அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

இந்தி அறிவே காரணம்




1960களில் இந்தி எதிர்ப்பு என்றபெயரால் 2 தலைமுறை தமிழர்களை இந்தி படிக்கவிடாமல் செய்த கருணாநிதி இன்று 'தன் பேரன் தயாநிதி மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டதற்கு அவரது இந்தி அறிவே காரணம்' என்கிறார். இந்த கருணாநிதி வார்த்தைகளை வேத வாக்காக கொண்ட இளிச்ச வாய்த்தனத்தால், வட, மத்திய, கிழக்கு மாநிலங்களில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் இந்தி தெரியாமல் அனுபவிக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இது போதா தென்று இப்போதுபுதிதாகப் புறப்பட்டுள்ளார் ராமதாஸ். கருணாநிதி இந்திக்கு எதிரி என்றால். இவர் ஆங்கிலத்துக்கு எதிரி, இன்று உலகமயமாக்களில் ஆங்கிலம் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்பதால் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் கூட ஆங்கிலம் படிக்க ஆரம்பித்து விட்டன. ஆனால் தமமிழகத்தில் ஆங்கிலத்துக்கு மங்களம் பாட கிளம்பி விட்டார் ராமதாஸ்.

தமிழினத்தைக் காப்பதாகக் கூறி, தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும்என்று சொல்லும் ராமதாசின் பேத்திகள் பெயர் ஸங்கமித்ரா, ஸம்யுக்தா இவர்கள் படிப்பதோ ஆங்கிலப்பள்ளி. அந்தப் பள்ளியில் இரண்டாவது மொழி இந்தி. ஆனால் தமிழகத்தில் உள்ள ஏழைத் தமிழன் மட்டும் ஆங்கிலம் படித்து விடக்கூடாது. 5 ஆண்டுகள் அமைச்சராக இருக்கப்போகும் அன்புமணி, தனது குழந்தைகளை டில்லியில் தான் படிக்க வைக்க வேண்டுமா?.

இங்குதான் அவர் குடும்பத்தினர் இருக்கிறார்களே, இங்கேயே தமிழ்வழிக் கல்வி படிக்க அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டியதுதானே!

கருணாநிதி போல தனக்கும் தனதுகுடும்பத்துக்கும் ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம். இதை யாராவது அவரிடம் கேட்டால் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டி மிரட்டுகிறார். உள்ளும்புறமும் ஒரே மாதிரியாக செயல்பட முடியாத அரசியல்வாதிகள் இது போன்ற சிக்கலான பிரச்சனைகளில் வாயை மூடிக் கொண்டிருப்பதே உத்தமம்.

தங்கள் பிள்ளைகளுக்கு எத்தகைய கல்விளை அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே உண்டு. அதில் வரம்பு மீறி தலையிடும் அதிகாரம் எந்த அரசியல் வாதிக்கும் கிடையாது.

அத்தியவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து ஒரு நல்ல நிர்வாகத்தை ஆளுங்கட்சி கொடுக்க வேண்டும். தவறும்போது அதை தட்டிக் கேட்டு, சரியான பாதையில் ஆங்கட்சி செல்ல எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்டபு தரவேண்டும், எனட்பதற் காகத்தான் தேர்லில் மக்கள் ஓட்டுப்போடுகின்றனர். பொது மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் மூக்கை நுழைக்க இவர்களுக்கு யாரும் அதிகாரம் அளிக்க வில்லை.

கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த மொழி தமிழ். கருணாநி, ராமதாஸ் ஆகியோருக்கு முன்பும் நிலைத்து நின்றது.இவர்களுக்குப் பின்னரும் நிலைத்து நிற்கும் தகுதி வாய்ந்தது. மக்களை ஏமாற்றும் போலி அரசியல்வாதிகள் வந்து காப்பாற்றும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கவில்லை தமிழ் மொழி. மக்கள் உரிமைகளில் வரம்பு மீறி தலையிடுவதை இவரகள் தவிர்க்க வேண்டும்.


இந்த செய்தி 9-8-05 தினமலரில் சகோதரி -பிகதீஸ்பரி ராஜப்பன் கங்காதரபுரம், அறந்தாங்கி எழுதியிருந்தார் நன்றாக இருந்தது அன்று இந்தி என்ற மாயத்தோற்றத்தைக் காட்டி ஓட்டுகளை விலைக்கு வாங்கியது போல் ராமதாசும் முயல்கின்றார் வேறு ஒன்றம் இல்லை. நானும் ஏற்கவே எனத கருத்தையும் கூறியுள்ளேன்.

அன்று கருணாநி கேட்டார் ,"காங்கிரஸ் என்ன நேரு வீட்டு பரம்பரை சொத்தா" என்று இன்று ??





13மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger குழலி / Kuzhali

வணக்கம், எனக்கு இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்த காலக்கட்டத்தை சேர்ந்தவனில்லை, ஆனாலும் எமக்கு தெரிந்தவரை இந்தி மொழியை யாரும் படிக்க கூடாது என்று அறிவுறுத்தியமாதிரி தெரியவில்லை, அப்படி இந்தி மொழி படிக்க விருப்பமுள்ளவர்கள் எத்தனையோ மாணாக்கர்கள் ஹிந்தி பிரச்சார சபா வழியாகவும் இன்றும் படித்துக்கொண்டுள்ளனர், இதை யாரும் கையைப்பிடித்து தடுத்ததாக தெரியவில்லை எமக்கு.

இந்தியை ஒரு கட்டாய மொழிப்பாடமாக படிப்பது என்பது தான் இங்கு பிரச்சினையே, முதலில் கட்டாய மொழிப்பாடமாக ஆரம்பித்து பின் மொத்தமாக இந்தி என்னும் ஒட்டகம் கூடாரத்தினுள் புகுந்து விடும், இப்படித்தான் இன்று குசராத்தி, மற்றும் இன்ன பல கூடாரங்களில் இந்தி மொழி புகுந்து விட்டது.

//வட, மத்திய, கிழக்கு மாநிலங்களில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் இந்தி தெரியாமல் அனுபவிக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
//
ஒரே ஒரு மொழிப்பாடமாக ஆங்கிலம் படித்தவர்கள் எல்லாம் ஆங்கிலத்திலே புலமையோடு இருப்பதாகவும் நன்றாக ஆங்கிலம் பேசுபவர்களாகவும் இருக்கின்றனர்களா? மனதை தொட்டு சொல்லுங்கள், இல்லையே, ஒரே ஒரு மொழிப்பாடமென்ன, ஆங்கில வழியிலே படித்த எத்தனையோ மாணாக்கர்கள் 5 நிமிடம் ஆங்கிலத்தில் பேசத்திணறியதை நானே கண் கூடாக கண்டுள்ளேன்,அதே போல இந்தியை ஒரு மொழிப்பாடமாக படித்தால் அவர்கள் இந்தி பேசும் மாநிலங்களுக்கு செல்லும்போது அ,ஆ கற்றுக்கொள்ள தேவையில்லையே தவிர மீண்டும் அங்கு முதலிலிருந்து பேசி பழகும்போது தான் இந்தி பேசுமளவிற்கு வரும், அவ்வளவே. மேலும் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது எமக்கு தெரிந்தவரை வெறும் மொழியுணர்ச்சி மட்டுமல்ல, மேலாதிக்க எதிர்ப்பும் கூட, இந்தி மொழியை கட்டாய மொழிப்பாடமாக படிப்பது loose-win நிலமை, இப்படியே சீன நாட்டிற்கு போகும்போது மேன்டிரின் தெரிந்து கொள்ளவேண்டுமென்பதற்காக இங்கே
சீன மொழி மட்டும் என்ன பாவம் செய்தது,சீன மொழியை ஒரு மொழிப்பாடமாக படிக்க ஆரம்பிக்கலாம், சப்பான் நாட்டு மொழியும் தான், மற்ற எல்லா இடங்களுக்கும் செல்லும் தமிழர்களைவிட பிழைப்புக்காக கர்னாடகா செல்லும் தமிழர்கள் தான் மிக அதிகம், தொழில்நுட்ப வல்லுனர்களும் சரி, படிப்பறிவே இல்லாமல் கூலித்தொழிலாளியாக செல்பவர்களும் சரி, எனவே இந்த வாதத்தின் படி இந்தி படிப்பதை விட கன்னடம் படிப்பதே மிகச்சரியாக இருக்கும். ஆனால் அங்கே இந்தி பேசும் வட இந்தியர்களை விட மிக எளிதல் கன்னடம் பேசி கற்றுக்கொண்டு நெருக்கமாக இருப்பவர்கள் தமிழர்கள் தான், எனவே தேவையெனில் எந்த மொழியையும் கற்றுக்கொள்வது தவறே இல்லை.

ஒரு இனத்தின் அடையாளத்தை அழிக்க, ஒரு இனத்தின் மீது மேலாதிக்கம் செய்ய முதலில் அந்த மொழியை அழி, இது தான் ஈழத்திலே தமிழ்மக்களின் மீது தாக்குதல் தொடுக்கும்முன் மொழியின் மீது தாக்குதல் தொடுத்ததற்கு காரணம், யாழ்பாணத்திலே நூலகம் எரியூட்டப்பட்டதற்கு காரணம்.

மருத்துவர் இராமதாசு ஆங்கிலம் படிக்க கூடாது என்று கூறியமாதிரி எமக்கு தெரியவில்லை.

அய்யா , ஒரு மென்பொறியியல் நிறுவனம் பெங்களூரிலே கன்னடத்திலும், ஆங்கிலத்திலும் அதன் பெயர் பலகை உள்ளது, அதே மென்பொறியியல் நிறுவனம் சென்னையில் ஆங்கிலத்தில் மட்டும் பெயர்பலகை எழுதியிருந்தது, இதற்கு என்ன காரணம்?

//இங்குதான் அவர் குடும்பத்தினர் இருக்கிறார்களே, இங்கேயே தமிழ்வழிக் கல்வி படிக்க அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டியதுதானே!
//
ஏற்கனே இதே கேள்விக்கு டோண்டு அய்யாவிற்கு சொன்ன பதில்தான், ஒரு தந்தையும், தாத்தாவும் தமிழ் மொழிப்பற்றி பேசுகிறார்கள் என்பதற்காக சிறு குழந்தைகள் பெற்றோர்களை விட்டு பிரிந்திருக்க வேண்டுமென்பது சத்தியமாக எந்த விதத்தில் நியாயம்.

// அன்று இந்தி என்ற மாயத்தோற்றத்தைக் காட்டி ஓட்டுகளை விலைக்கு வாங்கியது போல் ராமதாசும் முயல்கின்றார் வேறு ஒன்றம் இல்லை//
அய்யா தமிழ் மொழி உணர்வை காட்டி இன்று ஒரு ஓட்டுகூட கூடுதலாக வாங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை, இது மருத்துவருக்கும் திருமாவுக்கு நிச்சயமாகத் தெரியும்.

இத்தனை நாட்கள் அன்புமணியின் குழந்தைகள் தமிழ் மொழிப்பள்ளியில் படிக்க வில்லை என ஜல்லியடித்தனர், தற்போது அதற்கான பதில் கிடைத்தவுடன் அடுத்து அன்புமணி குழந்தைகளில் பெயரை ஆரம்பித்துவிட்டனர், அந்த குழந்தைகளின் வயது 12,14 பெரியார் நாத்திகம் பேசுவதற்கு முன் சில கோவில்களில் தர்மகர்த்தாவாக இருந்தார், கருநாநிதி அவர்களின் பெயர் பிரபலமாகிவிட்டதால் பேராசிரியர் அன்பழகன் பெயர் மாற்றிக்கொண்டபோது அவர் பெயர் மாற்றிக்கொள்ளவில்லை.

இராமதாசு மீதும், கருநாநிதி மீதும் காழ்ப்புணர்ச்சி,வெறுப்பு இருந்தால் வேறு வழியில் அதை காண்பிக்கலாம், அதற்காக அவர்கள் கூறும் சில நல்ல கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல.

ஒரு வாதத்திற்காக கேட்கின்றேன், அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்பதற்காக அந்த கருத்தே தவறு என்பது எந்த விதத்தில் நியாயம்

//அவசர சிகிச்சைப் பிரிவில் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கவில்லை தமிழ் மொழி//
இப்படியே போய்கொண்டிருக்கும்போது அந்த நிலை வரும் நாள் வெகுதொலைவில் இல்லையெனத் தோன்றுகின்றது. அய்யா தமிழை படியுங்கள், ஆங்கிலத்தில் மட்டும் பெயர்பலகையா? தமிழிலும் பெயர்பலகை எழுதுங்கள், மிக எளிதாக அனைவரிடமும் ஊடுறுவும் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர்வையுங்கள் என்பதற்கு இத்தனை ஏச்சும்,பேச்சுமென்றால் மூச்சு திணறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை

 
மணிக்கு, எழுதியவர்: Blogger வெங்காயம்

குழலி மிக நீண்ட அருமையான விளக்கம் கொடுத்துவிட்டார்.

கருணாநிதி, மருத்துவர் இராமதாசு போன்றோர் குரல் கொடுத்த பின்னர்தான் தமிழ் மொழிக்கு ஆக்சிஜன் தேவைப்படவில்லை என்பது வரலாற்று உண்மை. இந்தி திணிப்பு என்பது தமிழை அழிக்க வேண்டும் என்பதன் மறைமுகத்திட்டம்தான். இது குறித்து விரிவாக ஒரு கட்டுரை எழுத எண்ணம் இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மலையாளம் என்ற ஒரு மொழியே உலகில் இல்லை. தமிழொடு சமஸ்கிருதம் கள்ளத்தொடர்பு கொண்டு பிறந்த குழந்தையே மலையாளம். இப்படித்தான் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளும் உருவானது.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger NambikkaiRAMA

இந்தி , தமிழ் இந்த பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு இன்றைய அரசியல் வாதிகளின் போலித்தனமான பேச்சை சற்று கவனியுங்கள். அதைத்தான் இந்த கட்டுரைச் சாடுகிறது என்று நினைக்கின்றேன்.

 
மணிக்கு, எழுதியவர்: Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar

குழலியின்´கருத்தில் முழுதும் உடன்படுகிறேன். ஓருவர் சொல்லும் கருத்து நல்லதாய் இருந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று கேள்வி கேட்டால் இழப்பு தமிழினத்திற்கு தான். தாய் மொழியை காக்கும் உணர்வு யாரும் சுட்டிக்காட்டாமலேயே வர வேண்டும். சுட்டிக்காடப்பட்ட பின்னரும் அதில் உள்ள உண்மையை உணராமல் கேலி பேசும் மனப்பங்கு வருந்தத்தக்கது

 
மணிக்கு, எழுதியவர்: Blogger கொழுவி

//கருணாநி, ராமதாஸ் ஆகியோருக்கு முன்பும் நிலைத்து நின்றது.இவர்களுக்குப் பின்னரும் நிலைத்து நிற்கும் தகுதி வாய்ந்தது.//

இதை நீங்கள் நம்புகிறீர்களா?
அப்பிடியானால் தமிழென்றால் என்ன?
இன்றைக்கு 50 வீதம் மட்டுமே தமிழ் இருக்கக்கூடியதாக (தமிழ்ச் சொற்கள் இருக்கக்கூடியதாக வேற்றுமொழிச் சொற்களைப் பாவித்தல்) பேசுதல் தமிழிற் பேசுதல் என்று சொல்லலாமா?
இதுகூட எத்தனை ஆண்டுக்கு?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

இந்திப்பாடம் படிக்க வேண்டும் அதுவும் துணைப்பாடம் தான் அதில் குறைந்த மதிப்பெண் பெற்றால் தோல்விகிடையாது. சரி இந்தி கட்டாய பாடமாக்கவில்லை முரசொலிமாறன் ஏன் இந்திபடித்தார் , ஜெயலலிதா மட்டும் என்ன அவரும் தான் ,கோவைக்கம்பன் இராமாயணம் படித்த கதையா? அவர் மகன் ஏன் இந்திபடித்தார்? மற்றவர்களை படிக்கக்கூடாது என கூறிய கருணாநிதி ஏன் படிக்கவைத்தார்.
ஆங்கிலம் படித்தவர்கள் ஆங்கிலம் பேசத்தெரியவில்லை என்பது
படித்தவர்களை முட்டாலாக்கும்பேச்சு , முழுமையாக பேசத்தெரியவில்லை என்றாலும் ஓரளவுக்காவது தெரிந்து கொள்கிறார்களே எல்லோரும் வேட்டிதான் கட்டவேண்டும் என கூறுபவர்கள் தானும் அவ்வாறு நடந்து காட்டவேண்டும் தன்னாலே முடியவிட்டால் ஊருக்கு உபதேசம் செய்ய என்ன யோக்கிதை இருக்கு ;தான் செய்ய முடியாதாம் மற்றவர்கள் கண்டிப்பாக செய்யவேண்டுமாம் இது என்ன செயல். இவரது உடன் பிறப்புகள் திருநீரு வைத்துக்கொள்ளக் கூடாது குங்கும் வைத்துக்கொள்ளக்கூடாது ஆனால் இவர் முஸ்லீம் நிகழ்சிகளுக்குச் செல்வார் அதுதான் இவரது நாத்திகம். சுருங்கச்சொல்லின் இன்றைய அரசியல் வாதிகள் நம்மையெல்லாம் மடையர்களாக ஆக்கி நாட்டின் வளர்ச்சிக்கு ஒன்றும் செய்யாமல் தனக்கு ஆதாயம் கிடைக்குமா என நாக்கை தொங்க விட்டு அலைகிறார்கள்.
ஒரு நல்ல திட்டம் கொண்டு வந்தால் தனக்கு அதில் என்ன லாபம் என கணக்கு போட்டு பார்ப்பார்களே தவிர மக்களுக்கு என்ன கிடைக்கும் என பார்ப்பது கிடையாது. ஒரு முறை நான் கேள்விப்பட்டேன் இயந்திரம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறார் ஆர்.வெங்ட்ராமன். அதற்கு அந்த நிருவணம் கமிசன் 20 விழுகாடு கொடுக்குமாம். காமராஜரிடம் வெங்கட்ராமன், "ஐயா நமக்கு 20 விழுக்காடு கமிசனாக அந்த கம்பெனி கொடுக்கிறதாம் என்ன சொல்கிறீர்கள்" என கேட்டதற்கு காமராஜர்,"அந்த கமிசனுக்கும் இரண்டு இயந்திரம் வாங்கிடுங்களேன்னேன்" என்றார் அப்படிப்பட்ட நல்லவர்கள் வாழ்ந்த நாடு நம்நாடு.
இன்னொரு செய்தி தெரியுமா உங்களுக்கு அன்று இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களுக் தமிழக அரசு மொழிப்போர் தியாகி பென்சன் வழங்குகிறது இன்றும். சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்குவது போல்.
கருணாநிதி சொல்லுவார் ,"கண்ணகிக்கு சிலை, காமராஜருக்கு சிலை, சாலைக்கு அவர்பெயர், வள்ளுவர் கோட்டம். பெரியார் வெங்காயம் போல பேசுவார் நாட்டின் முன்னேற்த்திற்கு என்ன? அது பூஜ்யம் தான்.
நான் என்ன சொல்கிறேன் தமிழனை முன்னேற்ற என்ன செய்துள்ளாய் எத்தனை தொழிற்சாலை, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு என்ன? தமிழன் முன்னேறினால் தான் தமிழ் மொழி வளரும். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எங்கள் குடும்பத்தில் மட்டும் இல்லை. என்ன நியாயம் இது ? சற்று யோசித்துப்பாருங்கள்
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே சொந்த நாட்டிலே.

மன்னிக்கவும் அதிகமாக எழுதிவிட்டேன் என்று நினைக்கிறேன்

என்னார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நான் தவறை தவறு என சொல்லக்கூடியவன் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி திராவிட ஆட்சியில் இல்லை. நான் தினமலரில் வந்த செய்தியை எடுத்துக்காட்டினேன் அதில் ஒன்றும் தவறு இல்லையே தினமலரை நான்உங்களை படிக்கச் சொல்லவில்லையே யாரையும் படிக்கச்சொல்லவில்லையே. என்னைப் போல் பலர் இருப்பதாகச்சொன்னீர்கள் நன்றி.

என்னார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger நல்லவன்

good
chinnathambi

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ஜோ/Joe

//இந்தி , தமிழ் இந்த பிரச்சனையை ஒதுக்கி வைத்துவிட்டு இன்றைய அரசியல் வாதிகளின் போலித்தனமான பேச்சை சற்று கவனியுங்கள். அதைத்தான் இந்த கட்டுரைச் சாடுகிறது என்று நினைக்கின்றேன்//

அரசியல் வாதிகளின் போலித்தனத்தை சாடுகிறேன் பேர்வழி என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தாய்மொழி தேவையையும் ,அதை அழியாமல் காக்க வேண்டிய கடமையையும் காழ்ப்புணர்ச்சி கொண்டு பார்ப்பதே இக்கட்டுரையிம் நோக்கம் என்று நினைக்கிறேன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger dondu(#11168674346665545885)

//இங்குதான் அவர் குடும்பத்தினர் இருக்கிறார்களே, இங்கேயே தமிழ்வழிக் கல்வி படிக்க அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டியதுதானே!
//
ஏற்கனே இதே கேள்விக்கு டோண்டு அய்யாவிற்கு சொன்ன பதில்தான், ஒரு தந்தையும், தாத்தாவும் தமிழ் மொழிப்பற்றி பேசுகிறார்கள் என்பதற்காக சிறு குழந்தைகள் பெற்றோர்களை விட்டு பிரிந்திருக்க வேண்டுமென்பது சத்தியமாக எந்த விதத்தில் நியாயம்.
அப்படியா குழலி அவர்களே, அன்புமணி கொடைக்கானல் பள்ளியில் படித்தாராமே, அப்போது தந்தையைப் பிரிந்து ஹாஸ்டலில்தானே படித்தார்? இங்கு பேத்திகள் தாத்தா பாட்டியிடம் இருந்து படிப்பது என்ன பாதுகாப்புக் குறைவு?

"ஒரு வாதத்திற்காக கேட்கின்றேன், அரசியல்வாதிகள் சொல்கிறார்கள் என்பதற்காக அந்த கருத்தே தவறு என்பது எந்த விதத்தில் நியாயம்."
அதே வாதத்திற்காகக் கூறுகிறேன். இவ்வாறு தான் கடைபிடிக்காததை மற்றவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறுவானேன், பிரஸ்மீட்டில் இதைப்பற்றிக் கேள்வி கேட்டால் நிருபரை "அன்பாக" மிரட்டுவானேன்? இதில் அவர்கள் சொன்ன "நல்ல" கருத்துகளுக்குத்தானே பாதிப்பு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

"நம் மக்கள் எதையும் சீக்கிரம் மறந்தவிடுவார்கள்", என துக்ளக் சோ சொன்னது தங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன். எதை வேண்டுமானாலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் எங்கு வேண்டுமானாலும் பேசலாம் சுதந்திர நாடல்லவா?

என்னார்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger dondu(#11168674346665545885)

""நம் மக்கள் எதையும் சீக்கிரம் மறந்தவிடுவார்கள்", என துக்ளக் சோ சொன்னது தங்களுக்கு ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன். எதை வேண்டுமானாலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் எங்கு வேண்டுமானாலும் பேசலாம் சுதந்திர நாடல்லவா?"
அப்படியே நம் மாதிரி யாராவது நினைவு வைத்துக்கொண்டு கேட்டால் அவ்வாறு பேசிய அரசியல்வியாதிகளுக்கு சப்பைகட்டு கட்ட பல நன்றி மறவா தொண்டர்கள் இருக்கிறார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

ஆமாம் இதற்கு நாம் என்ன செய்யமுடியும்? நடப்பதெல்லாம் நண்மைக்கே


நன்றி

என்னார்

 

Post a Comment

<< முகப்பு