கநாத நாயக்கர் (1704-1731) ஆட்சிக்காலத்தில் மதுரையின் வட பகுதியில் புலி ஒன்று பதுங்கியிருந்தது. அவ்வழியாகப் போவோரையிம், வருவோரையும் கொன்று கொண்டிருந்தது. எவராலும் அடக்க இயலாது போன அந்தப் புலியை அடக்கு வோருக்கு தகுந்த சனமானம் வழங்கப்படும் என்று அனைத்துப் பாளையக்காரர்களுக்கும் ஓலை அனுப்பபட்பட்டது.

இச்செய்தியை அறிந்தவுடன் பூலித்தேவர் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். சிங்கம் போல் நடை நடந்து வரும் காலடி ஓசையைக் கேட்டவுடன் புலியனது பூலித்தேவர் மீது பாய்ந்தது. முதல் பாய்ச்சலுக்கு புலியிடமிருந்து ஒதுங்கியவர், இரண்டாவதாக பாய்வதற்கு முன்னர் சட்டென்று புலியின் மீது பாய்ந்து அதன் பின்னங்கால்களைப் பிடித்து தலைக்கு மேல் தூக்கி ஓங்கி தரையில் அடித்தார் . பூலித்தேவரின் வலிமையைத் தாங்க இயலாத புலி இரத்தம் கக்கி இறந்தது. புலிவேட்டை என்கின்ற பெயரில் பல வீரர்கள் துணையோடும். துப்பாக்கிகளோடும் பூலித்வேர் செல்லவில்லை. தனியொருவராக நின்று வென்றார்.

இதனால் இவருடைய புகழ் தென்னகம் முழுவதும் பரவியது. மதுரை மன்னனும். வடக்காத்தான் பூலித்தேவன் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தான்.

பூலித்தேவர் சிறுவயது முதலே கடவுள் பக்தியுடையவராக இருந்தார். தாம் எவ்வளவுதான்வலிமையுடையவராக இருந்தாலும் அனைவருக்கும் மேல் ஒருவர் இருக்கின்றார் என்ற உணர்வுதான் அவரை சுயகட்டுப் பாட்டில் வைத்திருந்தது. இல்லை யென்றால் அவருக் கிருக்கும் ஆற்றலுக்கு அவர் மற்றவர்களைப் போல நாடு பிடிக்ககிளம்பியிருக்கக் கூடும்.

அவர் தன்னுடைய குல தெய்வமான உள்ளமுடையாரைத் தினமும் வணங்கி வந்தார். வேதியர்களைக் கொண்டு வேதம் முழங்கச் செய்து, தினந்தேறும் அன்னதானம் செய்து வந்தார், அதற்காக நிலங்களையும் மானியமாக மட்டுமே அரசராக இருந்தாலும் தன்னால் முடிந்தவரை பலவித கோயில்களுக்கு நற்பணி செய்து வந்தார்.

பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தாரே தவிர தமக்கோ தம் சந்ததியருக்கோ சேர்த்து வைத்து சுகபோகமாக வாழவேண்டும் என்று நினைத்த தில்லை. தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோயில் தவிர சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவ நல்லூர் அர்த் நாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது.

கோவில் பணிகள் தவர மற்ற பொதுப் பணிகளான நெடுந்தொலைவு பயணம் செய்பவர்களுக்கு இளைப்பாற ஆங்காங்கே மண்டபம் கட்டுதல், சத்திரம் அமைத்து உணவு வழங்குதல், ஆங்காங்கே நீர் நிலைகள் அமைத்தல், வெட்டவெளி பிரதேசங்களில் மரங்கள் நட்டு நந்தவனமாக்குவது, மற்றும் விளைச்சல்பெருக கால்வாய்கள் அமைத்துபாசன வசதி பெருக்குவது என்று மக்களின் தேவை அறிந்து மன்னர் பணி செய்தார். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அடிப்படை வசதிகளைச் செய்ய ஜனநாயக அரசு தட்டுத் தடுமாறும் நிலையில், பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்கையின்அரவணைப்பில், எந்த குறைகளும் இல்லாது வாழ்ந்த நிலையிலும் கூட, மேலும் மக்களுக்கு வசதி செய்துகொடுக்க வேண்டும் என்று நினைத்த மன்னருக்கு, இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கும் பொதுவுடமை சிந்தனைகள் சற்று அதிகமாகவே இருந்தது என்று தான் கூறவேண்டும்.

