அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வேங்கையின் வேந்தன

சரி விசயாழய சோழனைப் பற்றிப் பேசுகிறோமே! அவனது முன்னோர்கள் யார்? சூரிய குலத்தவன் என சொல்லுகிறோமே எப்படி இப்பொது அதைப் பார்ப்போமா?

எல்லா வரலாற்றுக்கும் முதன்மையானவர் திருமால். அவரது உந்தியினின்றும் தோன்றியது செந்தாமரை மலர் , அதிலிருந்து நான்முகன் தோன்றினார், அவனிடமிருந்து பெருமைக் குரிய மரீசி என்னும் அரசன் தோன்றினார். உயிர்களிடத்தில் அன்பு மிகுந்த மரீசி காசிபனை மகனாகப் பெற்றான். அவன் ஒளிக் கதிர்களையுடைய சூரியனைப் பெற்றான்.


மனு என்பவன் சூரயனுக்கு மகனாகப் பிறந்து உலகினைக் காப்பாற்றினான். அவன் தன்னுடைய சிறந்த மகனை ஒரு பசுவின் கன்றுக்குச் சமம் என்று கருதினான். எல்லாரும் வியப்புறும் படி அவனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதி வழங்கினான். இத்தகைய மனு நீதிச் சோழனுக்கு மகன் என்று சொல்லும்படியாக இக்குவாகு என்பவன் பிறந்தான்.


இக்குவாகுவுக்கு மகனாக விகுட்சி என்பவன்பிறந்தான், இவனது மகன் ககுத்தன், ககுத்தன் மிகவும் வலிமையுடையவன்; பகைவரை வெல்லுமளவுக்குப் போர் புரியக் கூடியவன். இவன் மிகுந்த ஆற்றலையுடைய செயல் பல புரிந்து, ஆயிரங் கண்களை யுடைய யானையை வாகனமாக் கொண்டான். இந்திரன் ஐராவதம் என்னும் யானையில் ஊர்ந்து வெற்றி கொண்டது போல, இவனும் ஒரு களிற்றில் ஊர்ந்து, தன்னை எதிர்த்துப் போர் புரிந்த அசுரர்களை எல்லாம் வென்று வெற்றிக் கொடி நாட்டினான்.


இயல்பிலேயே கோபத்தைக் கொண்டது புலி, சாதுவான தன்மையுடையது மான். புலிக்கு விருப்பமான உணவு மானிறைச்சி. அவ்வாறு இருந்தும் அவ்விரண்டும் ஒரே துறையில் ஒன்றா இருந்து நீர் பருகும்படி பசி, பகை முதலியவற்றைப் போக்கிய வலிமையுடையவன் மாந்தாதா என்னும் சோழ மன்னன். அவன் உலகத்துள்ள உயிர்களிடத்தில் செலுத்திய அருளின் தன்மையால் ஆட்சி புரிந்தான். முசுகுந்தன் என்ற மன்னன் போர்க்களத்தில் புகுந்து இமையவர் உலகம் முழுவதையும் எவ்விதத் தீங்குமின்றிக் காவல் புரிந்து அரசோச்சிக் காப்பற்றிய புகழ்த் தன்மையை உடையவன் ஆவன்.


பிருதுலாட்சன் என்னும் சோழ மன்னன் திருப்பாற்கடலை மந்தர மலையை இட்டுக் கலக்கினான். அதிலிருந்து இனிய சாவாமருந்தாகிய அமுதம் உண்டாயிற்று. அதனைத் தேவர்கள் உண்ணுமாறு கொடுத்தான். சிபி என்ற சோழ மன்னன் ஒரு புறா அடைந்த துன்பத்தை நீக்குவதற்காக ஒப்பற்ற தராசுத் தட்டில் தன் உடல் சதையை அறுத்து வைத்தான். அது புறாவின் எடைக்குச் சமமாக ஆகவில்லை. அதனால், அவனாகவே அந்தத் தட்டில் ஏறி அமர்ந்தான், அப்பொழுதுதான் எடை சரியாயிற்று தராசில் சிபிச் சக்கரவர்த்தியின் உடல் நிறுக்கப்பட்டது போல உலக மக்களின் உள்ளமாகிய தராசில் சிபியின் புகழ்உடம்பும் அளந்து அறியப்பட்டது.


கலிங்கத்து பரணியிலிருந்து

தொடரும்.........



2மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

ராமனின் இஷ்வாகு குலத்தவர் என அறியப்படும் சோழர்கள் சைவ சமயத்தை தழுவியது எப்படி?ஆதித்த சோழன் கூட ஆதித்த கோதண்டராம சோழன் என்றே பெயர் சூட்டியிருந்தான் அன்றோ?

 
மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

கலிங்கத்துப் பரணி அவ்வாறு பகர்கின்றது
//ஆதித்த சோழன் கூட ஆதித்த கோதண்டராம சோழன் என்றே பெயர் சூட்டியிருந்தான் //
பொன்னியின் செல்வனில் வருகிறதா நான் இன்னமும் முழுதும் படிக்க வில்லை படித்துக்கொண்டிருக்கிறேன்.
ராமனும் சூரிய குலத்தவன் சோழனும் சூரிய குலத்தவன்.

பொன்னியின் செல்வனில் இவ்வாறு வாருகிறது
"சூரிய வம்சத்திலே பிறந்த மனுமாந்தாதா. அந்த வம்சத்திலே புறாவுக்காக உடலை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி, சிபிச் சக்கரவர்த்திக்குப் பின் தோன்றிய இராஜ கேசரி, அவருடைய புதல்வர் பரகேசரி, பசுவுக்கு நியாயம் வழங்குவதற்காகப் புதல்வனைப் பலி கொடுத்த மனுநீதிச் சோழன், இமயமலையில் புலி இலச்சினை பொறித்த கரிகால் பெருவளத்தான், நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், குராப்பள்ளி துஞ்சிய கிள்ளிவளவன், எழுபத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த கோப்பெருஞ் சோழர், இவர்கள் வழிவழித் தோன்றிய தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த பழையாறை விஜயாலயச் சோழர், அவருடைய குமாரர் ஸஸ்யமலையிலிருந்து புகார் நகரம் வரையில் காவேரி நதி தீரத்தில் எண்பத்திரண்டு சிவாலயம் எடுப்பித்த ஆதித்த சோழர், அவருடைய குமாரர் மதுரையும் ஈழமும் கொண்டு தில்லைச் சிதம்பரத்தில் பொன் மண்டபம் கட்டிய பராந்தகச் சோழ சக்கரவர்த்தி, அவருடைய குமாரர் இரட்டை மண்டலத்துக் கன்னர தேவன் படைகளை முறியடித்து ஆற்றூர்த் துஞ்சிய வீராதி வீரராகிய அரிஞ்சய தேவர், அவருடைய குமாரர் ஈழம் முதல் சீட்புலி நாடு வரை ஒரு குடை நிழலில் ஆளும் பழையாறைப் பராந்தக சுந்தர சோழ சக்கரவர்த்தி, அவருடைய மூத்த குமாரர் - கோப்பெரு மகனார் - வடதிசை மாதண்ட நாயகர் - யுவராஜ சக்கரவர்த்தி - வீரபாண்டியன் தலை கொண்ட ஆதித்த கரிகால சோழர் விஜயம் செய்திருக்கிறார்! பராக்! பராக்!" என்று அக்கட்டியங் கூறுவோன் கூறி முடித்ததும் மழை பெய்து இடி இடித்து ஓய்ந்தது போலிருந்தது.

 

Post a Comment

<< முகப்பு