மன்னர் பூலித்வேருக்கு பொதுவுடைமை சிந்தனை மட்டுமல்ல, தொலைதூர நோக்கும் சற்று அதிகமாகத்தான் இருந்தது. பூலித்வேர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தகாலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்துஎன்பதை மன்னர் உணர்ந்தார்.

அதனால் அனைத்துப் பளையக் காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். இத்தகைய ஒரு கோணத்தில் இதுவரை சிந்திக் காத பிற மன்னர்களுக்கு, இந்தக் கருத்து புதியதாகவும் அதே சமயம் தவிர்க்க முடியாத தாகவும் இருந்தது.

ஆனால் நடைமுறையில் எத்தனை பேர் ஒத்துழைத்தனர் என்பது பிற்கால வரலாறு. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் நோக்கம், தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டும் அல்ல. தன் தாய்திருநாடு அன்னியர் வசம் சிக்கிவிக் கூடாது என்கின்ற தன்மான உணர்ச்சிதான். மேலும் அன்னியராட்சியில் குடிமக்களின் நலன் அவ்வளவாக போற்றப் படுவதில்லை.

பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.

ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோரு முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.

இத்கு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின்உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்லேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.

ற்காடு நவாபின் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் ஆசையினால் பின்னர் இந்திய நாட்டு மக்கள் இருநூறு வருடங்கள் துயரப்பட நேர்ந்தது. பாளையக் காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல்ஹெரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன்மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.

ஒவ்வொறு பாளையக்காரனும் சமாதானம் என்கிற பெயரில் கப்பம் கட்டினார்கள். இந்த நிலையில் கர்னல்ஹெரானும் மாபூஸ்கானும் தனியே பிரிந்து இரு திசைகளில் சென்று போரிட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மாபூஸ்கான் முதலில் போரிடச் சென்றது, நெற்கட்டான் செவ்வல் பாளையத்துக்காரரான பூலித்வேருடன். மாபூஸ்கான் போன சுவடு மறைவதற்குள் பூலித்வேரின் படைகாளல் விரட்டியடிக்கப்பட்டான்.

அதனால் மாபூஸ்கான், கர்னல்ஹெரானுக்குச் செய்தி அனுப்டபி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்வேரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இத்தனை இருந்தும் பூலித்வேரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட உண்டு பண்ணமுடியவில்லை. பல நாட்கள் ஆகியும் பலன் ஒன்றுமில்லை.

மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார். முதல் முதலாக வெடித்த சிப்பாய் கலகத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்வேர் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு அதில் வெற்றி பெற்றார். 1755- ஆம் ஆண்டு ஒலித் பூலித்தேவரின் முதல் சுதந்திரக் குரல் பின்னர் பலமுறை எதிரொலித்தது. 1772-ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வேலு நாச்சியார் தலைமையிலும், 1795- ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799-ஆம்ஆண்டு வீரபாண்டியகட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது சகோதரர் தலைமையிலும் எதிரொலித்தது.

பின்னர் 1806-ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய்க் கலகமாகவும், 1857-ஆம் ஆண்டு வடநாட்டு சிப்பாய்க்கலகமாகவும் வெடித்தது. பின்னர் அது நாடு தழுவிய போராட்டமாக உருப்பெற்றது. இவ்வாறு விட்டு விட்டு ஒலிகாமல் இந்த சுதந்திரக் குரல் ஒட்டுமொத்தமாக ஒரலித்திருக்குமேயானால் இந்திய நாடு அடிமைப் பட்டிருக்காது.

ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்வேர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள்என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.


தொடரும் . . . . . .



என்னார்


0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு